‘போட்ஸ்’ (POTS) எனப்படும் ரத்த சுழற்சிக் குறைபாடு, ஆஸ்துமா ஆகிய மருத்துவப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார், 21 வயது வசந்தி ராஜா.
எனினும், காவல்துறையில் சேரும் நெடுங்கால ஆசையை இறுகப் பற்றிக்கொள்கிறார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான வசந்தி.
தன் உயர்நிலைப் பள்ளியில் என்பிசிசி இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்த வசந்தி, கற்றல் பயணம் ஒன்றின்வழி குற்றச் சம்பவ இடத்தில் தடயங்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டார். அப்பொழுது அத்துறைமீது அவருக்கு மோகம் ஏற்பட்டது.
கல்வியில் சிறந்து விளங்கியதற்காகக் ‘கிளப் ரெயின்போ’ அறநிறுவனம் ஒரு முறை தரும் $450 ரொக்கத்தை அவர் பெற்றார்.
அவருடைய தாயார் 56 வயது சாந்தி சுந்தரேசன், 15 ஆண்டுகளாக நான்கு பிள்ளைகளையும் தனி ஒருவராக வளர்த்துள்ளார். அவர் நிர்வாக வேலை செய்கிறார். “என் சம்பளமே மத்திய சேமநிதிக் கழிவுக்குப் பின் $1,400தான்,” என்றார். ஐவர் கொண்ட குடும்பம் ஈரறை வாடகை வீட்டில் வசிக்கிறது.
இந்நிலையில் கல்வித் தேவைகளுக்கு இந்நிதி உதவிபுரியும் என்றார் வசந்தி. “வாகன ஓட்டுநர் உரிமம், இன்னும் சிறந்த மடிக்கணினி போன்றவற்றை வாங்குவதற்கு இந்நிதியை நான் சேமிக்க விரும்புகிறேன்.
“பாடப் புத்தகங்களை வாங்குவதற்கும் பள்ளிக்கு வந்து செல்லும் போக்குவரத்துச் செலவுகளுக்கும் இந்நிதி உதவும்,” என்றார் வசந்தி.
2016 முதல் ‘கிளப் ரெய்ன்போ’விலிருந்து பயன்பெற்று வருகிறார் வசந்தி.
தொடர்புடைய செய்திகள்
தம் மருத்துவப் பிரச்சினைகளைத் தாண்டியும் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு இக்கல்விநிதி நம்பிக்கையொளியைத் தருகிறது.
தொடக்கப்பள்ளிப் பருவத்திலிருந்து அவ்வப்போது மயக்கமடைந்து விழுந்துள்ள வசந்திக்கு, ஆஸ்துமா இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இரு மாதங்கள் முன்பு அவருக்கு ‘போட்ஸ்’ எனப்படும் ரத்த சுழற்சிக் குறைபாடு இருப்பதாகவும் தெரியவந்தது. அதனால் அவர் உட்காரும்போதோ எழுந்து நிற்கும்போதோ அவருடைய இதயத் துடிப்பில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
தாயாருக்கும் மருத்துவப் பிரச்சினைகள் உள்ளன.
குடும்ப நிதிச் சூழலால் தாயாருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. அண்மையில் அவர் விழுந்ததால் பக்கவாதமும் சற்று மறதியும் ஏற்பட்டது. “அவர் அதிக மன உளைச்சல் அடைந்தால் மூளைக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர்,” என்றார் வசந்தியின் தங்கை லேகா.
இந்நிலையில், ‘கிளப் ரெய்ன்போ’ பெரும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாகக் கூறினார் திருவாட்டி சாந்தி.
ஆனால் வசந்தி இவ்வாண்டு 21 வயதானபிறகு கிளப் ரெய்ன்போ திட்டங்கள் மூலம் உதவிக்குத் தகுதி பெறமாட்டார். அதனால், அடுத்து என்ன செய்வது எனக் கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறினார் திருவாட்டி சாந்தி.
“குடும்ப நிதி நிலைமையைச் சீர்படுத்த விரைவில் வேலைசெய்யத் தொடங்க விரும்புகிறோம்,” என்றனர் வசந்தியும் லேகாவும்.
கிளப் ரெய்ன்போ, நாள்பட்ட நோயால் பாதிப்படைந்த 1,200க்கும் மேற்பட்ட சிறுவர்களையும் இளையரையும் ஆதரிக்கிறது. “21 வயதை எட்டிய பிறகு அவர்கள் நம் திட்டங்களில் இணையாவிட்டாலும், அதற்கு முன்பே நாம் அவர்களைத் தயார்ப்படுத்தி உதவுகிறோம். நம் தொடர்புகள்வழி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தேடித் தருகிறோம்,” என்றார் ‘கிளப் ரெய்ன்போ’வின் கெளரவச் செயலாளர் ரா ரமணன், 53.
