கிரேத்தா ஆயர்-கிம் செங் குடியிருப்பாளர்களைத் தீபாவளிப் பேரின்பம் சென்றடைந்தது.
கிம் செங் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற விழாவில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகருமான திருவாட்டி ஜோசஃபின் டியோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“கிரேத்தா ஆயர்-கிம் செங் சமூகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி, வார இறுதியைச் சிறப்பாகச் செலவிட்டேன்! பண்டிகை உணர்வை உள்வாங்கினோம், சில நடன அசைவுகளில்கூட எங்கள் கைவண்ணத்தைக் காட்டினோம்,” எனத் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் டியோ பதிவுசெய்தார்
கிம் செங் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் சசிகுமார், “நாம் ஒரு சமூகமாக இணைந்து மகிழ்ச்சி, நட்பு, ஒற்றுமையைப் பாராட்டும் தருணம் இது!” என மக்களை வரவேற்றார்.
வசந்தம் ஸ்டார் பிரபலங்கள் பிரஜீத், ஸ்வேதா வழங்கிய பாடல்கள், ‘யுனிவர்சல் மழை’யின் நடனங்கள், நெறியாளர் பூபாலனின் உற்சாகமான வழிநடத்தல், விளையாட்டுகள் எனப் பல இனங்களையும் இணைக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அடித்தளத் தலைவர்களும் தன்னார்வலர்களும் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். மொத்தத்தில், தீபாவளி விழா மகிழ்ச்சியுடனும் சமூக ஒற்றுமையுடனும் சிறப்பாக நடைபெற்றது.

