செங்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆங்கர்வேல் சமூக மன்றத்தின் பண்பாட்டு நிகழ்ச்சிகள், குடும்ப நடவடிக்கைகள் ஆகியவற்றோடு வட்டாரவாசிகள் தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடினர்.
ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களாகப் பணியாற்றிய இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஸ்ரீதர் கலவகுண்டா, குடிமக்கள் ஆலோசனைக் குழு உதவிச் செயலாளர் ஜோகனஸ் ஆகியோரின் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலை ஐந்து மணி அளவில் சிறாருக்கான ஓவியம், வண்ணம் தீட்டும் போட்டிகளுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின.
போட்டியில் சிறந்த நிலையை அடைந்தவர்கள் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
மேடை நிகழ்ச்சிகள் பாரம்பரிய இந்தியப் பண்பாட்டு நடனங்களுடன் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பண்பாடுகளையும் மரபுகளையும் எடுத்துக்காட்டும் நடனங்கள் இடம்பெற்றன.
செங்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான டாக்டர் லாம் பின் மின்னுக்குச் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவின் சிறப்பு அங்கமாக குடும்பக் கலைப்படைப்பு இடம்பெற்றது. அதில் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றிணைந்து கலைப்பொருள்களை உருவாக்கினர். நிகழ்த்துகலை அங்கங்கள் மட்டுமன்றி, மன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் வண்ணமயமான தீபாவளி அலங்காரங்களால் விழா அரங்கம் அழகுற அலங்கரிக்கப்பட்டு பண்டிகை உணர்வைப் பெருக்கியது.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த குடியிருப்பாளர்கள் பாரம்பரிய முறுக்கு, புத்துணர்ச்சியூட்டும் மசாலா தேநீருடனும் நினைவுப் பரிசுகளுடனும் வரவேற்கப்பட்டனர்.
குடும்பங்கள், குடியிருப்பாளர்கள், விருந்தினர்கள் என அனைவர்க்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது.
இந்தக் கொண்டாட்டம் பண்டிகை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், சமூகத்தை ஒன்றிணைக்கவும் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டு மரபைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
