புதுமையான அம்சங்களோடு மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபத்திருநாள் நிகழ்ச்சிகள்.
ஆண்டுதோறும் வெவ்வேறு கருப்பொருளில் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வர, இவ்வாண்டு ‘திருவிழா’ எனும் கருப்பொருளில் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மகிழலாம்.
உள்ளூர்த் தொழில்முனைவர்கள் விற்கும் கைவினைப்பொருள்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை மாதத்தின் முதல் வாரயிறுதியில் நடைபெறும் திருவிழா மரபுடைமைச் சந்தையில் மக்கள் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரின் கடைசி கிளி சோதிடராகக் கருதப்படுபவரையும் காணும் வாய்ப்பு மக்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.
உணவுப் பிரியர்களுக்கு இரண்டாம் வாரயிறுதியில் உற்சாகமூட்டும் இந்திய சமையல் அனுபவங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. ‘மாஸ்டர்செஃப்’ சிங்கப்பூர் வெற்றியாளர் இண்டெர்ப்பால் சிங் பண்டிகைக்கால உணவுவகைகளான காடைக்கோழி, பிஸ்தா பிரியாணி ஆகியவற்றைச் செய்து காட்டும் நடவடிக்கை நடைபெறும்.
கலம்கரி கலை ஓவியப் பயிலரங்கில் கலந்துகொண்டு அதைப் பற்றி மேலும் ஆழமாக அறிந்திடும் வாய்ப்பையும் பொதுமக்கள் பெறலாம். மூன்றாவது வாரயிறுதியில் பூ கட்டும் பயிலரங்கில் கலந்துகொண்டு மகிழலாம்.
தீபாவளிப் பண்டிகை சார்ந்த கதைகளைப் பாரம்பரிய தோல் பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு எடுத்துக்கூறும் அங்கம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
லிட்டில் இந்தியா மரபைப் பற்றி அறிந்துகொள்ள லிட்டில் இந்தியா தோசை நடைபாதை அங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரயிறுதியில் லிட்டில் இந்தியா பரோட்டா நடைபாதை நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மரபுடைமை நிலையம் முதல்முறையாக ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு புதிய லிட்டில் இந்தியா தீபாவளிப் பண்டிகை வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் லிட்டில் இந்தியாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன என்பதை மக்கள் அந்த வரைபடத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
“புதிதாகச் சேர்க்கப்பட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சி, கிளி சோதிடர் அமர்வு ஆகியவை சுற்றுப்பயணிகளுக்கு அப்பாற்பட்டு சிங்கப்பூரர்களையும் அதிகம் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சிங்கப்பூரர்கள் மிகவும் விரும்புவது உணவு என்பதால், அதை சார்ந்த நிகழ்ச்சிகள் பல உள்ளன. தீபாவளிப் பண்டிகை என்றாலே லிட்டில் இந்தியா கண்டிப்பாக களை கட்டும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் வலியுறுத்துகின்றன,” என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் மரியா பவானி தாஸ் கூறினார்.
நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல்விவரங்களுக்கு http://indianheritage.org.sg இணையத்தளத்தை நாடலாம்.