அந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையிலேயே உங்கள் நண்பரிடமிருந்து வந்ததுதானா?

அந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையிலேயே உங்கள் நண்பரிடமிருந்து வந்ததுதானா?

படம்: செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு

29 Oct 2026 - 6:00 am

3 mins read

நம்மில் பலரின் அன்றாடத் தகவல் தொடர்பில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குடும்ப உரையாடல்கள், பள்ளிக் குழுக்கள், சமூக நடவடிக்கைகள், அலுவலக விவாதங்கள் எனப் பலவற்றுக்கும் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறோம்.

நமக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து செய்தி வரும்போது, அதை இயல்பாகவே நம்புகிறோம். இந்த நம்பிக்கையைத்தான் மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

உங்களுக்கு இப்படியொரு செய்தி வரலாம். “வணக்கம், இது என்னுடைய புதிய தொலைபேசி எண். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

அல்லது, “அவசரமாக ஒரு பணப் பரிமாற்றம் செய்ய உதவ முடியுமா? இன்றிரவே பணத்தைத் திருப்பித் தருகிறேன்,” என்று வரக்கூடும்.

செய்தி அனுப்பியவரின் பெயர் நீங்கள் அறிந்த ஒருவருடையதாக இருக்கலாம். அவரது படம்கூடச் சரியானதாகத் தோன்றலாம். ஆனால், அந்தச் செய்தியை அனுப்பியவர் உண்மையில் அவர்தானா?

தெரிந்தவர்களின் பெயரில் மோசடி

நமக்குத் தெரிந்த ஒருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் பொதுவான உத்திகளில் ஒன்று.

தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாகக் கூறும் மோசடிக்காரர், சிறிது நேரம் உரையாடிய பிறகு பணம் அல்லது வேறு ஏதேனும் உதவி கேட்கலாம். மற்றோர் ஆபத்து, ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கையே மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.

ஏற்கெனவே நமது தொடர்புப் பட்டியலில் உள்ள ஒருவரின் கணக்கிலிருந்து செய்தி வரும்போது, அதைச் சந்தேகிப்பதற்கான வாய்ப்பு இன்னும் குறைவாக இருக்கலாம்.

எனவே, நமக்குத் தெரிந்தவரின் பெயர் அல்லது வாட்ஸ்அப் கணக்குக்கான படத்தை மட்டும் ஒருவரின் அடையாளத்திற்கான ஆதாரமாகக் கருதிவிடக்கூடாது.

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் எதிர்பாராத விதமாகப் பணம், முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான உதவியைக் கேட்டால், வாட்ஸ்அப் செயலிக்கு வெளியே வேறொரு வழியில் அந்தக் கோரிக்கையைச் சரிபாருங்கள்.

நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ள அவரது தொலைபேசி எண்ணுக்கு நேரடியாக அழையுங்கள். 30 நொடிகள் செலவிட்டுப் பேசிச் சரிபார்ப்பதுகூடப் பெரும் பண இழப்பைத் தவிர்க்க உதவும்.

உங்கள் வாட்ஸ்அப் கணக்கையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சில எளிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

முதலில், வாட்ஸ்அப் செயலியின் ‘செட்டிங்ஸ்’ (Settings) பகுதியில் உள்ள பாதுகாப்பு, தனியுரிமை அமைப்புகளைப் பார்வையிடுங்கள். இரண்டு படிநிலைச் சரிபார்ப்பு (Two-step verification) வசதியைச் செயல்படுத்தி, மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உங்கள் தனிநபர் அடையாள எண்ணை (PIN) உருவாக்குங்கள்.

உங்கள் வாட்ஸ்அப் சரிபார்ப்புக் குறியீட்டையோ இரண்டு படிநிலைச் சரிபார்ப்புக்கான தனிநபர் அடையாள எண்ணையோ யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை யாராவது கேட்டால், விழிப்படைந்து எச்சரிக்கையாக இருங்கள்.

அதேபோல், உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதற்கு வாட்ஸ்அப் செயலியில் உள்ள ‘லிங்க்டு டிவைசஸ்’ (Linked Devices) பகுதிக்குச் செல்லுங்கள்.

அங்கு உங்களுக்குத் தெரியாத கணினி அல்லது வேறு சாதனம் இணைக்கப்பட்டிருப்பதைக் காண நேரிட்டால், உடனடியாக அந்தச் சாதனத்தின் இணைப்பை நீக்குங்கள்.

உங்கள் படம், நிலைத்தகவல் (Status), பிற கணக்கு விவரங்களை யார் பார்க்கலாம் என்பதையும் தனியுரிமை அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இணைய இணைப்புகளைத் திறப்பதற்குமுன் சிந்தியுங்கள்

உங்கள் நண்பரிடமிருந்து வருவதாகத் தோன்றும் செய்தியில்கூட ஆபத்தான இணைய இணைப்பு இருக்கலாம். அவரது வாட்ஸ்அப் கணக்கு மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கலாம். அல்லது, வேறொருவர் அவரைப்போல ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம்.

எனவே, நமக்கு அறிமுகமான ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி வருவதாகத் தோன்றினாலும், மின்னிலக்கப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

பணம் அனுப்புவதற்கு முன்பும், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும், எதிர்பாராத இணைய இணைப்புகளைத் திறப்பதற்கு முன்பும் விழிப்புடன் செயல்படுங்கள்.

முதலில் நிதானியுங்கள். செய்தி அனுப்பியவரின் அடையாளத்தைச் சரிபாருங்கள். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு

வாட்ஸ்அப் செயலியில் இரண்டு படிநிலைச் சரிபார்ப்பைச் செயல்படுத்துங்கள். உங்கள் சரிபார்ப்புக் குறியீட்டை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

அறிமுகமான படம் ஒருவரின் உண்மையான அடையாளத்திற்கான ஆதாரமன்று.

கட்டுரையாளர்: எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு, உதவி இயக்குநர், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் செயலாக்கத் துறை, தேசியக் கல்விக் கழகம்.

குறிப்புச் சொற்கள்