இல்லங்களும் உள்ளங்களும் மகிழும் தீபாவளித் திருநாளன்று கொண்டாட்ட உணர்வை மெருகேற்றக் காலங்காலமாகப் பலகாரங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
இருப்பினும், வீட்டில் பலகாரங்களைச் செய்வதும் கடைகளில் பலகாரங்களை வாங்குவதுமாக இருந்துவந்த வழக்கம், அண்மைய காலமாகச் சற்று மாறுபட்டுள்ளது. இல்லங்களில் தயாரித்து விற்கப்படும் இனிப்புகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இல்ல வர்த்தகங்களின் எழுச்சி
கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது இல்லங்களிலிருந்து இயங்கும் வர்த்தகங்கள் எழுச்சி பெறத் தொங்கின. சமையல்மீது கொண்ட தங்களது பேரார்வத்தை லாபகரமான வர்த்தகமாகவும் பலர் மாற்ற முற்பட்டனர்.
தமது வீட்டிலிருந்து ‘பேஸ்திரிலவ்எஸ்ஜி’ (@pastrylovesg) வர்த்தகத்தை 36 வயது ஷீலா ஜெய், 2013ஆம் ஆண்டு பகுதிநேரமாகத் தொடங்கி பலகாரங்கள் தயாரித்து விற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதை முழுநேர வர்த்தகமாக்கியுள்ளார்.
‘காஜு கட்லி’ போன்ற பாரம்பரிய இனிப்பு வகைகளையும் ‘தேங்காய் குலா மேலகா பர்ஃபி’ போன்ற புதுமையான இனிப்புகளையும் கலந்து வழங்கும் இனிப்புப் பெட்டியை தீபாவளிக்காக விற்று வருகிறார் இவர்.
“தீபாவளி போன்ற பண்டிகைகள், மக்கள் தங்கள் கடந்தகால நினைவுகளில் திளைத்து மகிழும் தருணங்களாக நான் உணர்கிறேன்,” என்றார் அவர்.
“புதுவகை இனிப்புகள் மக்களுக்குப் பிடித்திருந்தாலும் அவர்களது இளமைக் காலத்தை நினைவூட்டும் பாரம்பரிய பலகாரங்களையும் விரும்புகிறார்கள்,” என்றார் அவர்.
அதிகளவில் பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு மாறாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இல்லங்களிலிருந்து செயல்படும் வர்த்தகர்களால் எளிதில் தங்களின் உணவுத் தயாரிப்பில் மாற்றங்கள் செய்ய முடிவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“குறைவான இனிப்பு, இயற்கை உணவுப்பொருள்கள்கொண்டு தயாரித்தல், பசையமில்லாத (Gluten-free) பலகாரங்கள் என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நான் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இது பெரிய நிறுவனங்களுக்குச் சவாலான ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் ஷீலா.
“வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் பலகாரங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக கவனத்துடன் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவற்றையே பெரிதும் விரும்புகிறார்கள்,” என்று கூறினார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இல்லத்திலிருந்து தமது தேங்காய் மிட்டாய் வியாபாரத்தைத் (@kalpscandies) தொடங்கிய மற்றோர் இல்ல வர்த்தகரான 38 வயது கல்பனா குணாளன்.
திருமதி கல்பனாவின் சொந்த செய்முறையுடன் தயாரிக்கப்பட்ட அவரது வண்ணமயமான தேங்காய் மிட்டாய்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்புள்ளது. ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின்போது சுமார் 50 குடும்பங்கள் முன்பதிவு செய்து தேங்காய் மிட்டாய்களை வாங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக அவரது வர்த்தகத்தை எளிதாக விளம்பரப்படுத்த முடிவதாகவும் சொன்னார். இதனால், குறைந்த நேரத்தில் அதிகமானவர்களைச் சென்றடைய முடிகிறது என்றார் அவர் .
