தேக்கா வட்டாரத்தை வெளிநாட்டு ஊழியர்கள் நாடுவதற்கான முக்கிய காரணங்களில் ‘சைமன் பல் மருத்துவமனை’யும் ஒன்று.
கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக, 1988 ஆம் ஆண்டிலிருந்து லிட்டில் இந்தியாவில் பல் மருந்தகத்தை நடத்தி வரும் 66 வயது மருத்துவர் சைமன் மகேந்திரன், வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதுடன், பல் சுகாதாரம் பற்றி எடுத்துரைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
“ஒருநாள் மருந்தகத்தைத் திறந்தபோது வாசலில் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தரையில் உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அக்காட்சி என் மனத்தைப் பதைபதைக்க வைத்தது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தேன்,” என்று மருத்துவர் சைமன் சொன்னார்.
பல் மருத்துவச் சேவையுடன் ஊழியர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் காதுகொடுத்துக் கேட்கிறார் மருத்துவர் சைமன்.
“அவர்களது வீட்டுப் பிரச்சினைகளையும், பணியிடச் சவால்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் போதெல்லாம் கேட்டு வருந்துவேன்,” என்றார் அவர்.
நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர் சைமனுக்கு, குடும்பக் கடமைகள் இருந்தாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற உந்துதல் இருந்துகொண்டே இருக்கிறது. தமக்குத் தெரிந்த வழக்கறிஞரையும் நண்பர்களையும் அணுகி, மருந்தகத்திற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச ஆலோசனை சந்திப்புகளுக்கு இவர் ஏற்பாடு செய்துள்ளார்.
தெரிந்த நிறுவனங்களுடனும் ஆதரவாளர்களுடனும் கைகோத்து, அவர்களை விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா, செந்தோசா தீவு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
காருண்யா மருத்துவச் சேவை
கடந்த 1994ஆம் ஆண்டு தமது பல் மருந்தகத்திற்கு அருகில் வெளிநாட்டு ஊழியர்களுக்கென ‘காருண்யா மருத்துவச் சேவை’யை மருததுவர் சைமன் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
வாரம்தோறும் வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் காருண்யா மருந்தகத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் அனைத்து மருத்துவச் சேவைகளுக்கும் $15 கட்டணம் செலுத்தினால் போதும்.
அங்கு மருத்துவர் சைமனின் 20 மருத்துவ நண்பர்கள் இலவசமாகத் தொண்டாற்றி வருகின்றனர்.
“கடந்த எட்டு மாதங்களாக காருண்யா மருந்தகத்திற்கு வருகிறேன். என்னைப் போன்ற ஊழியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் வாங்கும் $500 சம்பளத்திற்கு கட்டுப்படியாகும் வகையில் இச்சேவை உள்ளது,” என்றார் இல்லப் பணிப்பெண்ணான சண்முகம் ரத்னேஸ்வரி, 47.
காருண்யா மருத்துவச் சேவை தொடங்கியதிலிருந்து அங்கு தொண்டூழியராகப் பணியாற்றும் 69 வயது திரு சாலமன் ஜோசஃப், ஊழியர்கள் மீது மருத்துவராக தான் வைத்திருக்கும் அதே பரிவையும் அக்கறையையும் கொண்டுள்ளார். “அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது என் மனம் நெகிழ்ந்துபோகும்,” என்றார் அவர் நெகிழ்ச்சியோடு.
ஜீவன் ஃபிரண்ட்டியர்ஸ்
‘ஜீவன் ஃபிரண்ட்டியர்ஸ்’ எனும் லாபநோக்கமற்ற அமைப்பை 1996ஆம் ஆண்டு தொடங்கினார் மருத்துவர் சைமன்.
அவர் வழங்கும் சேவைகளை உள்ளடக்கிய அந்த அமைப்பில் தொண்டூழியர்கள் பலர் உள்ளனர். ஊழியர்களுக்கு மனநலம், நாட்பட்ட நோய்களிலிருந்து தீர்வு, மதுவிற்கு அடிமையாகும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல சேவைகளை அங்கு வழங்குகிறார் மருத்துவர் சைமன்.
அந்த அமைப்பின் சேவைகள் சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு இந்தியா, மியன்மார், நேப்பாளம் ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளன.
“மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவிற்குச் சென்று சேவையாற்றி வருகிறேன். சில நேரங்களில் சிங்கப்பூரில் நான் சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த ஊருக்குச் சென்று, அவர்களுடைய குடும்ப நிலையைப் பார்வையிட்டு வருவேன்,” என்று மருத்துவர் சைமன் சொன்னார்.
“வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் என்னுடன் சேர்ந்து இதர ஊழியர்களுக்குத் தொண்டாற்றத் தொடங்கினர். முன்பு நான் அவர்களுக்கு சேவை வழங்கி, பிறகு அவர்களே தங்களைப் போன்ற ஊழியர்களுக்கு சேவையாற்றுவதைக் காணும்போது நிறைவாக இருக்கின்றது,” என்று உணர்ச்சிபொங்கக் கூறினார் அவர்.
“மலிவுக் கட்டணத்தில் மருத்துவச் சேவைகளை வழங்கும்போது பெரிதாக லாபம் பார்க்க முடியாது. ஆனால், சேவையில் கிடைக்கும் மனநிறைவு அளவிடமுடியாதது,” என்று கூறினார் மருத்துவர் சைமன்.

