செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் அண்மையில் புதிதாக உருவானதன்று; கடந்த பல ஆண்டுகளாகவே நம் அன்றாட வாழ்க்கையில் பல விதங்களில் பயன்படுத்தப்படும் அம்சம்தான் என்றாலும் உரையாடும் திறனை அது பெற்றதை அடுத்தே ‘ஏஐ’ குறித்துப் பரவலாக இப்போது பேசப்படுகிறது என்கிறார் முனைவர் திவ்யா கந்தப்பு.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ எனும் புதிய வலையொளித் தொடரில், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், சாத்தியக்கூறுகள், கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
“அன்றாட வாழ்க்கையில் நாம் வாகனம் ஓட்டுகையில் ‘கூகல் மேப்ஸ்’ செயலி மாற்றுப் பாதைகளைப் பரிந்துரைப்பதும், கைப்பேசியை விரல் ரேகை அல்லது முக அடையாளம் மூலம் திறப்பதும் (பயோமெட்ரிக்ஸ்) ‘ஏஐ’ செயல்பாடுகள்தான். கிராப் போன்ற செயலிகளில் மழைக்காலங்களில் தேவைக்கேற்ப கட்டணம் மாறுபடுவதும் ‘ஏஐ அல்காரிதம்’ மூலமே தீர்மானிக்கப்படுகிறது. சாட்ஜிபிடி, கிளோட், ஜெமினை போன்ற ‘பெரிய மொழி மாதிரிகள்’ (Large Language Models) மனிதர்களைப் போலவே உரையாடும் திறன் பெற்றிருப்பதால், தற்பொழுது ஏஐ பற்றிய பேச்சும் விவாதங்களும் அதிகரித்துள்ளன,” என்றார் முனைவர் திவ்யா.
சாட்ஜிபிடியை எடுத்துக்கொண்டால், மனிதர்களைப்போல் ஓர் அம்சத்தைப் பார்த்துப் பகுத்தறியும் திறன் அதற்கு இல்லை என்பதையும் மில்லியன்கணக்கான தரவுகளைக் கொண்டு அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
ஒருவேளை தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை கவனத்தில் கொண்டு திருத்திக்கொள்ளும்; அதே கேள்வியை வேறு யாராவது கேட்கையில் திருத்திக்கொண்ட அடிப்படையில் பதிலளிக்கும். தனிப்பட்ட விவரங்களை ஓரளவிற்குமேல் அதில் பகிரக்கூடாது என்று முனைவர் திவ்யா கூறினார்.
தகவல் பாதுகாப்பாக இருக்காது என்பது மட்டுமன்றி, ஒருவர் பகிரும் படங்கள், காணொளிகளைப் பயன்படுத்தி போலியான படங்களையும் காணொளிகளையும் குரல் பதிவுகளையும் உருவாக்க முடியும் என்பதை அவர் சுட்டினார்.
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று கூறுவதைப்போல இந்தப் போலிகளை அடையாளம் காண வேண்டியது நம் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடலில் அணியக்கூடிய கருவிகளில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் கிடைக்கும் நன்மைகளை அவர் எடுத்துரைத்தார். கண் கருவிழி அசையும் தன்மை, வேகத்தை அளவிட்டு அதன் மூலம் ‘பயோமெட்ரிக்’ சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அதன் தொடர்பில் தாங்கள் மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும் முனைவர் திவ்யா பகிர்ந்துகொண்டார்.
உடல்நலம் சார்ந்த எச்சரிக்கைகளை எழுப்பவும் புலனாய்வில் போலியான படம் அல்லது காணொளியின் மாறுபாட்டை அடையாளம் காணவும் இது உதவும் என்றார் அவர்.
அதேபோல் காதொலிக் கருவி மூலம் சுவாசத்தின் இயல்பைக் கண்டறியும் ஆய்வு செய்ததாகவும் அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவைக் கல்வியில் பயன்படுத்தக்கூடிய விதம், பயன்படுத்தக்கூடாத விதம் தொடர்பான ஆய்வை மேற்கொள்கிறார். கல்வி அல்லது விளையாட்டில் ‘ஏஐ’ தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட நிலையில் பெற்றோர் பிள்ளைகளிடன் கண்டறிய வேண்டிய அபாய எச்சரிக்கை அறிகுறிகள் (Red flags) குறித்துக் கவனமாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அனைத்தையும் ‘ஏஐ’யிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு எழுதும் கல்விக் கட்டுரை வளர்ச்சிக்கான பாதையன்று என்றார்.
தற்போதைய சூழலில், இளையர்க்கு ‘ஏஐ’ தயார்நிலை மிக அவசியம் என்றும் அவர் விவரித்தார். ஆனால், எளிதாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கதிகமாக செயற்கை நுண்ணறிவையே சார்ந்திருந்தால் பகுத்தறியும் சிந்தனையே அற்றுப் போகக்கூடிய அபாயம் இருப்பதையும் அவர் சுட்டினார்.
தேர்வுகளில் மாணவர்களின் விடைத்தாளை ‘ஏஐ’ மூலம் திருத்துவது குறித்தும் முனைவர் திவ்யா விளக்கமளித்தார்.
‘ஏஐ’ சொல்லும் எல்லாவற்றையும் நம்புவது கவலைக்குரியது என்றாலும் ஒட்டுமொத்தத்தில் அந்தத் தொழில்நுட்பமே பிழையானது என்று அச்சமும் தவறு என்கிறார் முனைவர் திவ்யா.
“செயற்கை நுண்ணறிவு என்பது வரமா சாபமா என்பது நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. மனிதர்கள் தங்களின் தனித்துவமான எழுத்து நடை, பேச்சு நடை போன்ற திறன்களை இழக்காமல், ‘ஏஐ’யை ஒரு துணைக் கருவியாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
