கைப்பேசிக் காணொளியில் வெளிநாட்டு ஊழியர்களின் தீபாவளி

கைப்பேசிக் காணொளியில் வெளிநாட்டு ஊழியர்களின் தீபாவளி

1 of 2
படம்: பே கார்த்திகேயன்
படம்: பே கார்த்திகேயன்

08 Nov 2026 - 12:00 pm

5 mins read

சிங்கப்பூரின் தேக்காவில் விளக்குகள் கண்சிமிட்டுகின்றன. கடைகளில் புதுத்துணி மணம், பட்டாசு வெடிக்கும் சத்தம், பலகாரக் கடைகளில் கூட்டம். ஆனால், இந்த ஒளி வெள்ளத்துக்கு நடுவே சில அறைகளில் மட்டும் வெளிச்சம் இல்லை. 

வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடங்களில் ஒரு கைப்பேசித் திரையில்தான் தீப ஒளி எரிகிறது. 

அது அவர்களின் தீபாவளி. ஊரில் குடும்பத்தை விட்டுவிட்டு, குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்ற இங்கே உழைப்பவர்களின் தீபாவளி.

12 ஆண்டுகளாக வராத அப்பா

வெளிநாட்டு ஊழியர் முத்துசாமி ஜெகதீசன்.
வெளிநாட்டு ஊழியர் முத்துசாமி ஜெகதீசன். - படம்: பே.கார்த்திகேயன்

திரு முத்துசாமி ஜெகதீசன், 42, சிங்கப்பூரில் தச்சராக வேலை பார்க்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பக்கம் இவரது ஊர். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளிக்கு ஊருக்குப் போனதே இல்லை.

“தீபாவளிக்கு ஊரில் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் உண்டு. ஆயினும், பிள்ளைகளுக்காக உழைக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வருவதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்ற நம்பிக்கையே போதும்,” என்று உணர்ச்சி மேலிடக் கூறினார் ஜெகதீஷ்.

ஊரில் அவரது மனைவி புஷ்பாஞ்சலி, மகள் ஜெயஸ்ரீ, மகன் ஜெயந்தன். ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, “தீபாவளிக்கு இங்க இருக்க மாட்டேங்கிறீங்க, அப்படி காசு சம்பாதிச்சு என்னதான் பண்றீங்க?” என்பதுதான். அதற்கு ஜெகதீஷ் சொல்லும் ஒரே சமாதானம், “வந்துடுவேன்... உங்க பிறந்தநாளுக்கு வந்துடுவேன்,’’ என்பதுதான்.

கடந்த மாதம் ஊருக்குப் போய் வந்தபோதே இந்த தீபாவளிக்கான பட்டாசுகளை வாங்கி நண்பரின் வீட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறார் இந்த அன்பான தந்தை. 

தீபாவளிக்கு முதல்நாள் அந்த நண்பர் பட்டாசுகளை இவரது வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவார். அப்பா இல்லாத வீட்டில், பட்டாசு மட்டும் அப்பாவுக்குப் பதிலாக வந்து சேரும்.

இங்கு திரு ஜெகதீஷின் தீபாவளி பொழுது குறித்துக் கேட்டபோது, அன்று சிங்கப்பூரில் விடுதி அறையில்தான் இருப்பேன் என்றவாறு பதில் கூறத் தொடங்கினார் அந்த ஊழியர். 

“தேக்கா பக்கம் போய் ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு ‘வீடியோகால்’ அழைப்பில் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அதுதான் எனக்குப் பெரிய மகிழ்ச்சி,” என்றார் அவர்.

இவரது நினைவில் இன்னும் இருப்பது சிறுவயது தீபாவளி. காலையில் அம்மா வரிசையாக உட்கார வைத்து எண்ணெய் தேய்த்துவிடுவார். குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பார்கள். யார் வீட்டு வாசலில் அதிக பட்டாசுக் காகிதம் கிடக்கிறது என்று போட்டி போட்டுப் பார்ப்பார்கள். “மறுபிறவி கிடைத்து அந்த நாள்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று ஏக்கத்துடன் கூறினார் திரு ஜெகதீஷ்.

