பொதுவாகத் தீபாவளிக் கொண்டாட்டம் என்றாலே உற்றார் உறவினருடன் அறுசுவை உணவு உண்பது, திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பது, அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்துகொள்வது போன்றவற்றில் பலரும் மனநிறைவு காண்பர். ஆனால், இந்தத் தீபாவளியின்போது கணவன் மனைவியாக இணைந்து முதல் முறையாகத் தொண்டூழியம் செய்ததில் மனநிறைவு அடைந்ததாகக் கூறுகின்றனர் வென்னிஷா சேவியர், பெ.கண்ணன் தம்பதியர்.
34 வயதான இருவரும் சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ தொண்டூழிய முயற்சியில் முதல் முறையாகத் தம்பதியாகப் பங்கேற்றனர்.
வென்னிஷாவிற்குத் திருமணத்திற்கு முன்பே தொண்டூழியத்தில் அதிக ஆர்வமும் அனுபவமும் இருந்திருந்தாலும் கண்ணனுக்கு இது முற்றிலும் புதிய அனுபவம். மனைவியின் ஆர்வத்தால் அவர் அம்முயற்சியில் ஈடுபட முடிவு செய்தார்.
மூத்தோரைத் தீபாவளிச் சந்தைக்கு அழைத்துச் செல்லும் அங்கத்தில் ஈடுபட்ட இருவரும் தங்களால் முடிந்தவரை, நினைத்து மகிழக்கூடிய தருணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில் களமிறங்கினர்.
தம்பதியாக முதல் தொண்டூழிய அனுபவம் எப்படி இருக்குமோ என்ற இவர்களின் தயக்கத்தைக் களைந்தார் திருவாட்டி மீனாட்சி.
“தொடக்கத்தில் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்குச் செல்கையில் நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால், அவரைக் கண்ட மறுநொடி தயக்கம் அனைத்தும் மறைந்துவிட்டது. பேரப்பிள்ளைகள் பாட்டியுடன் இணைந்தது போன்ற இதமான உணர்வு ஏற்பட்டது,” என்று வென்னிஷாவும் கண்ணனும் கூறினர்.
திருவாட்டி மீனாட்சியைத் தீபாவளிச் சந்தைக்கு அழைத்துச் சென்றபோது அவர் தமக்கு மட்டும் பொருள்களை வாங்கிக்கொள்ளாமல் தமது பேரனுக்குப் பிறந்தநாள் பரிசுகளையும் வாங்க முற்பட்டதைத் தம்பதியினர் கவனித்தனர்.
“அவர் தம்மைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் தம்மைச் சார்ந்தவர்கள்மீது அதிகப் பாசம் வைத்திருப்பதை எங்களால் உணர முடிந்தது,” என்று கண்ணன் கூறினார்.
சந்தையில் பொருள்கள் அனைத்தையும் வாங்கிய பிறகு மூவரும் தேநீர் அருந்தியவாறு வாழ்க்கை அனுபவங்களையும் கதைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
மூன்று மணி நேரச் சந்திப்பின் முடிவில் தம்பதியரை நெகிழச் செய்தார் திருவாட்டி மீனாட்சி.
“ஒரு நாள் அவர் இல்லத்திற்கு உணவு உண்ண வருமாறு எங்களை அழைத்தார். குறுகிய சந்திப்பாக இருந்தாலும், எங்களுக்கிடையே ஆழமான பிணைப்பு உருவானதை உணர முடிந்தது,” என்று இருவரும் கூறினர்.
கண்ணனின் தாத்தா பாட்டியர் இந்தியாவில் வசிப்பதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாத குறையைத் திருவாட்டி மீனாட்சி தீர்த்து வைத்ததாக அவர் உணர்கிறார். வென்னிஷாவிற்குத் தமது மறைந்த பாட்டியைத் திருவாட்டி மீனாட்சி நினைவூட்டியுள்ளார்.
மேலும், இந்தத் தொண்டூழிய அனுபவம் தமது கணவரின் மற்றோர் அழகிய பக்கத்தை வெளிக்கொணர்ந்ததாக வென்னிஷா கூறினார்.
“என் கணவர் அவரது ஓய்வு நேரத்தில் செயற்கை நுண்ணறிவு, தானியக்க ஆராய்ச்சி, ‘லெகோ’ விளையாட்டு போன்றவற்றில்தான் அதிக ஆர்வம் காட்டுவார். ஆனால், அவர் அன்புடனும் பரிவுடனும் திருவாட்டி மீனாட்சியிடம் பழகியது கண்ணையும் கருத்தையும் நிறைப்பதாக அமைந்தது,” என்றார் அவர்.
நிதித் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இருவரும் இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
தம்பதியராக ஒன்றிணைந்து, அர்த்தமுள்ள நேரத்தைச் செலவிட இத்தகைய தொண்டூழிய முயற்சிகள் வழிவகுப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
