சமூகங்களின் பண்பாட்டையும் வாழ்வியலையும் எடுத்துக்காட்டும் முக்கியச் சான்றுகளாகச் சந்தைகள் திகழ்கின்றன.
தீபாவளிச் சந்தைகளில் பொருள் விற்பனையே முதன்மையாகத் திகழ்ந்தலும், விற்கப்படும் பொருள்கள் பண்பாட்டின் அடிநாதமாகத் திகழ்கின்றன.
சந்தைகளில் ஒளிரும் அலங்காரங்களிலும் ஒலிக்கும் பாடல்களிலும் பேசப்படும் தமிழிலும் நம் பண்பாடு துடிப்புடன் வாழ்கிறது.
குறிப்பாக, முப்பது ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் பர்ச் சாலைச் சந்தை, தீபாவளிக் காலத்தில் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஒன்றாக விளங்குகிறது.
இந்துக்களுக்கு தீபாவளி முக்கியப் பண்டிகை என்பதால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தரமான பொருள்களைக் கடைக்காரர்கள் சிரமப்பட்டுத் தருவிக்கின்றனர்.
தரமற்ற மலிவுப் பொருள்களையோ பிறர் ஏற்கெனவே பயன்படுத்தியதையோ நாம் விழாக்காலங்களில் வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை.
இப்படியிருக்க, தீபாவளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வணிகங்கள் சில, தீபாவளிச் சந்தையில் இடம்பெற்றிருப்பது விந்தை.
மற்றப் பொருள்களை விற்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், வழக்கமான இரவுச் சந்தை (பாசார் மாலாம்) பாணியிலான பொருள்களுக்கும் விளையாட்டு இயந்திரங்களுக்குமான இடம் தீபாவளிச் சந்தையன்று.
பண்டிகைக்குச் சற்றும் தொடர்பில்லாத இந்தக் கடைகள், தீபாவளிப் பொருள்களை விற்கும் கடைகளைக் காட்டிலும் பாதி அளவிற்கே வாடகை செலுத்துகின்றன.
வழக்கமான இரவுச் சந்தைக் கடைகள் இருக்கும் பகுதியில் கடை அமைத்தால் வாடிக்கையாளர்கள் தவிர்க்கக்கூடும் என அஞ்சி, வணிகர்கள் சிலர் கூடுதல் வாடகை செலுத்தி, சந்தையின் முன்பகுதியில் கடை அமைத்துள்ளனர்.
ஒருவேளை, வழக்கமான இரவுச் சந்தைக் கடைகளுக்கு அனுமதி மறுத்தால் அல்லது அக்கடைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினால் வாடகை இடத்தைப் பொறுத்து பெரிய வேறுபாடின்றி சீராக இருக்கலாம்.
தீபாவளிக் காலத்தில் லிட்டில் இந்தியாவில் நடத்தப்படும் சந்தையில் தீபாவளிக் கடைகளுக்குச் சிறப்பான வாடகைத் தள்ளுபடி வழங்கப்பட்டால் வணிகர்கள் பலரும் அங்குக் கடைபோட ஆர்வம் காட்டலாம்.
இளைய வணிகர்களை அழைத்து, அவர்களுக்கு ஏற்ற வாடகையில் இடமளிக்க ஏற்பாட்டாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும். ஏனெனில், இத்தகைய சந்தைகள் தொடர்ந்து தழைப்பதில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
புதிதாக உருவாகும் அத்தகைய வணிகங்களுக்குத் தளம் அமைத்துத் தரும் சமூகக் கடமை, இந்து அறக்கட்டளை வாரியம், தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகம் உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் உள்ளது.
முக்கியமாக, மின்விசிறிகள், குளிரூட்டிகள் போன்ற அடிப்படை வசதிகளை அதிகரித்தால் கடை நடத்துவோர்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் அனுபவம் நல்ல விதமாக மாறும். மாறிவரும் சூழலுக்கும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த மேம்பாடு ஈடுகொடுக்கும்.
தீபாவளிப் பொருள்களுக்கான தேவை குறையவில்லை. மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று பொருள் வாங்குவோர் இருந்தாலும் சிங்கப்பூர்க் கடைக்காரர்கள், இங்குள்ள மக்களையே சார்ந்துள்ளனர். எனவே, உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்போதுதான் இதுபோன்ற சிறப்புச் சந்தைகள் எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும்.
பண்பாட்டு வணிகங்களின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் வணிகநலன்களைத் தாண்டிய சமூக அக்கறையும் உண்டு என்பதால் விரைவான மாற்றங்கள் தேவை!