சமூக ஊடகங்கள் வழியாக வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிவது தங்களது வியாபாரத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது என்ற ஒருமித்த கருத்தை இரண்டு வர்த்தகர்களும் கூறினர்.
இருப்பினும், குடும்பப் பொறுப்புடன் தனிநபராகப் பலகாரங்களைத் தயாரிப்பதில் தொடங்கி அவற்றைப் பெட்டிகளில் அடுக்கி வாடிக்கையாளர்களிடம் முறையாகச் சேர்ப்பதுவரை தாம் எதிர்நோக்கும் சவால்கள் பல என்றார் திருமதி கல்பனா.
“தனியாளாய் சமாளிக்க முடியாமல் பல பெரிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார் குமாரி ஷீலா.
காலங்கடந்து நீடிக்கும் பலகாரக் கடைகள்
இல்லங்களிலிருந்து இயங்கும் பலகார வர்த்தகங்கள் எழுச்சி கண்டபோதிலும், பாரம்பரிய பலகாரக் கடைகள் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள முயன்று வருவதைக் காணலாம்.
1995ஆம் ஆண்டில் பலகாரங்களுக்கெனக் கடை ஒன்றை சிராங்கூன் சாலையில் அமைத்த கோமள விலாஸ், பாரம்பரிய இனிப்பு வகைகளான அதிரசம், ஜாங்கிரி, பால் பேடா போன்றவற்றைத் தயாரித்து வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
பாரம்பரிய இனிப்பு வகைகளை நவீனத்துவம் கலந்து வழங்குவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ள இந்நிறுவனம், விசுவாசமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாக கோமள விலாஸ் இயக்குநர் ராஜகுமார் குணசேகரன் கூறினார்.
“இளைய தலைமுறையினர் பலர் அறியாத கெட்டி உருண்டை போன்ற தனித்துவமான பழமையான இனிப்புகளை நாங்கள் தீபாவளி பண்டிகையின்போது அறிமுகப்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார். நீண்டகால பாரம்பரியத்துடன் செயல்படும் கோமள விலாஸின் சேவைமீது வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் திரு ராஜகுமார்.
“ஆண்டுதோறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக எங்களிடம் பலகாரங்கள் வாங்க மீண்டும் மீண்டும் வரும் வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர்,” என்று அவர் கூறினார். மேலும், இணையம்வழி ஆர்டர் செய்து பலகாரம் விநியோகம் செய்யும் சேவையைத் தாங்கள் வழங்கினாலும் வாடிக்கையாளர்கள் பலர் நேரடியாகக் கடைக்கு வந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தையே விரும்புவதாகச் சொன்னார் அவர்.
தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின்போது, ஒன்றுகூடல்கள் நடப்பது வழக்கமான ஒன்று. இதுபோன்ற தருணங்களில் பாரம்பரிய பலகார வர்த்தகர்கள், இல்லங்களிலிருந்து இயங்கும் வர்த்தகர்களைவிட அதிகம் நாடப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் இயங்கிவரும் உணவு வணிகமான அஜ்மீர் ஸ்டோர்ஸ், பல ஆண்டுகளாகக் குடும்பங்கள், பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முதலியோரின் உணவுத் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. அதிகளவில் ஆர்டர்களை வழங்குவதோடு தீபாவளிக்குப் பிரத்யேகமாக இனிப்புப் பெட்டிகளையும் தயார்செய்து விற்று வருகிறது.
“இக்கால வாடிக்கையாளர்கள் முறுக்கு, ஓமப்பொடி போன்ற பாரம்பரிய தின்பண்டங்களுடன் பல்வேறு புதுமையான பலகார வகைகளையும் விரும்புகிறார்கள்,” என்றார் அஜ்மீர் ஸ்டோர்ஸின் இரண்டாம் தலைமுறை உரிமையாளர், முகமது சபுருதீன், 28.
மின்னிலக்க யுகத்திற்கு ஏற்றவாறு ஷாப்பி போன்ற தளங்களின் வழியாகவும் தங்களின் வர்த்தகத்தை நடத்தி வருவதாக திரு சபுருதீன் சொன்னார்.
