புக்கிட் கோம்பாக் வட்டாரத்தினரைக் கவர்ந்திழுத்த தீபாவளிக் கொண்டாட்டம்

மழை பெய்தபோதும் தொடர்ந்து பரிமாறப்பட்ட வாழையிலை விருந்து

புக்கிட் கோம்பாக் வட்டாரத்தினரைக் கவர்ந்திழுத்த தீபாவளிக் கொண்டாட்டம்

படம்: மக்கள் கழகம்

21 Nov 2026 - 6:00 am

2 mins read

புக்கிட் கோம்பாக் வட்டாரத்தில் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தீபாவளி ஒன்றுகூடல், கலகலப்புடன் இனிதே நடந்தேறியது.

மக்கள் கழகத்தின் ஆதரவுடன், புக்கிட் கோம்பாக்  இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த ‘புக்கிட் கோம்பாக் தீபாவளிக் கொண்டாட்டம் 2026’, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14, 2026) மாலை நடைபெற்றது.

ஏறக்குறைய மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31, புளோக் 372க்கு அருகில் மின்னும் வண்ண விளக்குகளின் ஒளிக்கிடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இன, சமய நல்லிணக்க வட்டம், தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம், ‘லவ் லிவ்’ (Love Live) ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள், கலைச்சாவடிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் எனப் பல அம்சங்கள் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு சேர்த்தன. இவற்றுடன், எட்டு வெள்ளிக் கட்டணத்தில் வாழையிலை விருந்தைக் குடியிருப்பாளர்கள் சுவைத்தனர்.

நிகழ்ச்சியின்போது மழை பெய்யத் தொடங்கியபோதிலும், மக்களின் உற்சாகமும் ஆற்றலும் கொண்டாட்ட உணர்வும் தொடர்ந்தது.

கேஎன்எஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குமார், தாம் கைப்பட மக்களுக்கு உணவு பரிமாறும்போது குடியிருப்பாளர்கள் மனதார வாழ்த்துவதை மிகப்பெரிய ஆசியாகவும் மனநிறைவாகவும் கருதுவதாகச் சொன்னார்.

கலாசார, சமூக, இளையர்துறை, எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சரும், தென்மேற்கு மாவட்ட மேயரும், புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகருமான லோ யென் லிங்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியைப் பற்றித் தமிழ் முரசிடம் பேசிய திருவாட்டி லோ, தீபாவளிக்காகப் பல்வேறு இனங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒரே பெரிய குடும்பமாக ஒன்றிணைந்து ஒளியின் திருவிழாவைக் கொண்டாடியதைச் சுட்டினார்.

“ஒரு சமூகமாக நாம் கலாசாரப் பாரம்பரியத்தையும் பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடும்போது, ஒருவருக்கொருவர் வாழ்வில் எவ்வாறு ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருகிறோம் என்பதை இத்தகைய சிறப்புத் தருணங்கள் நினைவூட்டுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவில் அவர் குடியிருப்பாளர்களுக்குத் தமது கைப்பட பிரியாணி பரிமாறி, உணவை மகிழ்ச்சியுடன் உண்ணுமாறு அன்புடன் உபசரித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவரும் 42 வயது சீ ரோங், “தீபாவளி போன்ற பண்டிகைகள் நமது குடியிருப்பாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும், சமூகத்திற்குத் திரும்பச் சேவை செய்யவும் இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது,” என்றார். 

வருகையாளர்கள் தங்களுக்குள் கலந்துபழகியது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாக மூத்த அடித்தளத் தலைவர் பிரமிளா கிலிட்டஸ் தெரிவித்தார்.

“கல்யாண விருந்துபோல சைவம், அசைவம் என இரண்டு வகை உணவுகளையும் மக்களுக்குப் பரிமாறுவதுதான் எங்கள் நிகழ்ச்சியின் மிகப்பெரிய அழகு. இந்தியர்கள் மட்டுமன்றி சீனர்களும் மலாய் இனத்தவரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் கலந்துகொள்வது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்