“ஆண்டுதோறும் பல்லாண்டுகளாகக் ‘கிளப் ரெய்ன்போ’ தம் பயனாளிகளுக்காக ஒரு சிறப்பு முகாமையும் கப்பல் பயணத்தையும் ஏற்பாடு செய்து வருகிறது. “பல சிறுவர்களும் தம் மருத்துவப் பிரச்சினைகளால் சாதாரண முகாம்களுக்கும் கப்பல் பயணங்களுக்கும் செல்ல முடிவதில்லை.
“கப்பல் பயணம் பயனாளிகளுக்கு இலவசம். பெற்றோருக்கும் சலுகை வழங்குகிறோம். கப்பல் பயணத்திலும் முகாமிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு தொண்டூழியர் நண்பராகவும் சேவையாற்றுவார்,” என்றார் திரு ரமணன்.
மருத்துவ சமூகப் பணியாளர் பரிந்துரைத்தபின்பே ஒருவர் கிளப் ரெய்ன்போவில் இணையலாம்.
அன்பின் அகராதியில் சிறப்புத் தேவைகள் பொருட்டன்று
இசையிலும் நடனத்திலும் பெரும் நாட்டமும் திறனும் கொண்டவர் 14 வயது அபேசக்திவேல் முத்துக்குமரன், 14.
இந்த இளம் கலைஞருக்கு ஆட்டிசம் எனப்படும் சிறப்புத் தேவை இருப்பினும் அவர் தம் ஆற்றல்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே வருகிறார். அவற்றை மக்கள் முன்னிலையில் படைக்க மேடை அமைத்துத் தந்தது ஜூன் 28ஆம் தேதி கிளப் ரெய்ன்போ நடத்திய ‘டிரீம்சீட்ஸ்’ கலை விழா.
‘கேட்வே தியேட்டரில்’ நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டார், கஹோன், யுகுலேலே, பாடல், ஹிப்ஹாப், கே-பாப் என இசை, நடன அங்கங்களை அவர் படைத்தார்.
அதைக் கண்டு மனமகிழ்ந்து கரகோஷம் எழுப்பிய பார்வையாளர்களில் ஒருவர் அவருடைய பயணத்தில் தனிச் சிறப்புமிக்க பங்கை ஆற்றியுள்ள தாயார் கலைச்செல்வி சடையப்பன், 47.
“அவர் குழந்தையாக இருக்கும்போதே அவருக்கு ஆட்டிசம் இருப்பதை நான் உணர்ந்தேன்,” என்றார் கலைச்செல்வி.
அவரை வளர்த்து ஆளாக்கும் சவாலைத் தனி ஒருவராக ஏற்றார் கலைச்செல்வி.
“நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரே நேரம் மூன்று, நான்கு வேலைகளைச் செய்தேன். கிராப் ஓட்டுநராக இருந்தேன். ஃபுட்பாண்டாவில் உணவு விநியோகித்தேன். எனக்கு உணவு இல்லாவிட்டாலும் என் மகனுக்காவது உணவு இருக்க வேண்டும் எனச் சில வேளைகள் சாப்பிடாமல்கூட இருந்தேன்,” என்றார் கலைச்செல்வி.
பாடும்போது மகன் நிதானமடைவதைக் கவனித்த கலைச்செல்வி, மகனைப் பல இசை வகுப்புகளில் சேர்த்தார். “ஆனால் அவரைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் ஒரு இசைக் குழு அவரை வெளியேற்றியது,” எனப் பகிர்ந்தார் கலைச்செல்வி.
மகனுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்தும் மற்ற பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் ஆசையையும் அவர் கைவிட்டார். “என் மகனைப் பார்த்துக்கொள்வதை அவருடைய சகோதரர்மீது பாரமாக நான் சுமத்த விரும்பவில்லை,” என்றார் கலைச்செல்வி.
‘கிளப் ரெய்ன்போ’வழி ஆதரவு
நிதிச் சூழல் கடினமடைந்தபோது ‘கிளப் ரெய்ன்போ’வழி கிடைத்த என்டியுசி பற்றுச்சீட்டுகள் பெரிதும் உதவின. பயனாளிகளின் பிறந்தநாளன்று, கிளப் ரெய்ன்போ தவறாமல் கேக் ஒன்றை அனுப்பிவைக்கிறது.
