சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கு மத்திய சேம நிதிக்குப் போய்விடுகிறது என்பதை மட்டும்தான் சிலர் அறிந்துள்ளனர். அதேநேரத்தில், அந்தப் பணத்தை எவ்வாறு வாழ்க்கைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்திருப்பது மிகவும் முக்கியம் என்பது மத்திய சேம நிதி (சிபிஎஃப்) தொண்டூழியரான மோகன்வேல் சண்முகசுந்தரத்தின் கருத்து.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய சேம நிதி (சிபிஎஃப்) தொண்டூழியர் திட்டத்தில் இணைந்துள்ள 13,000க்கும் மேற்பட்டோரில், பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் பாதுகாப்பு ஆலோசகரான 51 வயது திரு மோகனும் ஒருவர்.
மத்திய சேம நிதியின் பலன்களைப்பற்றி மிக தாமதமாக அறிந்துகொள்வோர் பலர் இருப்பதால், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் ஒருவர் அறிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்தின் 3ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தொண்டூழியர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் செயலியை மத்திய சேம நிதிக் கழகம் மேம்படுத்தியுள்ளது.
கலந்துரையாடல் தளமும் பரிந்துரைகளைப் பதிவிடும் தளமும் புதிதாகச் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வசித்துவந்த தம் தந்தையின் இறுதிக் காலத்தில் அவருடன் அதிக நேரத்தைச் செலவழிக்க முடியவில்லை என்று வருந்திய பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் பாதுகாப்பு ஆலோசகரான திரு மோகன், சிங்கப்பூரில் தம் வட்டாரத்தில் உள்ள சில முதியவர்களுடன் நேரத்தைச் செலவிட முடிவெடுத்தார்.
தமது எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய திரு மோகன், மத்திய சேம நிதி வழங்கும் சேவைகளைப் பற்றி ஆழமாகக் கற்றுக்கொண்டு, தம் மத்திய சேம நிதிக்குப் பல மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார்.
அவ்வாறு செய்ததால், தற்போது மத்திய சேம நிதியின் ஓய்வுக்கால தொகையை முழுமையாக அடைந்துவிட்டதாகக் கூறினார். ‘மெடிசேவ்’ திட்டத்தின் அடிப்படை சுகாதார தொகையை (பிஎச்எஸ்) அடைந்துவிட்ட நிலையில் வரி நலச்சலுகைகளையும் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இளம் வயதிலேயே பணி ஓய்வு காலத்தைப்பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடுவதையும் இளையர்கள் செய்யத் தவறிவிடுகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது பிற்காலத்தில் அவர்களுக்குப் பேருதவியாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.