தீபாவளிக்கு உரித்தான குதூகல உணர்வு, பல நேரங்களில் தாய்மார்களின் சமையறையிலிருந்து உதிக்கிறது.
அவ்வகையில் தம் தாயார் மாவு பிசைந்து, முறுக்கு அச்சிலிட்டுப் பிழிந்து, பலவகைப் பலகாரங்களை அன்போடு தயாரித்ததைப் பக்கத்திலிருந்து பார்த்த தருணங்கள் 29 வயது ஹேமந்த் இளங்கோவனின் நினைவில் இன்றளவும் பசுமையாக உள்ளன.
பண்டிகைகளுக்காகத் தாயார் தயாரிக்கும் பாரம்பரிய நெய் உருண்டை, பாண்டான் மக்மூர் போன்ற பலகாரங்கள் தமது பிள்ளைப் பருவத்தை இனிமையாக்கின என்கிறார் அவர்.
பலகாரங்கள் செய்ய அவரது தாயார் பின்பற்றிய பாரம்பரியச் சமையல் குறிப்புகள், இன்று அவரை ‘கிங் ஆஃப் டார்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளராக உயர்த்தியுள்ளன.
நல்ல சுவையுடன் கூடிய, அசைவ உணவுப் பொருள் கலக்காத பலகாரங்கள் சந்தையில் கிடைப்பது அரிதாக இருப்பதாகக் கருதியதால், தாயாரின் சமையல் குறிப்புகளுடன் அத்தைகளின் துணையோடு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹேமந்த் இம்முயற்சியைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் ஃபாரர் பார்க் கடைத்தெருவில் சிறிய அளவில் அறிமுகமான இப்பலகாரங்கள், இன்று இணையத்தளம் வழியாகப் பலரையும் சென்றடைகின்றன.
அமெரிக்க நிறுவனத்தில் முழுநேர விற்பனை மேலாளராகப் பணியாற்றி வரும் அவர், வாடிக்கையாளர்கள் தின்பண்டங்களை ருசித்து மகிழும் ஒவ்வொரு தருணத்தையும் தம் தாயாரின் பாசத்திற்கு அளிக்கும் காணிக்கையாகப் பார்க்கிறார்.
தரக் கட்டுப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பது மிகுந்த சவாலாக அமைந்தாலும், தயாரிப்புக்கூடத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு பலகாரமும் அதே உன்னதத் தரத்துடன் வாடிக்கையாளரைச் சென்றடைவதை அவர் உறுதிசெய்கிறார்.
“அம்மாவின் நெய் உருண்டையைச் சுவைத்த வாடிக்கையாளர்கள், அது தங்கள் பாட்டி அல்லது தாயாரின் கைமணத்தை நினைவூட்டுவதாகக் கூறும்போது மனம் நிறைகிறது,” என்கிறார் ஹேமந்த்.
மகனின் நளபாகத்தை மட்டுமன்றி அவரது கடப்பாட்டையும் தாயார் ஜமுனா ராணி, 57, மெச்சுகிறார். “நான் கற்பித்த சமையலை அவர் பிறருக்காகச் செய்து அவர்களை மகிழ்விப்பதைக் கண்டு அகமகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.
