லிட்டில் இந்தியாவில் ஆண்டுதோறும் களைகட்டும் தீபாவளிச் சந்தையில், அதிக வாடகை, கணிக்க முடியாத வாடிக்கையாளர் வருகை, கடுமையான வானிலை போன்ற சவால்களுக்கு மத்தியில், உணவு வீணாவதைத் தவிர்க்க விற்பனையாளர்கள் கவனத்துடன் செயல்பட்டுவருகின்றனர்.
முதல் முறையாகத் தீபாவளிச் சந்தையில் கடை அமைத்துள்ள ‘ஃபிளையிங் பப்படம்’ (Flying Papadam) நிறுவன உரிமையாளர் வனிதா சந்திரசேகரன், 43, உணவு விரயக் கட்டுப்பாடு தங்களுக்கு ஒரு முக்கியப் பொருளியல் சவால் என்று கூறினார்.
“தீபாவளிச் சந்தையில் பங்கேற்பது எங்களுக்குப் புதிய அனுபவம். அதிக வாடகை, மனிதவளச் செலவுகளால் எங்களது லாப வரம்பு மிகவும் குறைந்துள்ளது,” என்றார் வனிதா.
ஒவ்வொரு வெள்ளியும் முக்கியம் என்பதால், வீணாகும் ஒவ்வோர் உணவுப் பங்கும் தங்களுக்கு இழப்பாகவே முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உணவுக் கழிவுகளுக்கெனத் தனியாகக் குறிப்பிட்ட விழுக்காட்டை ஒதுக்காமல், சிறிய அளவில் சமைத்து விரயத்தைக் கட்டுப்படுத்துவதாக அவர் கூறினார்.
ஆப்பம் போன்ற உணவுகளை முன்கூட்டியே செய்யாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும்போது மட்டுமே தயாரிப்பதாக அவர் கூறினார்.
கடைகளில் உணவு நிறைந்து காணப்படுவது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றாலும், இரவில் கடை மூடும் வேளையில் தேவையற்ற விரயம் ஏற்படும் என்று குறிப்பிட்டார் வனிதா.
சிங்கப்பூரின் வெப்பமும் ஈரப்பதமும் திறந்தவெளியில் உணவை நீண்ட நேரம் சேமித்து வைக்க இடமளிப்பதில்லை.
“பொரித்த பானிபூரிகளைத் தவிர்த்து, மீதமாகும் பிற சமைத்த உணவுகளைப் பாதுகாப்பு விதிகளின்படி மறுநாள் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றை அப்புறப்படுத்துவேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, உணவு விரயத்தைக் கட்டுப்படுத்த நேரடிச் சமையல் முறையையே நம்பியுள்ளார் ‘சாய் ஓ கிளாக்’ (Chai ‘O’ Clock) நிறுவனர் எஸ்.சோபன் பிரகாஷ் நம்பியார்.
சந்தை நெரிசலை உடனுக்குடன் கவனித்து அதற்கேற்பச் சமைப்பதால் உணவு வீணாகும் அபாயம் பெரிதும் குறைகிறது என்று அவர் கூறினார்.
“நிர்ணயிக்கப்பட்ட தினசரி விற்பனை இலக்கைத் தாண்டும்போது உற்பத்தியை உடனுக்குடன் மாற்றியமைப்பேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், பெரும்பாலான உணவுப் பொருள்களை மறுநாள் விற்பனைக்குப் பயன்படுத்தும் வகையில் உறைய வைக்க முடிகிறது. இருப்பினும், தேங்காய் போன்ற விரைவில் அழுகும் பொருள்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் சோபன் குறிப்பிட்டார்.
மேலும், “தேநீர், காபி போன்ற பானங்களே அதிகம் விரயமாகின்றன. அவற்றை நாங்கள் மறுபயனீடு செய்ய முடியாது,” என்றார் அவர்.
இதற்கிடையே, உணவு வீணாவதைத் தவிர்ப்பதும், கழிவுகளைப் பிரித்தெடுப்பதும் குத்தகை ஒப்பந்தத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) தெரிவித்தது.
பொதுவான குளிரூட்டும் வசதிகள் வழங்கப்படுவதில்லை என்பதால், தனித்தனிப் பொட்டலங்களைப் பயன்படுத்தி உணவைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, குளிர்பதனப் பெட்டிகளுக்கான செலவுகளையும் விற்பனையாளர்களே ஏற்கின்றனர்.
சந்தையில் உணவு விரயம் மிகக் குறைவாக இருப்பதால், நள்ளிரவில் உணவு மீட்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த சேகரிப்பு நடவடிக்கை எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்று லிஷா தெரிவித்தது.
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே உபரி உணவு விநியோகிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
