வழி தவறிப் போனவர் வழிகாட்டியாய் இன்று நிற்கிறார்
சிறையிலிருந்து வெளிவருவது தடுமாற்றம் நிறைந்த தருணம். சிறையிலிருந்து விடுதலையாகி, சமுதாயத்தில் ஒருங்கிணையும் கட்டம் அது.
இந்த உணர்வை நன்கறிந்த திரு முருகேசன், 52, பிறர் வாழ்வில் ஒளிரும் விளக்காய் இன்று திகழ்கிறார்.
‘இஸ்கோஸ்’ (ISCOS) அமைப்பில் திட்ட உதவி வகுப்பாளராக இன்னாள், முன்னாள் கைதிகளைச் சமூகத்தில் ஒன்றிணைக்கும் திட்டங்களை அவர் நடத்திவருகிறார். அவ்வப்போது மலேசியாவுக்குச் சென்று இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தவும் செய்கிறார்.
எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தபோது தன் மகன் கேட்டது அவர் மனத்தை வதைத்தது. ‘சிறுவர் தினத்தன்று மற்ற பெற்றோர் வந்தனர். நீ ஏன் வரவில்லை?’ என்பதே அந்தக் கேள்வி. அதனால், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரகசியக் கும்பலிலிருந்து விடுபட்ட அவர், போதைப் பழக்கத்தையும் ஒழித்தார்.
சிறையிலிருந்து விடுதலையாகி வாழ்வில் புதிய அத்தியாயத்தை அமைக்க ‘இஸ்கோஸ்’ அமைப்பும் சிறை ஃபெல்லோஷிப்பும் அவருக்குத் தோள்கொடுத்தன.
“விடுதலையானபோது வெளியுலகம், தொழில்நுட்பம் அனைத்தும் மாறிவிட்டன. ஆதரவுக் குழுவில் சேர்ந்தேன். அதன்மூலம் தன்னம்பிக்கையை வளர்த்தேன்,” என்றார் திரு முருகேசன்.
“திரு முருகேசன் என் அமைப்பின் முக்கிய உறுப்பினர். ஒரு முன்மாதிரி. பிறருக்கு உதவுவதால் அவரும் மனநிறைவடைகிறார்,” என்றார் ‘இஸ்கோஸ்’ மேலாளர் ரேவன், 38.
“திரு முருகேசன் திருந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சில சமயம் கைதிகள் மலேசியர்களாக உள்ளனர். அவர்கள் விடுதலையானதும் அவ்வப்போது அங்கு சென்று அவர்களைப் பார்ப்போம்.
தொடர்புடைய செய்திகள்
“அப்போது எங்களை அழைத்துச் செல்வது திரு முருகேசன்தான். அவர்களைத் தொடர்புகொள்ளும் முருகேசனை பார்த்ததும் அவர்கள் உற்சாகமடைகின்றனர்,” என்றார் சிங்கப்பூர் சிறை ஃபெல்லோஷிப்பை (Prison Fellowship Singapore) சேர்ந்த போதகர் ஜெரார்ட்.
“நான் இருந்த இடத்தில் இன்று பலர் இருக்கிறார்கள். எனக்கு அப்போது கிடைக்காத வாய்ப்பை நான் இப்போது அவர்களுக்கு வழங்கி உதவி செய்வேன்,” என்றார் திரு முருகேசன்.
திரு முருகேசன், இவ்வாண்டின் சிங்கப்பூர் சிறைத்துறை தொண்டூழியர் பாராட்டு விழாவிற்கு விருந்தினராக வந்திருந்தார். ஐந்தாண்டுத் தொண்டூழியத்துக்காகச் சென்ற ஆண்டு அவர் விருது பெற்றார். 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் துறையின் பங்காளியாக இருந்துள்ள ‘இஸ்கோஸ்’ அமைப்புக்கு ‘ஜர்னி ஷீல்டு’ விருது கிடைத்தது. போதகர் ஜெரார்ட்டுக்கு 20 ஆண்டுகால தொண்டூழியத்துக்கான விருது கிடைத்தது. சிங்கப்பூர் சிறை ஃபெல்லோஷிப்புக்கும் ‘ஜர்னி ஷீல்டு’ விருது கிடைத்தது.
உள்துறை மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் அவ்விருதுகளை வழங்கினார்.
“2000ல் சிங்கப்பூர் சிறைத் துறையில் 200 தொண்டூழியர்கள்தான் இருந்தனர். இன்றோ சிறைத் துறையில் 4,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உள்ளனர்,” என்றார் டாக்டர் ஃபைஷால்.
உதவிக்கரம் நீட்டிய கரம் சிங்
ஓய்வுபெற்ற சிங்கப்பூர் ஆகாயப்படை அதிகாரி கரம் சிங், 70, ஆகாயப்படையில் துணை ஆலோசகராகக் (paracounselor) கூடுதல் பணியாற்றினார். 1980கள் முதல் சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்திலும் சீக்கிய நல மன்றத்திலும் தொண்டூழியராக இருந்துவருகிறார். 1970கள் முதல் குடியிருப்பாளர்க் குழுவில் 26 ஆண்டுகள் தொண்டூழியம் புரிந்தார்.
