தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழைமை பாராட்டும் வாழ்த்தட்டைகள், புதுமை மணங்கமழும் மெழுகுவத்திகள்

3 mins read
90e88cab-9b7a-416c-b0fa-a8248bdf813a
மின்னிலக்க வாழ்த்துகளை அனுப்புவது வசதியாக இருப்பினும், தீபாவளி வாழ்த்து அட்டைகளைப் பரிமாறும் உற்சாகம் குறைந்துள்ளதால் அவற்றை வடிவமைத்து வருகிறார் கவிதா தக்ஷிணாமூர்த்தி. - படம்:  கவிதா தக்ஷிணாமூர்த்தி
multi-img1 of 2

வாழ்த்து அட்டைக்கு மறுமலர்ச்சி 

வானவில்லின் ஏழு வண்ணங்கள் நிறைந்த தீபாவளி அட்டைகள் தீபாவளியின்போது லிட்டில் இந்தியா கடைகளில் முன்பு அதிக அளவில் விற்கப்பட்டன.

சில அட்டைகளில் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பிரபல தமிழ் திரைப்படக் கலைஞர்களின் படங்கள் இடம்பெற்று, இளம் வயதினரைப் பெரிதும் கவர்ந்தன. 

ஆனால், இன்றைய மின்னிலக்க உலகில் தீபாவளி அட்டைகள் மின் அட்டைகளாக உருவெடுத்துள்ளன. கைப்பட எழுதப்பட்ட வாழ்த்துகள் குறுஞ்செய்திகளாகின. தபால் பெட்டியில் இன்று தீபாவளி அட்டைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. 

மின்னிலக்க வாழ்த்துகளை அனுப்புவது வசதியாக இருப்பினும், தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்புவது குறைந்துள்ளது. எனவே, ‘அம்பி ஆர்ட்ஸ்’ எனும் முழுநேர கலை வணிகத்தின் நிர்வாகி மற்றும் ஓவியரான கவிதா தக்ஷிணாமூர்த்தி, 41, தமது சொந்த முயற்சியில் தீபாவளி அட்டைகளை வடிவமைத்தார். 

“இந்த முயற்சிக்கு முதலில் என் குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு ஆதரவு அளித்தனர்,” என்றார் கவிதா. 

தீபாவளி சமயம் அட்டைகளைப் பரிமாறும் மகிழ்ச்சி மீண்டும் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022ஆம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியில் சுமார் 20 அட்டைகளை விற்றார். விற்பனை குறைவாக இருந்தாலும், தீபாவளி அட்டைகளின் மறுத்தோற்றம் பலரையும் மகிழ்வித்தது. 

“மின் அட்டைகள் இப்போது எளிதாக இணையம்வழி கிடைக்கின்றன. அத்துடன், மின் அட்டைகளைச் செய்வதற்குப் பல செயலிகளும் உள்ளன. ஆனால் ஒரு தீபாவளி அட்டையைக் கைப்பட எழுதி, தபால் மூலம் உற்றார், உறவினர்களுக்கு அனுப்புவது ஒரு தனிப்பட்ட பண்டிகை குதூகலத்தைத் தருகிறது,” என்றார் கவிதா. 

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கவிதா மூன்று புதிய அட்டைகளை வடிவமைத்துள்ளார். ஓர் அட்டையின் விலை $2.50. 

“அட்டைகளின் ஓவியத்தைத் தவிர, அதன் விலையும் மிக முக்கியம். முன்பு நான் ஓர் அட்டையை $6.50க்கு விற்றேன் - அது சற்று விலை அதிகமாக இருந்தது என்று பலரும் என்னிடம் கருத்து தெரிவித்ததால் நான் விலையைக் குறைத்திருக்கிறேன்,” என்றார் அவர். 

பண்டிகைக்கால அலங்காரப் பொருள்களில் தீபாவளி அட்டைகளும் அடங்கும். அவற்றைப் பரிமாறி, காட்சிக்கு வைப்பது கொண்டாட்டங்களில் இனிமையான ஒரு பகுதியாகும் என்று நினைவுகூர்ந்தார் கவிதா. 