மேலும், மக்கள் நேரடியாக வருகைதந்து பலகாரம் வாங்குவதற்கு ஆண்டுதோறும் தீபாவளிச் சந்தையில் சாவடிகளைத் தாங்கள் அமைப்பதாகவும் கூறினார்.
“ஒவ்வோர் ஆண்டும் பிரபலமாகிவரும் போக்குகளுக்கு ஏற்ப பலவிதமான புதிய தின்பண்டங்களையும் அறிமுகப்படுத்துகிறோம்,” என்றும் திரு சபுருதீன் கூறினார்.
காலத்தின் கட்டாயத்தால் பாதிக்கப்படாமல் தலைமுறைகள் கடந்து நிற்கிறது நூற்றாண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய உணவுக் கடையான ஆனந்த பவன்.
மக்களது மாறிவரும் விருப்பங்களுக்கேற்ப ஆனந்த பவன் அதன் தயாரிப்புகளை மாற்றியமைப்பதாகக் கூறினார் ஆனந்த பவனில் கேட்டரிங் விற்பனை நிர்வாகியான திருமதி நர்மதாதேவி குழந்தைவேலு, 44.
“நீரிழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரையைக் குறைத்து உட்கொள்பவர்களுக்கும் ஏற்றாற்போல் இனிப்பு வகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்கள் நேரடியாக எங்களிடம் வந்து சொல்லும் கருத்துகளை நாங்கள் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட முயற்சிப்போம்,” என்று திருமதி நர்மதாதேவி கூறினார்.
“சுத்தமான நெய் போன்ற உயர்தர பொருள்களை மட்டுமே பயன்படுத்தி அனைத்து பலகாரங்களையும் தினமும் தயார்செய்கிறோம். உடல்நலத்தைப் பாதிக்கும் எம்எஸ்ஜி போன்ற ரசாயனங்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை,” என்று விவரித்தார் அவர்.
பண்டிகைக் காலங்களில் மக்களை அதிகம் ஈர்ப்பது ஆனந்த பவனின் தீபாவளி பரிசுக் கூடைகள் என்று திருமதி நர்மதாதேவி பகிர்ந்துகொண்டார்.
“பல்வேறு இனிப்புகளுடனும் தின்பண்டங்களுடனும் நிரம்பியிருக்கும் எங்களது பரிசுக் கூடைகளில் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பலகாரம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும்,” என்றார் அவர்.
விலைவாசியின் தாக்கம்
விலைவாசி உயர்வால் மூலப்பொருள்களின் விலை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் லாபகரமாக இருக்க, பல வணிகங்கள் தாங்கள் வழங்கும் உணவுவகைகளின் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை நிலவுகிறது.
கடைகளுடன் ஒப்பிடும்போது ஓர் இல்ல வர்த்தகரது வாடகை, செயல்பாட்டுச் செலவுகள் குறைவாக இருப்பதாகவும் இணையம் வழியாக வர்த்தகத்தை நடத்துவதால் செலவுகளை ஓரளவு சமாளிக்க முடிவதாகவும் கூறினார் குமாரி ஷீலா.
இதனால், தமது பலகாரங்களின் விலையை அதிகம் மாற்றாமல் நிர்வகிக்க முடிகிறது என்றார் அவர். இருப்பினும், பலகாரங்களின் விலையைத் தாம் சிறிதளவு உயர்த்த வேண்டியிருந்தபோது, வாடிக்கையாளர்கள் தமது நிலைமையைப் புரிந்துகொண்டு தமக்கு ஆதரவளித்ததாகச் சொன்னார்.
“ஒரு கட்டத்தில் நான் கட்டாயமாக விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. ஆனால், ஏதேனும் மாற்றம் செய்வதற்கு முன் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்து முன்கூட்டியே இணைய வர்த்தகத்தளத்தில் தெரிவித்தேன்,” என்று தொற்றுநோய் பரவலின்போது தமது வீட்டு வணிகத்தைத் தொடங்கிய திருமதி கல்பனா பகிர்ந்துகொண்டார்.
