கலைக்கு எல்லையில்லை என்பதற்குச் சீனாவைச் சேர்ந்த ஜின் யான்ஷு - ஜின் யானாய் சகோதரிகளே சான்று.
பிறப்பில் சீனராயினும் இந்தியப் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தைப் பல ஆண்டுகளாக முறையாகப் பயின்ற சகோதரிகள், அண்மையில் அதனை அரங்கேற்றமும் செய்து, பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை இந்த 16 வயதுச் சகோதரிகள் தங்களது பரதக்கலைத் திறமையை மேடையில் வெளிப்படுத்தினர்.
இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைச் சீனாவிற்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, அவருடைய துணைவியார் சங்கீதா துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இரட்டைச் சகோதரிகளைப் பாராட்டிப் பேசிய திரு விக்ரம், இளைய சீனக் கலைஞர்கள் இருவர் இந்தியப் பாரம்பரிய நடனத்தை இவ்வளவு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் கற்றுக்கொண்டு ஏற்றுக்கொண்டது மிகவும் மெச்சத்தக்கது என்றார்.
பரதநாட்டியத்தின் நீண்ட வரலாறும் சிறந்த கலை வடிவங்களும் தேச எல்லைகளைக் கடந்து வெகுதொலைவு செல்லும் என்பதற்கு சகோதரிகளின் அரங்கேற்றமே சிறந்த சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பரதநாட்டிய அசைவுகள், இசை, தாளம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதில் சீன இளையர்களிடையே பெருகிவரும் ஆர்வம், இந்தியாவையும் அதன் பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கான ஓர் அர்த்தமுள்ள வழியாகும் என்றும் அவர் சொன்னார்.
இந்தியத் தூதரகமும் நடனக் கலைஞர்களுக்கும் அவர்களின் குரு, பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டது. மேலும், சகோதரிகளின் வாழ்க்கையில் பரதநாட்டியம் என்றென்றும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்தது.
மூன்று வயதில் தொடங்கிய பரதநாட்டியப் பயணம்
இந்தச் சகோதரிகள் தங்களின் மூன்று வயதிலேயே சீன நடனக் கலைஞரும் ஆசிரியருமான ஜின் ஷான் ஷானிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினர்.
பெய்ஜிங்கில் ‘சங்கீதம் இந்தியக் கலைப் பள்ளி’யை நடத்திவரும் ஜின் ஷான் ஷான், புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சனிடம் பயிற்சி பெற்றவர்.
2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அப்பள்ளி, சீனா முழுவதிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்துள்ளது.
அண்மை ஆண்டுகளில் அப்பள்ளியிலிருந்து அரங்கேற்றம் செய்த நான்காவது குழுவினர் இந்த இரட்டையர்.
மோடிக்குமுன் ஆடிய கால்கள்
ஜின் யான்ஷு - ஜின் யானாய் சகோதரிகள் ஏற்கெனவே பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் நடனமாடியுள்ளனர்.
2025ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டிற்காகத் தியான்ஜின் நகருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது, அவருக்குமுன் சகோதரிகள் நாட்டியமாடி அவரை மகிழ்வித்தனர்.
கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் அரங்கேற்றப்பட்ட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நடன நாடகத்திலும் இவர்கள் பங்கேற்றனர்.
இவர்களின் அரங்கேற்றம், பரதநாட்டியம் மூலமாக இந்தியா - சீனா இடையே வளர்ந்து வரும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு மற்றொரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.


