வீட்டை இழந்த தவிப்பில் உறைந்துநின்ற பிஞ்சு உள்ளங்கள், அதே கூரையின்கீழ் கைகோத்து ஆடிப்பாடும் நிலையை எட்டுவார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இக்கட்டான சூழலில் ஒரு சமூகமே ஒன்றுதிரண்டு துணைநின்ற நெகிழ்ச்சியான கதை, ‘தீபாவளித் திருவிழா’ என்ற இசைப் பாடலாக மலர்ந்துள்ளது.
கைவிட்டுப் போக இருந்த இல்லம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், ரவாங்கில் செயல்பட்டுவரும் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில் 60 பெண் பிள்ளைகளும் மலாக்காவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் 30 ஆண் பிள்ளைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆதரவற்ற பிள்ளைகளுக்குப் புகலிடமாக விளங்கும் இவ்விரு இல்லங்களில், ரவாங் இல்லத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த வீட்டை 850,000 ரிங்கிட்டுக்கு (S$267,450) விற்கப்போவதாகத் திடீரென அறிவித்தார். மூன்று மாதங்களுக்குள் வீட்டைக் காலி செய்யும்படியும் அவர் கூறியிருந்தார்.
“பதிவுபெற்ற அறப்பணி அமைப்பு என்பதால் எங்களால் உடனடியாகத் தனிமனிதருக்கான கடன் எதையும் பெற இயலவில்லை,” என்று ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் தலைவர் குமரன் அடைக்கலம், 38, தெரிவித்தார்.
இக்கட்டான தருணத்தில், மலேசிய இந்தியச் சமூகத்தின் உள்ளூர்க் கலைஞர்களையும் திறமையாளர்களையும் ஊக்குவிக்கும் சமூக ஊடகமான ‘மண்ணின் மைந்தன் மலேசியா’வின் நிறுவனர் குமரன் புதியநாடார், 45, உதவிக்கரம் நீட்டினார். கலைஞர்கள் பலரின் பங்களிப்புடன் பிள்ளைகளின் நிலையை விளக்கும் காணொளிகள் தயாரிக்கப்பட்டுச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
அவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் நன்கொடைகளும் குவியத் தொடங்கின. இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதிக்குள் ஏறத்தாழ 950,000 ரிங்கிட் (S$298,880) திரட்டப்பட்டது. இதையடுத்து, இல்லம் அதன் உரிமையாளரிடமிருந்து வாங்கப்பட்டு, பிள்ளைகளின் எதிர்காலம் உறுதிசெய்யப்பட்டது.
கலைத்திறன்களால் உயிர்பெற்ற தீபாவளித் திருவிழா
கிடைத்த இந்த மறுவாழ்வுக்கு நன்றி தெரிவிக்கவும் பிள்ளைகளுக்கு மறக்க முடியாத தீபாவளி அனுபவத்தைப் பரிசளிக்கவும் ஒரு பாடலை உருவாக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் நிர்வாகக் குழுத் துணைச் செயலாளர் மோகன கிருஷ்ணா குணசேகரன் விரும்பினார்.
இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறனிடம், 36, இதுகுறித்துக் கூறியதும், ‘தீபாவளித் திருவிழா’ என்ற பெயரில் சிறப்புப் பாடலை உருவாக்க முடிவெடுத்தனர். “பரதநாட்டியம், சிலம்பம், வீணை உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இக்குழந்தைகள், தங்களின் திறமைகளை இசைக் காணொளியில் வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது,” என்று ஷமேஷன் மணி மாறன் நினைவுகூர்ந்தார்.
பாடலாசிரியர் யுவாஜி, 42, பாடலின் வரிகள் குறித்துப் பேசுகையில், “‘கண் போகிற தூரமெல்லாம் உன் வல்லமை பேசும்’ என்ற வரிகள் பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதோடு பெண்களின் ஆற்றலையும் போற்றும் வகையில் அமைந்தன,” என்றார்.
“எங்கள் வாழ்க்கையை இவ்வளவு அழகாக வர்ணித்துப் பாடியிருப்பதைக் கேட்டபோது, சொல்ல முடியாத அளவுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது,” என்று ஆசிரமத்தில் வளர்ந்த சிவமலர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
ஒரே நாளில் ஒன்றிணைந்த 146 கலைஞர்கள்
மண்ணின் மைந்தன் மலேசியா ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று, மலேசியத் திரையுலகின் கலைஞர்கள் பலர் எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் தன்னார்வத்துடன் இம்முயற்சியில் இணைந்தனர்.
யுவாஜியின் வரிகளில் உருவான இப்பாடலுக்கு ஷமேஷன் மணி மாறன் இசையமைத்தார். திலீப் வர்மன், சந்தேஷ், சித்தார்த், லூர்துநாதன், சுகன்யா, அருளினி ஆகியோர் பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளனர். சேஷாத்ரியின் புல்லாங்குழல் இசையும் தி-யாமோ குழுவின் நடன வடிவமைப்பும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளன.
சிலாங்கூரின் செமன்யேவில் உள்ள ஒரு வீட்டில், ஒரே நாளில் காலை முதல் இரவு வரை படப்பிடிப்பு நடைபெற்றது. ரவீந்தாஸ், சூர்யா பிரகாஷ், தினேஷ் குமார் ஆகியோர் இக்காணொளியை இயக்கினர். கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட தயாரிப்புக் குழுவினரும் பங்களித்தனர். 146 மலேசியக் கலைஞர்களும், இரு இல்லங்களைச் சேர்ந்த 90 பிள்ளைகளும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மூத்த கலைஞர் திரு கே.எஸ்.மணியம், படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் முரசுடன் பேசியபோது, “கிடைக்கும் நல்வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, ஒழுக்கத்துடன் செயல்பட்டால் இக்குழந்தைகள் கலைத்துறையில் சிறந்து விளங்கலாம்,” என்று மனமார வாழ்த்தினார்.
அனைத்துலக இசை நிறுவனத்தின் அங்கீகாரம்
சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘தீபாவளித் திருவிழா’ பாடலின் இசை உரிமையைப் பெற்றது, இம்முயற்சிக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக அமைந்தது. அக்டோபர் 30ஆம் தேதி சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் பாடல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற வெளியீட்டு விழாவில், பாடலின் இசை உரிமைக்காக சோனி மியூசிக் சவுத் சார்பில் வழங்கப்பட்ட 35,000 ரிங்கிட் (S$11,013) மதிப்பிலான மாதிரிக் காசோலையை மண்ணின் மைந்தன் மலேசியா குழுவினர் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
தங்குமிடத்தை இழக்கும் அச்சத்தில் தவித்த இல்லம், ஒரு சமூகத்தின் அன்பால் மீண்டுள்ளது. இன்று அந்த இல்லத்தில் பிள்ளைகள் இசை மழையில் நனைந்து புன்னகை பூக்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்தது தீபாவளிப் பரிசு மட்டுமன்று; தங்களைச் சுற்றி அக்கறை கொண்ட பெரியதொரு குடும்பமும்தான்!