இவரின்  மனைவி புஷ்பாஞ்சலி மறுமுனையில் தமிழ்நாட்டில் இருந்து கைப்பேசியில் பேசியபோது, “பண்டிகைக்கு கணவர் உடன் இருக்கவேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் எந்தத் தீபாவளிக்கும் அவர் எங்களுடன் இருந்தது இல்லை,” என்றார். 

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருக்கும் அப்பாவைக் கைப்பேசித் திரையில் பார்த்தவாறே பேசத் தொடங்கிய திரு ஜெகதீஷின் மகள் ஜெயஸ்ரீயின் குரல் உடைகிறது.

“அப்பாவைப் பிரிந்திருப்பதில் மிகுந்த வருத்தம். எல்லாரும் ஒருசேர அப்பாவுடன் வண்டியில போவது, கடைக்குப் போய் புத்தாடை வாங்கிக்கொண்டு வந்து, பிறகு  சாமி கும்பிட்டு பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சி எதுவும் எனக்கும் தம்பிக்கும் கிடைப்பதில்லை,” என்று கூறினார்.

எனினும், அம்மா சொன்னவுடன் அப்பா வருத்தப்படக்கூடாது என்பதற்காக முகத்தில் புன்னகையை வரவழைத்தவாறே, “ஹேப்பி தீபாவளிப்பா!” என்று வாழ்த்துக் கூறி முடித்தார் ஜெயஸ்ரீ.

பார்க்காத மகளின் முதல் தீபாவளி

வெளிநாட்டு ஊழியர் காசிநாதன் பிரபாகரன்.
வெளிநாட்டு ஊழியர் காசிநாதன் பிரபாகரன். - படம்: பே.கார்த்திகேயன்

இவ்வாண்டு தீபாவளி இன்னோர் இளந்தந்தைக்கு மிகவும் தனித்துவமிக்கது. அதே நேரம் மிகவும் வலி நிறைந்தது. சிங்கப்பூரில் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் திரு காசிநாதன் பிரபாகரன், 30. 

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து, அண்மையில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை மமிதா ரியா பிரபாவுக்கு இது முதல் தீபாவளி. ஆனால், அப்பிள்ளையின் அப்பாவால் அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்ச முடியவில்லை.

வெளிநாட்டில் பணிபுரியத் தொடங்கியதிலிருந்தே தீபாவளி, பொங்கல் என எந்தப் பண்டிகையையும் குடும்பத்துடன் கொண்டாட இயலவில்லை.

“ஆனால், இப்போது என் மகள் பிறந்திருக்கிறாள். குழந்தை பிறந்து இப்போது 20 நாள்கள்தான் ஆகின்றன. ஆனால், மற்ற அப்பாக்களைப் போல பிள்ளையைக் கையிலேந்தி மடியில் வைத்துக் கொஞ்சுவதற்கான கொடுப்பனை எனக்கு இல்லை. 

“இரவெல்லாம் குழந்தையின் நினைப்பாகவே இருக்கும். எங்கள் ஊரில் சாமி சிரிப்பு என்று சொல்வார்கள். அதாவது, குழந்தை உறங்கும்போது உள்ளிட்ட பல தருணங்களில்  சிரிப்பது.

“ஆனால், அதையெல்லாம் நேரில் பார்க்க முடியாமல் கைப்பேசித் திரையில்தான் பார்க்கிறேன்,” என்று கண்கலங்கியபடி பேசினார் இந்த இளந்தந்தை.

திரு பிரபாவின் ஆசைகள் எளிமையானவை. சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும், மனைவி, குழந்தையை நிம்மதியாக வைத்துக்கொள்ள வேண்டும்; அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என எல்லார்க்கும் உதவ வேண்டும் என்பதுதான் அது.

“பிறந்த குழந்தையை தூக்கிக்கொண்டு என் மனைவி மருத்துவமனைக்குப் போகும்போது மற்ற தம்பதிகளைப் பார்த்துவிட்டு என்னிடம் புலம்புவார்,” என்று சொல்லும்போது திரு பிரபாவின் குரல் தழுதழுத்தது.

இதற்கிடையே கைப்பேசி வழியாக இணைந்த திருவாட்டி பிரபா, “குழந்தையோட வளர்ச்சியை அருகில் இருந்து அவர் பார்க்க முடியாதது வேதனை. இப்படிக் கைப்பேசி அழைப்புகளிலேயே எங்கள் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று கலக்கமாக இருக்கிறது. அடுத்த ஆண்டாவது அவர் எங்களுடன் இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

அம்மாவின் அதிரசம் இல்லாத தீபாவளி

வெளிநாட்டு ஊழியர் சா.சூர்யா.
வெளிநாட்டு ஊழியர் சா.சூர்யா. - படம்: பே.கார்த்திகேயன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு சா.சூர்யா, 24, சிங்கப்பூர் வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. “இன்னும் ஒரு வருஷத்துல வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு வந்தவர், நான்கு ஆண்டுகளை இங்கேயே கழித்துவிட்டார்.

“தேக்காவில் தீபாவளி ஒளிவெள்ளத்தில் மிதக்கலாம். ஆனால், என் தீபாவளி வெளிச்சம் இல்லாமல்தான் உள்ளது,” என்றார் திரு சூர்யா.

ஊரில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என்றிருந்த நிலை மாறி. இப்போது தனிமையாகத்தான் இவரது நாள்கள் கழிகின்றன.

“இங்கு தீபாவளி நாளன்று கோயிலுக்குச் சென்றுவிட்டு,  சாப்பிட்டுவிட்டுத் தூங்க வேண்டியதுதான்,” என்றார் இந்த வெளிநாட்டு ஊழியர்.

“வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் கரும்பு வெல்லத்தில் அம்மா சுடும் அதிரசம், தேன்குழல், ராகி ரொட்டி பலகாரங்களை என் மனம் மிகவும் தேடுகிறது.

“ஆனாலும் என் மனநிறைவு ஒன்றுதான். வீட்டில் அம்மா, அப்பா, தம்பி, தங்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவைகளை நிறைவேற்றுவதுதான் எனக்கு தீபாவளி,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் இந்த இளையர்.

“தீபம் எப்படி வெளிச்சம் தருகிறதோ, அதுபோல் என் குடும்பத்தினர் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சியே என் மனத்தில் நிலைக்கும் வெளிச்சம்,” என்றார் திரு சூர்யா.

இந்த மூன்று வெளிநாட்டு ஊழியர்களின் கதைகள் வேறாக இருக்கலாம். ஆனால், அவர்களின்  வலி ஒன்றுதான்.

இவர்கள் இங்கே பட்டாசு வெடிக்கவில்லை, புதுத் துணி வாங்கவில்லை, அம்மா கைப்பட செய்த பலகாரம் சாப்பிடவில்லை. ஆனால், இவர்கள் இல்லாததால்தான் ஊரில் அவர்களின் வீடு முழுவதும் தீபாவளி சுடர்விடுகிறது.

இவர்கள் அனுப்பும் பணத்தில் குழந்தைகள் புத்தாடை அணிகின்றனர். இவர்கள் கைப்பேசியின் மின்னிலக்கத் திரையில் பார்க்கும் சிரிப்பில்தான் சொந்தங்களின் தீபாவளி இருக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் தனிமையே தாயகத்தில் அவர்கள் வீட்டில் தீபாவளி இனிமைக்குக் காரணம்!

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்தீபாவளிகொண்டாட்டம்குடும்பம்