சங்க காலத்தில் முடிசூடிய மன்னரின் வெற்றியைக் கொண்டாடி வரவேற்ற கோலாகல நடனமே தேவராட்டம். ‘தேவர்களின் ஆட்டம்’ என்று பொருள்படும் இக்கலை வெறும் நடனம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வரலாறு ஆகும்.
இதுகுறித்த வரலாற்றுத் தகவல்களை சுவையாக வழங்குகிறது தமிழ் முரசும் ஆட்டம் அமைப்பும் இணைந்து வழங்கும் ‘நம் மரபு: ஒரு பார்வை’ எனும் புதிய காணொளித் தொடர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எஸ்பிளனேடில் மேடையேறிய ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ 20 மரபுக்கலைகளைப் படைத்தது.
நிகழ்வைத் தொடங்கி வைத்த தேவராட்டத்தில் நடனமணியாகப் பங்கேற்றார் 44 வயது திரு மணிகண்டன் ஸ்ரீனிவாசன்.
பொதுச்சேவையில் மின்னியல் துறையில் பணிபுரிபவரும் நடன ஆர்வலருமான அவர், தேவராட்டத்தை முதன்முதலில் பயின்று அரங்கேற்றிய அனுபவத்தை காணொளித் தொடரில் விவரித்தார்.
இந்நடனத்தின் தனித்துவமான உடல்மொழியையும், போர்க்கலையைப் போல் தோன்றும் கை அசைவுகளையும் கற்றுக்கொண்ட பயணத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை ஆகியவற்றில் தேவராட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிபெற்று ஊர்திரும்பும் அரசரின் தேருக்கு முன்னும் பின்னுமாக வீரர்களும் ஊர் மக்களும் ஆடி மகிழ்ந்த இந்த ஆட்டம், இன்று தமிழ்நாட்டில் திருமணங்களில், கோயில் திருவிழாக்களில், சமூகச் சடங்குகளில் மிளிர்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தேவராட்டம் புகழ்பெற்று விளங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு காலத்தில் ஆண்களால் ஆடப்பட்டு வந்த இந்தக் கலை, இன்று பெண்களும் களமிறங்கி ஆடும் ஒரு பொதுக்கலையாகப் பரிணமித்துள்ளது.
நடனமணிகள் காலில் சலங்கை கட்டி, பெரும்பாலும் நெடுவரிசைகளில் நிற்பர். கைகால் அசைவுகளே தேவராட்டத்தில் முக்கிய அங்கமாக இடம்பெறுகின்றன.
தேவராட்டத்தின் உயிர்நாடியாக திகழ்வது உறுமி மேள இசை.
பாரம்பரிய தேவராட்டத்தில் பாடல்கள் கிடையாது; தாளத்தின் வேகமே ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிறது. மெதுவாகத் தொடங்கி, வேகம் கூடும் இந்த ஆட்டத்தில் மொத்தம் 72 அடவுகள் உள்ளன.
பல்வேறு இந்திய மரபுக்கலை வடிவங்களைப் பயின்று மேடையேற்றிய கலைஞர்களின் நேரடி அனுபவப் பகிர்வாக இக்காணொளித் தொடர் அமைகிறது. இப்புதிய கலைப்பயணத்தை இங்கே காணலாம்:

