புதிய வாழ்க்கையில் அடித்து எடுத்துவைத்த பூரிப்புடன் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பல நாள் விரும்பிய காதலனை அண்மையில் அவர் கைபிடித்தார்.
அமுதாவின் வாழ்க்கையும் மேடுபள்ளங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. 20 வயதில் எதிர்பாரா ஒரு முடிவையும் அவர் எடுத்திருந்தார்.
மனவுளைச்சலும் மனவலியும் ஆட்கொள்ள, உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவரிடம் தலைதூக்கியது. ஆனால், “நல்லவேளையாக அப்படி ஏதும் செய்துகொள்ளவில்லை,” என இப்போது மகிழ்கிறார் அவர்.
மனத்தளவில் அமுதா முன்னேற பெருந்துணையாக இருந்தது ‘மென்டல் ஆக்ட்’ (Mental ACT) அமைப்பு.
கடந்த 2017ஆம் ஆண்டில் அந்த லாப நோக்கமற்ற அமைப்பைத் தொடங்கிய தேவானந்தன் தமிழ்செல்வி, 34 - பிரியநிஷா நூருல்லா, 34, தம்பதியர் ஒவ்வொரு தீபாவளியையும் பல உயிர்களைக் காப்பாற்றிய மனநிறைவுடன் கொண்டாடுகின்றனர்.
அமுதா உட்பட உயிரை மாய்த்துக்கொள்ளவிருந்த கிட்டத்தட்ட 70 பேரை திரு தேவனும் திருவாட்டி நிஷாவும் தங்கள் அமைப்புவழி இதுவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த தீபாவளி அவர்களுக்குச் சற்று மாறுபட்டது. பகுதிநேரமாக ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பைக் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நடத்திவந்த அவர்கள், முழுநேர வேலையை அண்மையில் கைவிட்டனர்.
“அமைப்புமூலம் இன்னும் பலருக்கு நாங்கள் துணைநிற்க விரும்புகிறோம். தொண்டூழியத்திற்கு முழுமையாக எங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்,” என்றார் உளச்சிகிச்சை வல்லுநரும் ஆலோசகருமான திருவாட்டி நிஷா.
சமூகப் பணி, தொண்டூழியம், ஆலோசனை வழங்குதல் போன்ற பின்னணிகளைக் கொண்ட தேவன் - நிஷா தம்பதியர், ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பைத் தொடங்க சொந்த வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த துயரங்களே காரணமாக இருந்தன.
“அப்போது நான் தேசிய சேவையில் இருந்தேன். திடீரென எனக்கு மிகவும் நெருக்கமான தோழன் உயிரை மாய்த்துக்கொண்டதால் நொறுங்கிப்போனேன்,” என்றார் திரு தேவன். “அந்த நண்பர் வழக்கம்போல அனைவரிடமும் பேசிக்கொண்டுதான் இருந்தார். அப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் நினைக்கவே இல்லை,” என்றும் அவர் சொன்னார்.
வெவ்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணமும் திரு தேவனின் மனத்தில் எட்டிப் பார்த்ததுண்டு. சில நேரங்களில் அந்த உந்துதல் அதிகமாகவே இருந்தது.
அப்போதெல்லாம் மனநல ஆலோசனை பெறலாம் என்று திரு தேவனுக்குத் தோன்றியது. மனநல ஆலோசனைகளைப் பெற சிங்கப்பூரில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவரது மனம் நாடியது ஒன்றைத்தான்.
“என்னைப் போன்ற ஒருவர் பேசுவதற்கு இந்தியச் சமூகத்தை நன்குப் புரிந்துகொண்ட மனநலச் சேவை எங்கே?” என்பதுதான் அந்தத் தேடல்.
‘மென்டல் ஆக்ட்’டின் பின்னணி
ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமமில்லை என்றபோதும் தாய்மொழியில் பேசும்போது எண்ண ஓட்டங்களை இன்னும் உணர்பூர்வமாக சொல்ல முடியும் என்றும் இந்தியக் குடும்பத்தின் பின்னணியும் பிற சமூகத்தின் பின்னணிகளும் வேறு வேறு என்றும் திரு தேவன் கூறினார்.
“இந்தியக் குடும்பங்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் வித்தியாசமானவை. இந்தியச் சமூகத்தில் மனவுளைச்சல் குறித்த விழிப்புணர்வும் குறைவு. எனவே, அத்தகைய பின்னணியிலிருந்து வருவோர்க்கு வழக்கமான ஆலோசனைகளை வழங்கினால் அது முழுமையாக அவர்களுக்கு உதவுமா என்பதுதான் என் கேள்வி,” என்றார் அவர்.
அந்தக் கேள்வியே ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
ஆலோசனை வழங்குவதில் ஐந்தாண்டிற்குமேல் நிபுணத்துவ அனுபவம் கொண்ட திருவாட்டி நிஷாவும் திரு தேவனைப் போல பல இன்னல்களை எதிர்கொண்டார்.
மனவுளைச்சல், மன அழுத்தம், பதற்றம், துயரம், பற்றின்மை, தனிமை, உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்ற அவர், 2016ஆம் ஆண்டு இந்திய அமைப்பு ஒன்றில் தொண்டூழியம் செய்தபோது திரு தேவனைச் சந்தித்தார்.
இந்தியச் சமூகத்தினரிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த இருவரும் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தனர்.
‘மென்டல் ஆக்ட்’ அமைப்பை நிறுவி, இந்தியச் சமூகத்தில் மனநல உதவித் தேவைப்படுவோருக்கு இரவு பகல் பாராமல் தோள்கொடுக்கின்றனர் தேவன் - நிஷா தம்பதியர்.
அவர்களின் உதவியால் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட சிலர், ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பில் தொண்டூழியர்களாக இணைந்து, மேலும் பலரது வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வருகின்றனர்.
இவ்வாண்டு தீபாவளிக்கு முதன்முறையாக ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பு, சந்தை ஒன்றை அமைத்தது.
அக்டோபர் 17, 18, 25 ஆகிய தேதிகளில் இடம்பெற்ற சந்தையில் தீவெங்குமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட நல்ல நிலையில் உள்ள ஆடை உள்ளிட்ட பொருள்கள் மிகவும் மலிவான விலைக்கு விற்கப்பட்டன.
“சந்தைக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல அந்தத் தொகை பெரிதும் உதவும்,” என்றார் திருவாட்டி நிஷா.
மன அழுத்தம், மனச்சோர்வு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் உதவிக்கு ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பை https://www.instagram.com/mental_act_sg என்ற தளம்வழி நாடலாம்.
