வெற்றிக்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்பவர்கள் பல நேரங்களில் கடினமான சூழல்களில் தற்காலிகப் பின்னடைவுகளைச் சந்தித்தவர்களாக இருக்கக்கூடும்.
உணவு வர்த்தகத்தைப் புதிதாகத் தொடங்க விரும்புபவர்கள் அத்தகையோரின் அறிவுரைகளைக் கேட்டுப் பயனடையலாம் என்பது பிரெஞ்சு சமையற்கலைஞர் ராதாகிருஷ்ணன் ராமையனின் நிலை.
நோரிஸ் ரோட்டில் ‘த பிளாக் ஷீப்’ உணவகத்தை நடத்தி அதனை அண்மையில் மூடிய 56 வயது திரு ராதாகிருஷ்ணன், தற்போது உணவு வர்த்தகங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார்.
உலகின் பல இடங்களில் இவரின் நளபாகத்திற்கு நல்ல வரவேற்புள்ளது. இவர் செய்யும் ‘சுஃப்லே’வை (Soufflé) இந்தோனீசியப் பெருநிறுவனம் ஒன்று அண்மையில் நாடியுள்ளதையும் திரு ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
அத்துடன், தோசையைப் போலக் காணப்படும் ‘கிரேப்’பைப் (Crepe) புதிய சுவைகளில் தயாரிக்க மற்றொரு நிறுவனம் கேட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.
தற்போது இந்திய உணவகம் ஒன்றுக்கு ஆலோசனை வழங்கும் திரு ராதாகிருஷ்ணன், ‘கிரேப்’ பதார்த்தத்தைத் தயாரிப்பதில் அதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.
நன்றாகச் சமைக்கத் தெரியும் என்பதற்காக உணவு வர்த்தகங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைப்பதாக இவர் தெரிவித்தார்.
“நீங்கள் விரும்பிச் சமைக்கும் உணவுப்பொருள்களை 200 பேருக்குச் சமைக்கத் தயாராக இருக்கிறீர்களா? சமையல் வல்லுநர்களைப் பணியில் அமர்த்த நினைத்தாலும் நல்ல பணியாளர்கள் கிடைப்பது அரிது என்பது என் அனுபவமாக உள்ளது,” என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
உணவு வர்த்தகங்களைத் தொடங்க முன்வருபவர்களுக்குத் தயாரிப்பு வகுப்பு ஒன்றை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று இவர் கருதுகிறார். அரசாங்க விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, பொருள் சேவை வரிக்குப் பதிவு செய்வது, உணவகத்தை வடிவமைப்பது போன்றவற்றை அவர்கள் இத்தகைய வகுப்புகள் வழி கற்கலாம் எனத் திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
உணவகத்தைத் திறக்க விரும்புவோர், எவ்வளவு நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர்களாக இருந்தாலும் போதுமான முதலீட்டுத் தொகை தங்கள் வசம் உள்ளதா என்பதைத் தொடக்கத்திலேயே உறுதி செய்துகொள்வது நல்லது என்றார் இவர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, உணவுத்தெரிவுப் பட்டியலைச் சரிபார்த்து, நன்கு விற்பனை ஆகாத பதார்த்தங்களை நீக்கும்படி இவர் அறிவுறுத்துகிறார்.
“உங்களால் என்ன நன்றாகச் சமைத்துத்தர முடியுமோ, அதன் மீது கவனம் செலுத்துங்கள். நாளடைவில் அதன் தரம் குறையாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள்,” என்கிறார் திரு ராதாகிருஷ்ணன்.
உணவகப் பதார்த்தங்கள் நன்றாக இருந்தாலும் பிறரால் அவற்றை எளிதில் செய்யமுடியுமா என்பதை யோசிக்க வேண்டும் என்கிறார் இவர்.
இந்திய வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால்
நிலைத்தன்மை குறைந்துள்ள தற்போதைய சூழலில் இந்திய உணவுவகைகள் பல இருப்பதால் உணவகங்கள் சவால்களை எதிர்நோக்குவதாகத் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இப்போது கூடுதலான தென்னிந்திய உணவகங்கள் நடுத்தர நிலையில் உள்ளன. செட்டிநாடு, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களின் தனித்துவச் சுவைகளைக் கொண்ட உணவுவகைகள் விற்கப்படுகின்றன. சிங்கப்பூருக்குப் புதிதாகக் குடியேறும் தென்னிந்தியர்கள் இத்தகைய உணவகங்களை ஆதரிக்கின்றனர் என்று இவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் காலங்காலமாக இயங்கும் உணவகங்களைப் பல இனங்களைச் சேர்ந்தவர்களும் நாடுவதைச் சுட்டிய இவர், எந்தச் சந்தையைக் குறிவைத்து இயங்குவது என்பது பற்றிய விழிப்புணர்வு இந்திய உணவு வர்த்தகங்களுக்குத் தேவை என்றார்.
“நம் ஊர் சாப்பாட்டு வகையே சிறந்தது என்ற எண்ணப்போக்கு இந்திய உணவு வர்த்தகர்கள் சிலரிடையே நிலவுகிறது. ஆனால், பரந்த சந்தையில் தனித்தன்மையுடன் திகழ்வது எப்படி என்பது பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் திரு ராதாகிருஷ்ணன்.