கிளப் ரெய்ன்போ நடத்தும் பராமரிப்பாளர் ஆதரவுத் திட்டங்கள்மூலம் தம் சவால்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடிவதாகவும் கூறினார் கலைச்செல்வி.
“மாதாமாதம் பிள்ளைகளை அறிவியல் நிலையம், விலங்கியல் தோட்டம், போன்ற இடங்களுக்குக் கிளப் ரெய்ன்போ அழைத்துச் செல்கிறது. பொம்மைகள் செய்வது போன்ற நடவடிக்கைகளையும் நடத்துகிறது. சில சமயம் எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் இச்சேவைகள் பயனளிக்கின்றன,” என்றார் அவர்.
மகன் சொந்த காலில் நிற்க வேண்டும்
தற்போது உதவி மேலாளராகப் பணியாற்றும் கலைச்செல்வி படிப்படியாக முன்னேறி வீடு வாங்கியுள்ளார். எனினும், மகனின் எதிர்காலம்பற்றிய கவலை தொடர்கிறது.
“சிங்கப்பூரில் ஆட்டிசமிலேயே உயர் செயல்பாட்டுள்ள சிறுவர்களுக்கு அதிகமான வளங்கள் உள்ளன. ஆனால், என் மகன் போன்றோருக்கு இன்னும் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது,” என்றார் கலைச்செல்வி.
“நான் இல்லாதபோது அவரை யார் பார்த்துக்கொள்வார்? நான் மட்டுமல்ல, பல பெற்றோருக்கும் இந்தக் கவலை உண்டு,” என்றார் கலைச்செல்வி.
அபேசக்திவேலுக்கு அவ்வப்போது வலிப்பு (epilepsy) வருவதால் அவரைத் தனியாக விடவும் அஞ்சுகிறார் கலைச்செல்வி.
மகனைச் செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் நிலையத்தில் சேர்த்துள்ளார் கலைச்செல்வி. அங்கு அவர் 18 வயதுவரை கல்வி கற்கலாம்.
பள்ளியாசிரியர்கள் அபேசக்திவேலைத் தாமாகப் பேருந்தில் செல்லக் கற்பித்து வருகின்றனர். “எனினும், தொலைந்துபோனால் உதவி கேட்க அவருக்கு இன்னும் தெரியவில்லை,” என்றார் கலைச்செல்வி. அடுத்தபடியாக, அவரை உணவு நிலையத்தில் உணவு வாங்கக் கற்ற்கொடுக்க உள்ளார் கலைச்செல்வி.
“வீட்டில் சோறாக்க கற்றுக் கொடுத்துவிட்டேன். வெங்காயம் வெட்டுவது, இஞ்சி பூண்டு அரைப்பதுகூட அழகாகச் செய்வார். குறிப்பைப் பார்த்து பேக்கிங் செய்கிறார்,” என்றார் கலைச்செல்வி. இந்நிலையை அடைய மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.
“தாமாகப் பல் விளக்க அவருக்குக் கற்பிக்கக்கூட எனக்கு ஐந்து ஆண்டுகள் எடுத்தன. அதுவரை நாம் அவர்களுக்கு உந்துதல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறு வெற்றியும் நமக்குப் பெரும் மைல்கல்,” என்றார் கலைச்செல்வி.
கலைச்செல்வியின் தந்தைக்கு மறதிநோய் உள்ளது. அதனால் மகனையும் பெற்றோரையும் பராமரிக்கும் இரு பொறுப்புகளையும் கையாண்டு வருகிறார் கலைச்செல்வி.
சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் ஆசை
மகனுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்ததும் தன்னைப் போன்ற பெற்றோருக்கு உதவ ‘ஸ்பீச் அகேடமி ஏஷியா’வில் ‘ரெய்ன்போ நண்பர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் கலைச்செல்வி. தம் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது புதிதாகத் தெரிந்த பெற்றோருக்கு ஆலோசனையும் ஆதரவும் இத்திட்டம் வழங்குகிறது.
“பல நிலையங்களும் சிறப்புத் தேவைப் பிள்ளைகளை ஏற்பதில்லை. அதனால்தான் இதைத் தொடங்க விரும்பினேன்,” என்றார் கலைச்செல்வி.
நிகரற்ற ஆற்றல் படைத்திருப்பினும் பயணம் எளிதன்று
அபேசக்திவேலின் தோழர் 17 வயது கரன் கேல் ஈஸ்வரனும் அவருடைய தாயாரும் அபேசக்திவேலின் படைப்பைக் காண வந்திருந்தனர். கரனும் ‘கிளப் ரெய்ன்போ’வின் பள்ளி விடுமுறை நடவடிக்கைகளில் வழக்கமாகப் பங்கேற்பவர்.
