இம்மாதம் லிட்டில் இந்தியாவுக்கு வந்தாலே தீபாவளி உணர்வை சுற்றிலும் உணரமுடியும்.
தீபாவளி அணிகலன்களையும் உணவு வகைகளையும் வாங்க வரும் மக்கள் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன தீபாவளிச் சந்தைகளில் இடம்பெற்றுள்ள வணிகங்கள்.
செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 30 வரை தீபாவளி விழாக் கிராமம் அன்றாடம் காலை 10 முதல் இரவு 10 மணி வரை கேம்பெல் லேனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் பெர்ச் சாலை தீபாவளிச் சந்தையும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை அன்றாடம் காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றுவருகிறது.
வாடகை விலை உயர்வு, ஒரே சமயம் நடக்கும் வெவ்வேறு தீபாவளிச் சந்தைகள், மலேசியாவிற்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், இணையவழி வணிகங்கள் என இவ்வாண்டு கூடுதல் சவால்களை எதிர்நோக்கும் பல வணிகங்கள், மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காகப் புதிய உத்திகளைக் கையாள்கின்றன.
புதிய கடை, புதிய உணவு, அதிர்ஷ்டக் குலுக்கல்
பெர்ச் சாலையில் ஆண்டுதோறும் கடை வைத்துவரும் ‘சாய் ஓ கிலோக்’, இவ்வாண்டு முன்பைவிடப் பெரிய கடையைப் புதிய வடிவில் அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு பெரிய ஆட்டோ வடிவிலிருந்த கடை, இவ்வாண்டு இந்திய சாலையோர தேநீர்க் கடை போல, தென்னைமர கீற்றுகளால் அமைந்த கூரையுடன் காட்சியளிக்கிறது.
கடைக்கு வெளியே ரஜினி, வடிவேலு இருவரின் உருவப்படங்களும், மொத்தம் 10,000 வெள்ளி வரையிலான பரிசுகளைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்கலும் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
“இவ்வாண்டு புதிதாக, ‘குனாஃபா’ என்ற மத்திய கிழக்கு பலகாரத்தை இந்திய பாணியில் தயாரித்து, பாயசம் குனாஃபா, அப்பம் குனாஃபா, பால்கோவா குனாஃபா என மூவகையாக விற்கிறோம்.
“போட்டித்தன்மை உள்ளதுதான். ஆனால் ஆரோக்கியமான போட்டித்தன்மையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். மற்ற கடைகளுக்கும் செல்ல நண்பர்களை ஊக்குவிக்கிறோம்,” என்றார் ‘சாய் ஓ கிலோக்’ நிறுவனர் கிரிஷன் பிரகாஷ் நம்பியார்.
சிறப்புத் தள்ளுபடிகளுடன் உடை விற்பனை
“இவ்வாண்டு பிரபலமான உடைகள் எனப் பார்த்தால் நடுவில் பிளவு வடிவம் கொண்ட சுடிதார், ‘வி-நெக்’, நீண்ட கவுன் பனாரஸ் லெஹெங்கா, குறிப்பாக ஆடம்பர வடிவம் கொண்ட பட்டையுடன் அக்கால தாவணி போன்ற லெஹெங்கா, முதலானவை உள்ளன,” என்றார் பெர்ச் சந்தையில் கடை வைத்திருக்கும் சரஸ்.
தேக்கா நிலையத்தின் இரண்டாம் மாடியிலும் ‘அப்சரஸ்’ எனும் ஆடைக் கடை வைத்திருக்கும் அவர், தீபாவளிச் சந்தையில் மலிவான விலையில் விற்பதாகக் கூறினார்.
“இங்கு வருவோர் மலிவான விலைகளை எதிர்பார்ப்பதால் நாங்கள் 25 முதல் 60 வெள்ளி வரையில்தான் உடைகளை விற்கிறோம்.
“தேக்கா நிலையத்தில் 120 வெள்ளிக்கு விற்கும் உடை சில மீதமிருந்தால் இச்சந்தையில் 35 அல்லது 45 வெள்ளிக்கு விற்றுவிடுவோம்,” என்றார் சரஸ்.
பல பண்பாட்டுப் பலகாரங்கள்
“இந்திய பலகாரங்களோடு, மலாய் பாணியில் அச்சார், சீனர்கள் பெரும்பாலும் செய்யும் கிளோஸ் டார்ட் போன்றவற்றையும் நாங்கள் செய்து விற்கிறோம்.
“எங்கள் தனித்துவ காரமான கார்ன்ஃப்ளேக்ஸை மக்கள் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு அவை முழுவதுமாக விற்றுவிட்டன. அதனால் இவ்வாண்டு அவற்றை முன்னதாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம்,” என்றார் சுமார் 20 ஆண்டுகளாக தீபாவளிச் சந்தைகளில் கடை அமைத்துவந்துள்ள ‘அலிசா மஹால்’ உரிமையாளர் கத்திஜா பேகம்.
பலமாத உழைப்பு
“இந்தியாவிலிருந்து உடைகளை இறக்குமதி செய்வதால் ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் உடைகளை வாங்கினோம். தீபாவளிக்கான தனித்துவ உடைகளைத் திட்டமிட்டு நெய்யும் பணிகளுக்குச் சில மாதங்கள் எடுத்தன,” என்றார் 30 ஆண்டுகளாகத் தீபாவளிச் சந்தையில் கடை வைத்துள்ள ஸீஷான் இம்பெக்ஸ் நிறுவனர் முகமது ரஃபி.
சிங்கப்பூரின் வெப்பமான பருவநிலைக்கு ஏற்ப பருத்தி உடைகளை விற்பதாகவும் அவர் கூறினார்.