ஒரு மொழியின் அமைப்பை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் இருந்து பார்ப்பதுதான் மொழியியல் கலையினுடைய முக்கியத்துவம் என்கிறார் முனைவர் சுப. திண்ணப்பன்.
சிங்கப்பூரில் தமிழ் மொழியின் வேர்களை ஆழமாக ஊன்றிய மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பணிகளுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவருமான அவர், தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது அவ்வாறு குறிப்பிட்டார்.
தமது நீண்டகால தமிழ்ப்பணிகளையும் மொழியியல் அனுபவங்களையும் இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.
நம் தாய்மொழி என்பதற்காக உயர்த்திக் கொண்டாடுவதாக இல்லாமல் உண்மையிலேயே அது உயர்வானது என்பதை மெய்ப்பிக்க மொழியியல் அடிப்படையில் தமிழ் மொழியின் பெருமையைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
“மொழியின் அமைப்பைச் சொல்லும் விளக்க மொழியியல், வரலாற்று நிலை மொழியியல், பயன்பாட்டு மொழியியல் என மூன்று வகையில் தமிழுக்குப் புதிய வரவையும் புதிய கோணத்தையும் காட்டுகிறது மொழியியல்,” என்றார் முனைவர்.
அறிஞர் மு.வ.விடம் பயிலவேண்டும் என்பதற்காகவே தாம் தமிழ்ப் பட்டக்கல்வியைத் தேர்ந்தெடுத்ததைக் குறிப்பிட்ட அவர், புகழ்பெற்ற தமிழறிஞர்கள் வ.சுப. மாணிக்கனார், தெ.பொ.மீ., டாக்டர் மு.வ., பேராசிரியர் அகத்தியலிங்கனார் போன்றோரிடம் கல்லூரி நிலையில் தமிழ் கற்றது தம் நற்பேறு என்றார்.
தமிழ் கற்பித்தலில் மொழியியலின் பங்கு
தமிழ் கற்றல் கற்பித்தலில் மரபு வழிக்கும் மொழியியல் சார்ந்த வழிக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதைச் சுட்டியதுடன் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தமிழ் ஆசிரியர்களுக்குப் பயன்பாட்டு மொழியியலையும் நவீன கற்பித்தல் முறைகளையும் தாம் அறிமுகப்படுத்தியதாக முனைவர் சுப. திண்ணப்பன் குறிப்பிட்டார்.
தமிழ் எழுத்துகளைச் சரியாக உச்சரிப்பதற்குத் தாம் தயாரித்த ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற கையேட்டையும் ஒலிநாடாப் பொதியத்தையும் (Package) கல்வியமைச்சு வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்.
முக்கிய ஒலியியல் ஆய்வு
ஒலியியல் (Phonetics) பணிகள் தொடர்பிலான ஒரு மறக்க முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட முனைவர் திண்ணப்பன், லண்டனில் உள்ள சசெக்ஸ் மருத்துவமனையில் (Sussex Hospital) தமிழ் எழுத்துகளை உச்சரிக்கும்போது தொண்டைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை மருத்துவக் கருவிகள் மூலம் ஆராய்வதற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து, நாசி, வாய் வழியே கருவிகளைச் செலுத்த ஒப்புக்கொண்டு, ஒளிநாடா பதிவுசெய்ய உதவியதாகக் கூறினார். தமிழில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முதல் ஆய்வான அது, தமிழ் ஒலியியல் கற்றலுக்குப் பேருதவியாக அமைந்தது.
அவர் தமது முனைவர் பட்டத்துக்குச் சீவக சிந்தாமணியை மொழியியல் கோணத்தில் ஆய்வு செய்ததையும் அதுவரை அது இலக்கியக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்பட்ட காப்பியம் என்பதையும் கூறினார்; தேர்வாளர்களைக் கவர்ந்த ஆய்வு அது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதையும், சிங்கப்பூர் வந்த பிறகு எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பில் தாம் ஆற்றிய பணிகளையும் எடுத்துக்கூறினார். இன்னும்கூட சிலவகைச் சீர்திருத்தங்கள் வரலாம் என்றும் அவர் சொன்னார்.
ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிப் பழகிய தாம் பின்னர் கணினி வழியாக அதே எழுத்துகளைக் கற்பித்த முன்னேற்ற நிலையைத் திரு திண்ணப்பன் விளக்கினார். சிங்கப்பூரில் மொழியியல் தொடர்பான சிந்தனைகளைப் புகுத்தியது தமக்கு மனநிறைவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அதிபரின் தமிழாசிரியர்
மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்குத் தமிழ் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தது தம் வாழ்வின் மறக்க முடியாத அனுபவம் என்றார் முனைவர் திண்ணப்பன். “அதிபர் நாதன் அவர்களின் பணிவும் நினைவாற்றலும் வியக்கத்தக்கவை; அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழில் உரையாற்ற ஊக்கமளித்தேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரில் நால்வருக்கு முனைவர் பட்ட வழிகாட்டுதல் வழங்கி, தமிழில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் வழக்கத்தை உருவாக்கிய முனைவர் திண்ணப்பனிடம் பல்கலைக்கழக நிலையில் பயின்ற மாணவர்கள் பலர், உலகெங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
இன்றும் தங்கள் அன்புக்குரிய ஆசானிடம் அவர்கள் தொடர்பில் இருப்பதையும் அவர்களில் ஒருவர் 25 ஆண்டுகளாகத் தவறாமல் நேரில் வந்து பார்த்துச் செல்வதையும் அவர் குறிப்பிட்டார்.
முனைவர் திண்ணப்பன்மீது மறைந்த பாவலர் முருகடியான், பிள்ளைத்தமிழ் நூல் இயற்றியுள்ளார். அதுகுறித்துப் பேசும்போது, பணிவு எல்லார்க்கும் நன்று என்ற வாழ்க்கைத் தத்துவத்தை முனைவர் எடுத்துரைத்தார்.
தமிழில் உள்ள வட்டார வழக்குகளை மொழியியல் ரீதியாகத் தாம் பார்க்கும் கண்ணோட்டம் குறித்தும் ‘சிங்கப்பூர்த் தமிழ் சில கூறுகள்’ என்ற தமது கட்டுரை குறித்தும் சிங்கப்பூரில் இஸ்லாமியத் தமிழர்களுடைய பங்களிப்பை ஆவணப்படுத்தி வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை குறித்தும் கூறினார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் தலைமையின்கீழ் ஜெர்மனி சென்று, புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் கற்க ஏதுவாக, 13 நாடுகளில் செயல்படும் பள்ளிகளுக்குப் பாடநூல்களையும் பயிற்சி நூல்களையும் உருவாக்கித் தந்ததாக அவர் சொன்னார்.
‘நல்லாசிரியர் விருது’ உட்பட சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு உயரிய விருதுகளை வென்று, தற்போது 92 வயதை நிறைவுசெய்துள்ள நிலையில், பக்தி இலக்கியங்களைப் படிப்பது, நூல்களுக்கு அணிந்துரை வழங்குவது எனத் தொடர்ந்து இயங்கிவரும் முனைவர் சுப. திண்ணப்பனின் பணிவும் தமிழுக்கான அர்ப்பணிப்பும் இளைய தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டுதல் என்பதில் ஐயமில்லை.


