இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை (நவம்பர் 27) சிறப்பாக நடைபெற்றது.
பிஜிபி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் 10 முக்கிய சமயங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் உள்ளிட்ட 175க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள், உட்லண்ட்ஸ் ரென் சி தாதிமை இல்லத்தில் வசிப்பவர்கள், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் ‘ட்ரீம்கேச்சர்’ திட்டத்தைச் சேர்ந்த இளையர்கள், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘வாழும் கலாசாரம்’ பாடத் தொகுதியில் (living culture module) பயிலும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சட்ட, போக்குவரத்து துணையமைச்சர் முரளி பிள்ளை பங்கேற்றார்.
இன, சமய மோதல்கள் நிறைந்திருக்கும் இன்றைய உலகில், சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கல்ல என்று கூறிய திரு முரளி, இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிக்கலான தலைப்புகளைப் பற்றிய கருத்துகளை மரியாதையுடன் கலந்துரையாட ஒரு தளத்தை வழங்குவதாகச் சொன்னார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து அனைத்துச் சமய மன்றத்துக்கு $30,000க்கான காசோலையைத் திரு முரளியின் முன்னிலையில் வழங்கின.
“கடந்தஏழு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியின்வழி அனைத்துச் சமய மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு நமது ஆதரவைக் காட்டி வருகிறோம்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன்.
சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளானது சமயத் தலைவர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்றும் அனைவரும் இணைந்து வன்முறையற்ற ஒற்றுமையான உலகத்தை அமைப்பதற்கு நமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார். சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தைச் (சிஃபாஸ்) சேர்ந்த நடனக் குழுவினர் படைத்த பரதநாட்டியம், கதக் ஆகிய நடனங்களையும் ‘சூர்யா சிங்கப்பூர்’ குழுவின் பாரம்பரிய நடனத்தையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, இந்து இளையர் கட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த கலை, கட்டடக்கலை வகைகளைப் பற்றிய விளக்கக்காட்சி ஒன்றைப் படைத்தனர்.
தீபாவளிப் பண்டிகையை மற்ற சமயத்தினருடன் இணைந்து கோவில் வளாகத்தில் கொண்டாடும்போது அது மேலும் சிறப்படைகிறது என்றும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார் இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் க. செங்குட்டுவன்.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்கம், சமயம், கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மேலும் பல நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டு நடத்த திட்டங்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் இந்து இளையர் கட்டமைப்பின் சமூக ஊடகத் தலைவருமான அமிர்தா மாதவன், 22, மேலும் பல இளையர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதரவளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“இளையர்களுக்குச் சமய நல்லிணக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு பெரும்பாலும் பள்ளிகளில்தான் கிடைக்கிறது. இந்தத் தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்வதால் பல்வேறு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி புதிய கண்ணோட்டங்களைப் பெற முடிகிறது,” என்றார் அவர்.