புதுப்பிக்கப்பட்ட வீட்டில் விழாக் கூடல், குடும்பத்தின் புதிய வரவான ஏழு மாத விஷாந்திற்கு இது முதல் தீபாவளி என நான்கு தலைமுறையினர் சேர்ந்து வாழும் ரகுவீர் குடும்பத்தில் இந்த ஆண்டு தீபாவளி களைகட்டுகிறது.
திரு மங்களம் ராமநாதனும், 95, திருவாட்டி ரஜிதா ராமநாதனும், 84, அவர்கள் மகன் திரு ரகுவீர் ராமநாதன், 63, மருமகள் திருவாட்டி உஷா ரகுவீர், 58 ஆகியோர் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் பாரம்பரியமாக ஒன்றுகூடி தீபாவளி கொண்டாடுவது வழக்கம்.
மூன்றாம், நான்காம் தலைமுறைகளை சேர்ந்த முறையே திருவாட்டி வந்தனா ரகுவீர், 32, அவரது கணவர் திரு சிவராமன் லட்சுமணன், 34, அவர்களின் 4 வயது மகள் விருந்தா சிவராமன், 7 மாத மகன் விஷாந்த் சிவராமன், ஆகியோர் அருகிலிருக்கும் தெங்கா வட்டாரத்தில் வசிக்கின்றனர்.
1997ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த ரகுவீர் தம்பதியினர், 2001ல் நிரந்தரவாசத் தகுதி பெற்றதும் புக்கிட் பாத்தோக்கில் வாங்கிய அந்த வீட்டுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், தீபாவளியோடு இந்த ஆண்டு வீட்டின் வெள்ளி விழாவையும் கொண்டாடுகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற புதுப்பிப்பினால் வீடு புதுத்தோற்றம் பெற்றிருப்பதில் வணிக வளர்ச்சி இயக்குநரான திரு ரகுவீருக்கும் தற்காலிக ஆசிரியரான திருவாட்டி உஷாவிற்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
மணமானதும் அவர்கள் மகன், திரு ஹர்ஷ் ரகுவீர், அமெரிக்காவுக்கும், திருவாட்டி வந்தனா அருகிலிருக்கும் தெங்கா வட்டாரத்திற்கும் குடியேறினர்.
தமது மகன், அவ்வப்போது வீட்டுக்கு வரும் பேத்தி, கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதே தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகச் சொன்ன திரு மங்களம், கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது உண்மையில் ஒரு வரம் என்றார்.
“அன்புக்குரியவர்களால் சூழப்பட்டிருப்பது அனைத்தையும் சிறப்பாக்குகிறது. இந்த வயதில் நமக்குத் தேவையானது அன்பும், பாசமும், புரிதலும்தானே,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி ரஜிதா.
“பெற்றோர் நம்முடன் இருப்பது வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய ஆசீர்வாதம். அவர்கள் அருகில் இருப்பதால், எப்போதும் சரியான வழிகாட்டுதலுடன் முன்னேற முடியும்,” என்று திரு ரகுவீர் கூறினார்.
வீட்டிலிருக்கும் அனைவரும் தங்களால் முடிந்த விதத்தில் அன்றாட வீட்டு வேலைகளை மேற்கொள்கின்றனர்.
“என் மாமனார் காலையில் காய்கறிகளை நறுக்குவார். மாமியார் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். என் கணவர், சமையல் செய்வதோடு பாத்திரங்களையும் கழுவுவார்,” என்றார் திருவாட்டி உஷா.
தாம் வளர்ந்த வீட்டில், தமது குழந்தைகள் தாத்தா-பாட்டி, கொள்ளுத் தாத்தா-பாட்டியுடனும் வளர்வது வாழ்வில் ஓர் ‘முழு வட்டம்’ நிறைவடைந்த திருப்தியைத் தருவதாகக் கூறினார் திருவாட்டி வந்தனா.
மருத்துவர்களாகப் பணிபுரியும் வந்தனாவும் அவரது கணவர் சிவராமனும் வேலைக்குச் செல்லும்போது தமது குழந்தைகளைப் பெற்றோர் வீட்டில் விட்டுச் செல்வர்.
“தாத்தா-பாட்டி எனக்குப் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் கற்பித்தனர். இப்போது என் பெற்றோர் என் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த அனுபவத்தை தாத்தா-பாட்டிகளால் மட்டுமே வழங்க முடியும்,” என்று உறுதியாகச் சொன்னார் திருவாட்டி வந்தனா. ஏழு மாதமாகும் இவர்களது மகன் விஷாந்த் சிவராமனுக்கு இது முதல் தீபாவளி என்பதால் அவருக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
பினாங்கிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த திரு சிவராமன், மலேசியாவில் தமக்கும் பெரிய குடும்பம் இருப்பதாக குறிப்பிட்டார். “பெரிய குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. என் குழந்தைகளுக்கும் இந்த அரிய அனுபவம் கிடைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்றார் அவர்.
காலையில் பெரியவர்கள், அனைவருக்கும் தலையில் எண்ணெய் தேய்ப்பார்கள். பிறகு, புத்தாடைகளைக் கடவுளுக்கு வைத்து வணங்கியபின்னர், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
“ஒவ்வோர் ஆண்டும் என் மாமியார் தீபாவளி லேகியம் தயார்செய்வார். முறுக்கு, பாதுஷா போன்ற பாரம்பரியப் பலகாரங்களை குடும்பத்தினர் ஒன்றாகத் தயாரிப்போம்,” என்றார் திருவாட்டி உஷா.
மாலையில் அண்டை வீட்டாருடன் தீபாவளிக் கொண்டாட்டம் குதூகலமாக இருக்கும். “அனைவரும் விளையாட்டு மைதானத்தில் கூடுவோம். மத்தாப்புகள் கொளுத்தி, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து ஒன்றாக நேரம் செலவிடுவோம்,” என்றார் திரு ரகுவீர்.
“தீபாவளி என்றாலே எங்களுக்கு குடும்பத்துடன் ஒன்றுகூடல். நாள் முழுவதும் ஒன்றாகப் பேசி, சிரித்து மகிழ்ந்திருப்போம்,” என்றார் திருவாட்டி வந்தனா.