கரனுக்கு அரிய ஆற்றல் உள்ளது. அவரால் ரயிலின் சத்தத்திலிருந்தே அது எந்த ரயில் வகையெனச் சொல்ல முடிகிறது. “அவருக்குச் சிறுவயதிலிருந்தே ரயில், பேருந்துகள்மீது பெரும் நாட்டம் இருந்தது,” என்றார் அவருடைய தாயார் சோனியா கோர், 46.
கரனுக்கு ஆட்டிசம் உள்ளது எனக் கேள்விப்படும் யாவரும் ஆச்சரியப்படுவர். ஏனெனில் அவர் பேசும்போது அதற்கான அறிகுறிகளையே காண முடிவதில்லை. சராசரி இளையர் போலவே இருக்கிறார்.
இந்நிலையை அவர் அடைய தாம் அரும்பாடுபட்டதாகக் கூறினார் சோனியா.
“சிறுவயதில் கரன் தன் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துவார். ஒரு முறை அவர் வீட்டிலிருந்து கீழே தன் பொம்மை கார்களைத் தூக்கிப் போட்டார். அப்போது காவல்துறையினரை யாரோ அழைத்தனர்,” என்பதை நினைவுகூர்ந்தார் சோனியா.
“குழந்தையாக இருந்தபோது அவர் படுக்கையறையில் தூங்கவே மாட்டார். நடுவீட்டில், தன்னை சுற்றிப் பொம்மை கார்களை வரிசைப்படுத்தியபின் தூங்குவார். அவர் காலையில் எழும்போது தன்னைச் சுற்றி அந்த கார்கள் இல்லையென்றால் அவருக்குக் கோபம் வரும்,” என்றார் சோனியா.
ஒருமுறை கோபம் வந்தால் இரண்டு, மூன்று மணி நேரத்துக்குப் பின்பே அவர் நிதானமடைவார் என்றார் சோனியா. அதனால் கரனை அவர் நிறைய சிகிச்சைகளுக்கு அழைத்துச் சென்றார். மருந்தும் உட்கொள்ள வேண்டியிருந்தது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே மருந்துகளை நிறுத்தினார்.
பாலர்பள்ளிப் பருவத்தில் ரெய்ன்போ நிலையப் பள்ளியில் கரன் சேர்க்கப்பட்டபோது, அங்கு அவரைச் சமாளிக்க முடியாமல் அவர் வெளியாகினார். ஓராண்டு முழுவதும் தாயார் அவருக்காகப் பள்ளி தேடி அலைந்தார்.
“என் முயற்சிகளைக் கைவிடுவதைப் பற்றிச் சிந்தித்த நாள்கள் இருந்தன. சில நாள்கள் நான் தனியாக அழுதேன். ஏன் எனக்கு இப்படி நடக்கிறது என என்னையே கேட்பேன். ஆனால் அவர் ஒவ்வொரு மைல்கல்லையும் கடக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டேன்,” என்றார் சோனியா.
கலைச்செல்வி ‘ஸ்பீச் அகேடமி’யில் நடத்திய பாடங்கள் கரனுக்கு உதவியாக இருந்தன.
தற்போது பாத்லைட் பள்ளியில் படிப்பை முடிக்கும் கரன், அடுத்தது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ரயில் போக்குவரத்துத் துறையில் பயிலவுள்ளார். “என் பெரிய பயம் என்னவென்றால் பாத்லைட் பள்ளிக்குப் பிறகு அவர் எப்படிப் புதியதாக நண்பர்களைச் சேர்த்துகொள்வார், புதிய சூழலைச் சமாளிப்பார் என்பதே,” என்றார் சோனியா.
“சிங்கப்பூரில் மக்கள் படித்தவர்கள். ஆனால் சிறப்புத் தேவைகள், ஆட்டிசம் பற்றி அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. ஆட்டிசம் என்ன என்பது பற்றிய புரிதலே பலருக்கு இல்லை,” என்றார் சோனியா.
“சிறப்புத் தேவை உள்ளவர்களும் நம்மைப் போன்றவர்களே. அவர்களைச் சமூகத்தில் இன்னும் ஒருங்கிணைக்க வேண்டும்,” என்றார் அவர்.
“என் தாயார் இறைவன் எனக்கு அளித்த வரம். அவர் இல்லாவிட்டால் நான் இந்நிலைக்கு வந்திருக்கமாட்டேன்,” எனக் கரன் கூற, தாயார் அவரை அரவணைத்து முத்தமிட்டார். அன்பின் அகராதியில் சிறப்புத் தேவைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் அர்த்தம் ஒன்றே.

