ஜூன் மாதப் பள்ளி விடுமுறை எனக் கேட்டவுடன் ஒருபுறம் பிள்ளைகளுக்கு உற்சாகமாக இருந்தபோதும், பெற்றோர் சிலரிடத்தில் ஒருவகைப் பதற்றமும் கவலையும் ஏற்படலாம். இந்த ஒரு மாத காலத்தை குழந்தைகள் வீணாக்காமல் அதனைப் பயனுள்ளதாகச் செலவிடுவது பற்றிய அழுத்தமும் ஏற்படக்கூடும்.
பெற்றோர்கள் இந்தப் பதற்றத்தைக் குறைத்து விடுமுறையைச் சிறப்பாகப் பயன்படுத்தச் சில எளிய வழிகாட்டுதல்களை வழங்குகிறார், சிங்கப்பூர் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வாழ்க்கை அறிவியல் விரிவுரையாளரான டாக்டர் அல்கா பிரகாஷ்.
சுமையை ஏற்றாதீர்கள்
விடுமுறை என்பது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் ஓய்வுக்கான நேரமாக இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் அல்கா. எல்லாப் பொறுப்புகளையும் பெற்றோர்களே சுமக்கத் தேவையில்லை. குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை இரவல் பெற்று வாசிக்கச் சொல்லலாம்.
மாலையில் குடும்பமாகப் புத்தகங்கள் வாசிப்பது, வார இறுதியில் ‘அட்டை விளையாட்டுகள்’ (board games) விளையாடுவது அல்லது ஒன்றாகத் திரைப்படம் பார்ப்பது போன்ற எளிமையான வழிகளில் பொழுதைக் கழிக்கலாம்.
படிக்கவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்
விடுமுறையில் படிப்பை முழுமையாக நிறுத்தக்கூடாது. பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை ஒரே நாளில் செய்யாமல், தினமும் சிறிது சிறிதாகச் செய்யப் பிரித்துக் கொடுங்கள். இதற்குமுன் படித்த பாடங்களைத் தவறாமல் திரும்பப் படிப்பது அவசியம். செய்தித்தாள்களைப் படிக்க ஊக்குவித்து, நடப்பு நிகழ்வுகளைப் பற்றி விவாதிப்பதும் சிறந்த கற்றல் முறையாகும்.
பயணத் திட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்
விடுமுறையின்போது சுற்றுலா செல்லத் திட்டமிடும்போது பெற்றோரின் பதற்றம் குறைவதுடன் பிள்ளைகளும் கற்றுக்கொள்வதாக டாக்டர் அல்கா தெரிவித்தார்.
“எங்குச் செல்வது, அதற்கான செலவு எவ்வளவு என்பதை அவர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். பணச்செலவு பற்றிய பிள்ளைகளின் பொது அறிவு வளரும். அவர்கள் திட்டமிடவும் கற்றுக்கொள்வர்,” என்றார் அவர்.
“இவ்வாறு செய்யும்போது, பிள்ளைகள் பொது இடங்களிலும் விடுமுறைப் பயணங்களிலும் நல்ல முறையில் நடந்துகொள்வதாக டாக்டர் அல்கா கூறினார். பிள்ளைகளிடம் பொறுப்புணர்வை வளர்க்கவேண்டும்,” என்று டாக்டர் அல்கா அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்வுகளுக்குத் தயாராகுதல்
முக்கியத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், கடைசி நேரத்தில் படிக்காமல் தொடக்கத்திலிருந்தே திட்டமிட்டுப் படிக்க வேண்டும்.
“எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, குழந்தைகளின் உறக்கம். போதிய தூக்கம் இருந்தால்தான் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு, படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும்,” என்று டாக்டர் அல்கா கூறினார்.
இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஜூன் பள்ளி விடுமுறையானது பெற்றோரின் பதற்றத்தைக் குறைத்து, குடும்பத்தினர் அனைவரும் மனநிறைவோடு கொண்டாடும் ஒரு பயனுள்ள காலமாக மாறும் என்பது டாக்டர் அல்காவின் அறிவுரை.

