மகன், மகளோடு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தீபாவளியை வரவேற்கின்றனர் விக்ரம்ராஜ் சண்முகன் - ஆஷின் அலெக்சியா மாலிகா குடும்பத்தினர்.
முழுமையான குடும்பமாகத் தீபாவளியைக் கொண்டாடும் பூரிப்புடன் தங்களது பிள்ளை வளர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்தார் ஆஷின், 32.
மூன்று வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், மார்ச் மாதம் ஒரு வயது வளர்ப்பு மகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
“மகளுடன் முதல் தீபாவளி, புதிய வீட்டில் முதல் தீபாவளி என்று இரட்டிப்புக் கொண்டாட்டமாகத் தீபாவளி அமைந்துள்ளது,” என்றார் உயிரியல் மருத்துவப் பொறியாளரான விக்ரம், 40.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இந்த இணையர் தொடக்கத்திலிருந்தே வளர்ப்புப் பிள்ளைகள் வேண்டும் என விரும்பினர். மணமான மறு ஆண்டே திருவாட்டி ஆஷின் கருவுற்று மகனைப் பெற்றெடுக்கவே அந்த முடிவைச் சற்றே தள்ளிப்போட்டனர்.
தங்களது மகன் மூன்று வயதை எட்டியதும் வளர்ப்புப் பிள்ளைக்கு விண்ணப்பித்தனர்.
“எனக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். பிள்ளைகளுடன் வீடு நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ ஆசை,” என்றார் ஆஷின். வளர்ப்புப் பிள்ளைக்கு விண்ணப்பிக்கும் முடிவுக்கும் அதுவே காரணம் என்றார் அவர்.
விக்ரமின் பெற்றோர் சண்முகன், பக்கிரிசாமி லட்சுமி ஆகியோரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வளர்ப்புப் பெற்றோராக மூன்று குழந்தைகளை வளர்த்தவர்கள். தற்போது 11 வயதான வளர்ச்சித் தாமதக் (Global developmental delay) குறைபாடுள்ள பெண் குழந்தையைப் பராமரித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் விக்ரமுக்கும் வளர்ப்புப் பிள்ளைகளைப் பராமரிப்பதில் இயல்பாகவே ஆர்வம் மேலோங்கியது.
கடந்த ஆண்டு அதற்காக விண்ணப்பித்து, தொடர்ந்து அதற்கான பயிற்சிகள், பயிலரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டதுடன் தங்களது மகனையும் தயார்செய்ததாகக் கூறினர்.
டிசம்பர் மாதம் வளப்புப் பிள்ளைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவே, மார்ச் மாதம் ஒரு வயதுப் பெண் குழந்தையை வரவேற்க இக்குடும்பம் தயாரானது.
“மகனுக்கு மூன்று வயதுதான் என்றாலும் ஒரு பெண் குழந்தை வரவிருப்பதை எடுத்துக்கூறி அவனையும் தயார்ப்படுத்தினோம். அவனும் ஆவலுடன் காத்திருந்தான்,” என்றார் ஆஷின்.
ஒரு வயது மகளுக்காகப் பால் போத்தல், பால் மாவு, உடைகள், விளையாட்டுப் பொருள்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கியதையும், மகள் வரும்போது அவளுக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருப்பதை உறுதி செய்ததையும் இணையர் நினைவுகூர்ந்தனர்.
“குழந்தைகள் பொதுவாகப் புதிய மனிதர்களைப் பார்த்து அழுவார்கள். என்னைப் பார்த்துப் புன்னகையுடன் தாவி வந்தாள்,” என்று மகளை வரவேற்ற முதல் நாளை நினைவுகூர்ந்தார் ஆஷின்.
“நான் அலுவலகம் சென்றிருந்தேன். வீட்டுக்கு வந்தபோது வீடு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு மாறுபட்ட மகிழ்ச்சியை உணர்ந்தேன். அவளுக்கும் எனக்கும் உடனடியாக ஒரு பிணைப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது,” என்றார் விக்ரம்.
இரு சிறு குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் இருப்பது இயல்புதான் என்றார் ஆரம்பகாலத் தலையீட்டு ஆசிரியரான ஆஷின்.
மகனுக்குப் பால் பொருள்கள் ஒவ்வாமை, அதனால் அவருக்கு ஒருவித உணவுமுறை, மகளுக்கு வேறு மாதிரியான உணவு, பணிகளுக்கு இடையில் இருவருக்கும் அளிக்க வேண்டிய கவனம், ஒதுக்க வேண்டிய நேரம் என அனைத்தையும் சமாளிப்பது சிரமம் என்றாலும் தாய்மை உணர்வு மேலோங்கியிருப்பதால் இவை சாத்தியப்படுவதாகச் சொன்னார் ஆஷின்.
“இப்போது இரு குழந்தைகளும் ஒன்றாக விளையாடுவது, ஒருவருக்கொருவர் உதவுவது, இருவரும் இணைந்து குறும்புத்தனம் செய்வது என அனைத்தும் பார்ப்பதற்கு மனநிறைவை அளிக்கிறது,” என்றார் அவர்.
புத்தாடைகள், இனிப்புப் பலகாரங்கள், மத்தாப்பு என குழந்தைகளுக்கான தீபாவளியாக இது அமைந்துள்ளது என்றனர் இணையர்.