தைப்பூசம் 2025: மலேசியாவில் தேங்காய் பற்றாக்குறை, சிங்கப்பூரில் பாதிப்பில்லை

2 mins read
cb66d757-7cb9-467b-b870-9b47cfc3b14c
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களுக்குத் தேங்காய்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம். - படம்: பிக்சாபே

மங்கலகரமான தொடக்கத்தைக் குறிக்க, இந்து சமயச் சடங்குகள் கிட்டத்தட்ட அனைத்திலும் தேங்காய்கள் காணப்படும். குறிப்பாக தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களுக்கு பயன்படுத்தும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். 

அண்மையில்  மலேசிய ஆலயங்களில் தேங்காய்ப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஆலயச் சடங்குகளுக்கு நிலையான தேங்காய் விநியோகத்தைப் பெறுவது சற்றுச் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பற்றாக்குறையினால் தேங்காய் விலையும் அதிகரித்துள்ளதாக மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்துச் சங்கங்கள் சபை தெரிவித்துள்ளது. 

மலேசியாவின் தேங்காய்ப் பற்றாக்குறை சிங்கப்பூர் தைப்பூசக் கொண்டாட்டத்தைப் பாதிக்குமா என்பது குறித்து ஆராய்ந்தது தமிழ் முரசு. 

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தேங்காய் விநியோகம் சற்றுப் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார் ஜோதி புஷ்பக்கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா. மேலும், ஆலயங்களுக்கு வழங்கப்படும் தேங்காய்களின் விலை ஏறக்குறைய 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

“ஆனால் இந்த விலை மாற்றம் நம் வாடிக்கையாளர்களைப் பாதிக்கவில்லை,” என்றார் திரு ராஜகுமார். 

சிங்கப்பூரில் சுமார் 10 ஆலயங்களுக்குத் தேங்காய் வழங்கும் ஜோதி புஷ்பக்கடையில் தற்போது தேங்காய் விற்பனையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

“தைப்பூசத்துக்குத் தேங்காய் விற்பனை சுமுகமாக உள்ளது,” என்றார் திரு ராஜ்குமார். 

ஆலயங்களில் தேங்காய்ப் பற்றாக்குறை ஏதும் தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேங்காய் விலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் மேலாளர் தனேந்திரன். 

“ஆலயத்தில் பொதுவாக அர்ச்சனைகளுக்கு வாழைப்பழங்களை வழங்குகிறோம். அப்படியே தேங்காய்ப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் மலேசியாவைத் தவிர வேறு நாடுகளிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்வோம்,” என்றார் திரு தனேந்திரன். 

அவரைப் போலவே, மலேசியாவில் தேங்காய்ப் பற்றாக்குறை இருப்பதால் அவ்வபோது இந்தியாவிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்வதுண்டு என்றார் ஸ்ரீ முருகன் டிரேடிங் தலைவர் ராமலிங்கம். 

தைப்பூசத்துக்கு மலேசியாவிலிருந்து சுமார் 2,000 தேங்காய்களும் இந்தியாவிலிருந்து மேலும் 2,000 தேங்காய்களையும் இறக்குமதி செய்யும் ஸ்ரீ முருகன் டிரேடிங், தேங்காய் விலை ஏறத்தாழ 20% முதல் 50% வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

“இப்போது இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் தேங்காய் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மலேசியத் தேங்காய்ப் பற்றாக்குறையோ விலை அதிகரிப்போ சிங்கப்பூர் வாடிக்கையாளர்களைப் பாதிக்கவில்லை,” என்றார் ராமலிங்கம். 

குறிப்புச் சொற்கள்