“சிறைக்குச் சென்றும் அவரவர் இல்லங்களுக்குச் சென்றும் ஆலோசனை வழங்குவோம்,” என்றார் திரு சிங்.
2010ல் ஓய்வுபெற்ற திரு சிங், சனிக்கிழமைகளில் சாங்கி சிறைத்தொகுதியில் சமயம் சார்ந்த ஆலோசனை வழங்குகிறார்.
“தொண்டூழியராக இருப்பது நான் பெருமையுடன் செய்யும் சேவை. திறந்த மனப்பான்மையுடன் செவிசாய்த்தல் அவசியம். உள்ளேவிட வெளியேதான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதையே நான் எப்போதும் கைதிகளிடம் கூறுவோம்.
“அவர்கள் சிறையிலிருந்து விடுதலையானதும் என்னைத் தொடர்புகொள்வார்கள். நாங்கள் சந்திப்போம். நான் அவர்களைச் சீக்கியக் கோவில்களுக்கு அழைத்துச் செல்வேன்.
“அவர்கள் முகத்தில் அந்த மகிழ்ச்சி தெரியும்போது, அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எனக்கு நன்றிகூறும்போது எனக்கு ஈடில்லா மனநிறைவு கிடைக்கிறது. அதனால்தான் இத்தனை ஆண்டுகாலம் நான் சேவையாற்றி வருகிறேன்,” என்றார் 15 ஆண்டுகால தொண்டூழியத்துக்கான விருதைப் பெற்ற திரு சிங்.
தன்னம்பிக்கையை வளர்க்கும் ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ்’
20 ஆண்டுகளாகச் சிறைக் கைதிகளின் தொடர்புத் திறனை வளர்த்து அவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ்’ வழி துணைபுரிந்து வருகிறார் திருவாட்டி எலிசபெத் துரைராஜு, 65.
“எப்படி வேலையைத் தேடுவது, வர்த்தக வாய்ப்புகள் எந்தெந்த துறைகளில் உள்ளன, நேர்முகத் தேர்வில் எப்படிச் செய்வது போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கிறோம்,” என்றார் திருவாட்டி எலிசபெத்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 24 ஆண்டுகளாகப் விரிவுரையாளராகப் பணியாற்றி சென்ற மாதம் ஓய்வுபெற்றார் அவர்.
2005ல் தொடங்கிய ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ்’ சிறைத் தொண்டூழியர்க் குழுவின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார். அக்குழு 10 வாரத் திட்டங்களை வகுத்து சனிக்கிழமைகளில் சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளுக்கு வேலை தொடர்பான திறன்களைக் கற்பிக்கின்றது.
“ஈராண்டுகளுக்குப் பிறகும் அதே கைதிகளை மீண்டும் சிறையில் காணும்போது சற்று கவலையாகத்தான் இருக்கும். ஆனால், சில நேரத்தில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்,” என்றார் திருவாட்டி எலிசபெத்.
“அவர்கள் சிறையிலிருந்து விடுதலையானதுடன் கிடைக்கும் வேலைகளில் சம்பளம் அவ்வளவாகக் கிடைக்காது, அல்லது வேலையிடம் தூரமாக இருக்கும். அத்தகைய வேலைகளில் அவர்களால் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடிவதில்லை.
“சிலர் சமூகத்தில் சுயமரியாதை கிடைக்காததாலும் பழைய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக முன்னேற வழிகாட்ட வேண்டும்,” என்றார் திருவாட்டி எலிசபெத்.
கூடுதலானோரின் ஆதரவு தேவை
ஐந்து ஆண்டு தொண்டூழிய விருதைப் பெற்றார் முனீஸ்வரன் சமூகச் சேவைகளின் தொண்டூழியர் திரு கோபால கிருஷ்ணன், 41.
சிறையிலிருக்கும் இந்து கைதிகளுக்கு முனீஸ்வரன் சமூகச் சேவைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசனை வழங்கிவருகிறது.
“வாரயிறுதியில் இச்சேவையைச் செய்கிறோம். நாங்கள் அவர்களைக் கைதிகளாகப் பார்க்கவில்லை. ஏனெனில் சிலர் ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தில்தான் குற்றம் புரிகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் ஆலோசனை இடம்பெறும். எப்படி கோபத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை புராணக்கதைகள், எங்கள் வாழ்க்கை எடுத்துக்காட்டுகளுடன் உணர்த்துவோம்,” என்றார் அவர்.
“ஒருபடி மேலாக, மறுவாழ்வு, சிறைக்குப் பிந்தைய பராமரிப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறோம்.
“நம் சமூகத்தில் பலரின் ஆதரவும் தேவைப்படுகிறது. அப்படி இருந்தால் அவர்களை மீட்டெடுத்து சாதிக்கக்கூடிய மனிதராக மாற்றமுடியும்,” என்றார் திரு கோபால கிருஷ்ணன்.

