நீண்ட வாழ்நாளையும் தேவாலயச் சேவையில் ஈடுபட்ட தருணங்களையும் பற்றி பேசியபோது 71 வயது ரோஸ்லின் ஆண்டனி சாமியின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
“நான் கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிறிஸ்து அரசர் ஆலயத் தமிழ் அமைப்பிலும் தமிழ் கத்தோலிக்கச் சமூகத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறேன். எங்களைப் போன்ற மூத்த முன்னோடிகள் பலர் இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும், எஞ்சியிருப்போர் மறக்கப்படவில்லை, தொடர்ந்து சிறப்பிக்கப்படுகின்றனர்,” என்றார் அந்த இல்லத்தரசி.
இவரைப் போல, வாழ்நாள் முழுதும் உழைத்துக் குடும்பத்தினரையும் சமூகத்தினரையும் வளர்க்கும் முதியோரைச் சிறப்பித்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தோ பாயோவில் உள்ள உயிர்த்த கிறிஸ்துவின் ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
‘ஆக்ட்ஸ்’ (ACTS) எனப்படும் சிங்கப்பூர் உயர் மறைமாவட்டத் தமிழ் ஆணையத்தின் ஏற்பாட்டில் நடந்த ‘முதியோர் தினக் கொண்டாட்டம் 2026’ சிறப்பு நிகழ்ச்சியில் தீவின் பல்வேறு கத்தோலிக்கத் தேவாலயங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மூத்தோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
‘ஆக்ட்ஸ்’ குழுவின் ஆன்மிக இயக்குநர் அருள்தந்தை அருண் பெல்லார்மீனின் தலைமையில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியுடன் விழா தொடங்கியது. திருப்பலியில் மூத்தோர் அனைவருக்கும் ஆசீ (sacraments) வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், சிங்கப்பூர்த் தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளின் தியாகங்களையும் சேவைகளையும் நினைவுகூரும் வகையில் சிறப்பு நிழற்படத் தொகுப்பு திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மூத்தோரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பழைய நினைவுகளை மீட்கும் பாடல்கள், நடனங்கள் ஆகியவை இடம்பெற்றன.
உயிர்த்த கிறிஸ்துவின் ஆலயத் தமிழ் பாடகர் குழுவினர் வழங்கிய நாடகம், ‘சுறுசுறுப்பான முதுமைப்பருவம்’ (Active Aging), அரசின் சலுகைகள் ஆகியவற்றுடன் உடல்நலப் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை நகைச்சுவையோடு எடுத்துரைத்து, அனைவரது பாராட்டையும் பெற்றது.
நன்றி நவிலும் உள்ளங்கள்
முதியோர் தனிமையில் வாடக்கூடாது என்று நிகழ்ச்சி குறித்து பேசிய அருள்தந்தை அருண் பெல்லார்மீன், அவர்களுக்கு இந்தத் தமிழ்ச் சமூகம் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
30-40 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த நிதியிலும் உழைப்பிலும் தமிழ்த் திருப்பலியைத் தொடங்கிய முன்னோடிகளைச் சிறப்பிக்கும் கடமை தங்களுக்கு இருப்பதாக உயர் மறைமாவட்டத் தமிழ் ஆணைய ஒருங்கிணைப்பாளர் வெரோனிக்கா ஜோசப் கூறினார்.
“நமது சமுதாயத்தில் வேர்களையும் விழுதுகளையும் என்றைக்கும் மறக்கக்கூடாது எனும் நம்பிக்கையைத் தருவதே இதன் நோக்கம். மூத்தோரின் அறிவுரையைக் கேட்டு நடக்கும்போது சமுதாயத்தை நல்வழியில் கட்டியெழுப்ப முடியும்,” என்று அவர் சொன்னார்.
வாழ்நாள் முழுதும் தன்னலம் பாராது முதியோர் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செயல்பட வேண்டும் என்று ‘ஆக்ட்ஸ்’ குழுவின் செயலாளர் பெர்னடெட் அடைக்கலசாமி கேட்டுக்கொண்டார்.
“சமுதாயத்திற்கு வயதாகும்போது மூத்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அவர்களை நமது சிறகுகளுக்குள் தாங்கி, அன்பும் அரவணைப்பும் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மூத்தோர் தினத்தில் ஸும்பா, பாலிவுட் நடனம், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று தேவாலயத்தின் இந்தியக் கத்தோலிக இயக்கத்தின் தலைவராகவும் உள்ள திரு அடைக்கலசாமி குறிப்பிட்டார்.
மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையில் சிற்றாலயப் பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் 65 வயதான ஜேனட் இராஜகோபால், இந்நிகழ்ச்சி தம்மைப் பெரிதும் மகிழ்வித்ததாகக் கூறினார்.
“இறைவழிபாட்டோடு நின்றுவிடாமல், பழைய நினைவுகளை மீட்கும் பாடல்கள், நடனம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்திருந்ததால் விழா மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒழுங்கமைத்து, மூத்தோர்களாகிய எங்களை ஒன்றுதிரட்டிச் சிறப்பித்த ஏற்பாட்டாளர்களின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது,” என்று அவர் கூறினார்.

