சிங்கப்பூரில் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அழகு சேர்ப்பவை தீபாவளிச் சந்தைகள்!
கண்ணைக் கவரும் அலங்காரங்கள், வண்ணப் புத்தாடைகள், நாவூற வைக்கும் சுவையான பலகாரங்கள். இவையே தீபாவளிச் சந்தைகளின் சிறப்பு. காலங்கள் மாற, தீபாவளிச் சந்தைகளின் சூழலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டுச் சந்தைகளில் மக்களின் அனுபவங்களும் சற்று மாறியுள்ளன. குறிப்பாக கேம்பல் லேன் தீபாவளிச் சந்தையில் திரண்ட மக்கள் சந்தையைப் பற்றி பலவித கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
“இந்த ஆண்டு பலகார விற்பனை, மருதாணி போடும் கடைகள் ஆகியவை ஒரு சில மட்டும்தான் உள்ளன. வீட்டு அலங்காரப் பொருள்களை விற்கும் கடைகளே பெரும்பாலும் வரிசையாக இருக்கின்றன. இருப்பினும், கடந்த ஆண்டுகளைவிடச் சந்தையில் இவ்வாண்டு போடப்பட்டுள்ள கடைகள் குறைவாக உள்ளன,” என்றார் தவமணி தேவி.
விஷ்ணுபிரியா, “சந்தையில் இவ்வாண்டு உற்சாகக் கூச்சலும் குதூகலமும் சற்று மந்தமாகவே உள்ளன. கடந்த பல ஆண்டுகளில், சந்தையில் கூடாரம் கட்டி, மாலையும் தோரணங்களும் தொங்கின. ஆனால் இந்த ஆண்டு அந்தக் காட்சி இல்லை,” என்றார்.
“இங்குக் கடைகள், பொருள்கள் என ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. என் பிள்ளைகளுக்குத் தீபாவளிப் பலகாரங்களைச் சுவைத்துப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். இங்கு ஏராளமான புதுவிதப் பலகாரங்களும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,” என்றார் கிருஷ்ணவேணி செல்லமுத்து, 46.
“பெரும்பாலோர் தீபாவளிக்குப் பொருள்கள் வாங்க மலேசியா சென்றுவிடுவதால் சந்தையில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்குப் பொருள்களின் விலைகளும் நிச்சயம் உயர்ந்துள்ளன, இருப்பினும் இங்குக் கடைகள் போட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்,” என்றார் 43 வயதான தேவா.
“கூடாரம் அமைக்கப்படாததால் இவ்வாண்டுச் சந்தையில் உற்சாகம் சற்றுக் குறைவாகவே உள்ளது. இருப்பினும் அது நம் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும். கடைகள் என்றும்போல் சிறப்பாகவே இருக்கின்றன, விலைகளும் கட்டுப்படியாகும் நிலையில்தான் இருக்கின்றன,” என்றார் சித்திரா அர்ஜுனன், 55.
