‘ஜெயிலர் 2’ பாடலுக்கு பவனி வந்த சுங்கத்துறை அதிகாரிகள்

‘ஜெயிலர் 2’ பாடலுக்கு பவனி வந்த சுங்கத்துறை அதிகாரிகள்

படம்: சிங்கப்பூர்ச் சுங்கத்துறை

15 Nov 2026 - 8:30 am

2 mins read

சிங்கப்பூர்ச் சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டான் ஹுங் ஹூய்யுடன் சில அதிகாரிகள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ஹுக்கும்: ரீலோடட்’ பாடலுக்கு பவனிவரும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

சிங்கப்பூர் சுங்கத்துறையின் அதிகாரத்துவ சமூக ஊடகப் பக்கங்களில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியான அக்காணொளி பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்ஸ்டகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்ட அக்காணொளி 61,000க்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளையும் பெற்றுள்ளது.

காணொளிக்குக் கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார் சுங்கத்துறை தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் வெரோனிக்கா பாலா.

“நாங்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் பிரபலமாகும் காணொளிகளை எங்கள் பாணியில் பதிவிடுவது வழக்கம். அதேபோல, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளிவந்தபோது அது மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

“அதனையொட்டி ஒரு காணொளி எடுப்போம் என்று எண்ணினோம். நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், இந்த அளவிற்கு பெருவரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கவில்லை,” என்று திருவாட்டி வெரோனிக்கா கூறினார்.

காணொளி குறித்த யோசனைகளை தொடர்புப் பிரிவுத் தலைவர் பரமேஸ்வரனிடம் முன்வைத்த போதுதலைமை இயக்குநர் காணொளியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமென்று திருவாட்டி வெரோனிக்கா பரிந்துரைத்தார்.

தொடர்புப் பிரிவின் முயற்சிகளுக்குத் திரு டான் தொடர்ந்து ஆதரவளிப்பதால் இம்முயற்சியில் பங்கெடுக்க அவர் முன்வந்ததாகத் திரு பரமேஸ்வரன் சொன்னார்.

திரு டானுக்குத் தமிழ் திரைப்படங்கள் குறித்தும் பாடல்கள் குறித்தும் பெரிதாகத் தெரியாத போதிலும் காணொளி படப்பிடிப்பில் அவர் துடிப்புடன் கலந்துகொண்டதாகத் திருவாட்டி வெரோனிக்கா பகிர்ந்துகொண்டார்.

காணொளிக்கான படப்பிடிப்பு முழுவதும் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் முடிவடைந்தது.

காணொளியின் முடிவில், ‘இந்த நுழைவு போலியானதாக இருக்கலாம். ஆனால், சுங்கத்துறையின் பணி உண்மையானது’ என்ற செய்தி இடம்பெற்றது.

இத்தகைய காணொளிகளின் முக்கிய நோக்கம் மக்களைக் கவர்ந்து, அவர்களிடையே சுங்கத்துறையின் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.

“சிங்கப்பூர்ச் சுங்கத்துறையில் எங்களது பணி கடுமையானது. ஆனால், நாங்கள் தகவல்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் விதமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதில்லை.

“பொதுமக்களிடையே எங்களது பணிகளைக் குறித்த ஆர்வத்தைத் தூண்ட எங்கள் அதிகாரிகள் புத்தாக்கமான வழியைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி.

“அரசாங்கத்தின் வருவாயைப் பாதுகாப்பதிலும் வணிகத்தை எளிதாக்குவதிலும் எங்களின் பங்கைப் பற்றி மேலும் பலர் அறிந்துகொள்ள இந்தக் காணொளி ஊக்கமளித்திருந்தால் அது ஒரு பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்று கருதுகிறேன்,” என்று திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்