அஜ்மீர் ஸ்டோர்ஸ் போன்ற பெரிய வர்த்தகங்கள் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாமல் நிலைமையைச் சமாளிக்க முடிந்ததாக திரு சபுருதீன் சொன்னார்.
“கொவிட் காலகட்டத்தில் விலைவாசி அதிகரித்தபோதுகூட நாங்கள் எங்களின் தயாரிப்புகளின் விலையை ஏற்றவில்லை. குறைந்த எண்ணிக்கையில் பலகாரங்களைத் தயாரிக்கும் இல்லம் சார்ந்த வர்த்தகங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அதிக அளவில் தயாரிக்கும் எங்களுக்கு அந்தக் கட்டாயம் இல்லை,” என்றார் அவர்.
மக்கள் கருத்து
சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் 22 வயது பல்கலைக்கழக மாணவி ஷ்ரேயா தாசன், இல்லங்களில் தயாரிக்கப்படும் பலகாரங்களையே வாங்க விரும்புகிறார்.
“நான் வாங்கும் பலகாரங்களை எனது விருப்பத்திற்கு ஏற்ப என்னால் தனிப்பயனாக்க முடியும் என்பது எனக்கு பிடித்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.
கடைகளுக்குச் சென்று பலகாரங்களை வாங்குவதைவிட இணையம்வழி இல்ல வர்த்தகர்களுடன் தொடர்புகொண்டு சுமுகமாகப் பலகாரங்களை வாங்குவது சுலபமாக இருப்பதாகவும் ஷ்ரேயா சொன்னார். இருப்பினும், பாரம்பரிய பலகார கடைகளின் சிறப்புகளையும் ஸ்ரேயா மறுக்கவில்லை.
“ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்போது குறைந்த விலையில் அதிக அளவு பலகாரங்களை கோமள விலாஸ் கடையிலிருந்து வாங்கி அக்கம்பக்கத்தாருக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதை என் அம்மா வாடிக்கையாகக் கொண்டுள்ளார்,” என்றும் சொன்னார் அவர்.
பழமை என்றும் இனிமை என்று கூறிய ஆனந்த பவனின் நீண்டகால வாடிக்கையாளர் திருவாட்டி ராஜலட்சுமி குமரேசன், 56, தம்முடைய இளமைக்காலத்தில் ஆனந்த பவனிலிருந்து இனிப்புகளைத் தம் தந்தை வாங்கியதை நினைவுகூர்ந்தார்.
“கடந்தகாலத்தில் என்னுடைய தந்தை நேரடியாகக் கடைக்குச் சென்று பலகாரங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ ஒரு தொலைபேசி அழைப்பின்மூலம் என்னுடைய தேவைகளை என்னால் நிறைவு செய்துகொள்ள முடிகிறது. நேர விரயமின்றி மாறா சுவையுடன் தரமான பலகாரங்களை வீட்டிலிருந்தே என்னால் பெற்றுக்கொள்ள முடிகிறது,” என்றும் சொன்னார் திருவாட்டி ராஜலட்சுமி.
கணக்கியல் துறையில் பணிபுரியும் திரு தி.சுரேஷ், 39, தமது அலுவலகத்தில் நடக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பாரம்பரிய கடைகளிலிருந்து பலகாரங்களையே வாங்க விரும்புவதாக சொன்னார்.
“பலவித பலகார வகைகளை ஒரே இடத்திலிருந்து பேரளவில் வாங்க முடிவதால் பெருநிறுவன தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு பாரம்பரியக் கடைகளைத் தேர்ந்தெடுப்பேன். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த எனது சக ஊழியர்களுக்கு விதவிதமான இந்திய பலகாரங்களை அறிமுகப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகவும் இருக்கிறது,” என்று அவர் சொன்னார்.