புத்தாக்க ஒளிவீசும் மெழுகுவத்தி

நம் முன்னோர்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு எண்ணெய் விளக்குகளில் திரி போட்டு ஏற்றிய பழக்கத்தை அறிந்திருப்போம். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தற்போது பலதரப்பட்ட விளக்குகள் கிடைக்கின்றன. குறிப்பாக, ஒளியும் நறுமணமும் அடங்கிய மெழுகுவத்திகள் பிரபலமாகியுள்ளன. 

மெழுகுவத்திகள் ஏன் ஓர் உணவு வகையைக் குறிப்பதாக இருக்கக்கூடாது என்று யோசித்த ரேகா சந்திரன், 36, 2021ஆம் ஆண்டு ‘கேண்டல் பைட்ஸ்’ எனும் சிறு மெழுகுவத்தி வணிகத்தைத் தொடங்கினார். 

“எனக்கு உணவு என்றால் கொள்ளைப் பிரியம். அதே நேரம், எனக்கு வாசனை பரவும்  மெழுகுவத்திகள் மிகவும் பிடிக்கும்,” என்றார் ரேகா. 

இவ்விரண்டையும் ஒன்றிணைத்து முதன்முதலாக ரேகா ஒரு ‘காயா’ ரொட்டி மற்றும் காப்பி  மெழுகுவத்தியைச் செய்தார். சிங்கப்பூரர்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டி வகையைப் போலவே காட்சியளித்த இந்த வாசனை மெழுகுவத்தி பலரையும் ஈர்த்தது. 

முழுநேரக் கற்றல் மேலாளராகப் பணிபுரியும் ரேகா, 2022ஆம் ஆண்டில் தீபாவளிக்கு லட்டு மெழுகுவத்திகளை வடிவமைத்தார். 300 தாமரை மற்றும் ரோஜா நறுமணம் வீசிய லட்டு மெழுகுவத்திகள் விரைவில் விற்பனையாகின. 

“ஓர் உண்மையான லட்டு போல காட்சியளித்த மெழுகுவத்திகளைப் பலரும் விரும்பி வாங்கியதால் பிறகு திருமண அன்பளிப்பாகவும் செய்தேன்,” என்றார் ரேகா. 

லட்டு மெழுகுவத்திகள் மக்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து கேசரி மற்றும் சர்க்கரைப் பொங்கல், ஜிலேபி போன்ற பண்டங்களின் வடிவில் மெழுகுவத்திகளை வடிவமைத்தார் ரேகா. 

“பெரும்பாலும் தீபாவளி, நோன்புப் பெருநாள், தமிழ் புத்தாண்டு போன்ற காலங்களில் நான் தனித்துவமான மெழுகுவத்திகளை உருவாக்குவேன். அதற்குத் தேவையான பொருள்கள், செய்முறை பற்றிய  திட்டமிடுதல் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்,” என்றார் ரேகா. 

இவ்வாண்டு தீபாவளிக்கு பிரியாணி மற்றும் பாயசம் உணவுவகைகளைப் பிரதிபலிக்கும் மெழுகுவத்திகளை அறிமுகப்படுத்துகிறார் ரேகா. 

“தீபாவளி நாளன்று பிரியாணி, பாயசம் உண்பது பலருக்கும் ஓர் இனிய அனுபவம். அதை ஒரு சுவாரசியமான முறையில் நினைவூட்டும் வகையில்  இந்த மெழுகுவத்தி,” என்றார். 

உறவின்றி, உணவின்றி தீபாவளி இல்லை. கட்டிக்காத்த பாரம்பரியத்தைச் சிறு புதுமையுடன் படைப்பது ஒரு சுவாரசியமான அனுபவம் என்று குறிப்பிட்டார் ரேகா. 

குறிப்புச் சொற்கள்