வண்ண விருந்தளித்த ஆடை, மேடை அலங்காரங்களுடன் இசையும் ஒளியும் கலந்து பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது ‘குங்கிலியக் கலைய நாயனார்’.
பி கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் ‘குங்கிலிய’ தூப மணம் கமழ இன்னிசையிலும் செந்தமிழிலும் பார்வையாளர்கள் திளைத்து மகிழ்ந்தனர்.
திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை வேளையில் நடைபெற்ற இந்நாடகத்திற்காக 300க்கும் அதிகமானோர் திரண்டனர்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த ‘குங்கிலியக் கலய நாயனார்’ நாடகம், பக்தி இலக்கியமான பெரியபுராணத்தின் ஒரு பகுதியைப் பார்வையாளர்களின் கண்முன் உருப்பெற்றது.
வறுமையின் உச்சத்தில் குடும்பமே பசியால் வாடும் நிலையிலும், உணவு வாங்குவதற்காக மனைவி தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தபோது, அந்தப் பணத்திலும் சிவபெருமானுக்கு குங்கிலியம் (சாம்பிராணி) வாங்கச் சென்ற நாயனாரின் அபார பக்தியை இந்த நாடகம் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்தது.
ஒவ்வொரு முறை குங்கிலியம் தூவும்போதும் நாயனார் வெளிப்படுத்தும் ஆனந்த நடன அசைவுகள் வழி பார்வையாளர்களின் கண்களையும் மனங்களையும் பிணைத்துக்கொண்டார்.
அதிகம் அறியப்படாத இந்த நாயனாரின் கதையைத் தேர்ந்தெடுத்து, புதுமையான தொழில்நுட்பங்களுடன் பாரம்பரியமான முறையில் நாடகக் குழு அரங்கேற்றியது.
கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து நாடகங்களை உருவாக்கிவரும் 10 பேர் கொண்ட மையக் குழு, இந்த நாடகத்தின் உள்ளடக்கத்தையும் வடிவமைத்துள்ளதாக நாடகத்தை இயக்கியுள்ள அ.கி வரதராஜன் தெரிவித்தார்.
“குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த திருக்கடவூர் சென்று, அங்குள்ள காலசம்ஹார மூர்த்தியின் ஆசியைப் பெற்ற பின்னரே இந்த நாடகத்தின் திரைக்கதை எழுதத் தொடங்கப்பட்டது. மொத்தம் 13 காட்சிகளும் 30 பாடல்களும் இந்த நாடகத்தில் இடம்பெற்றன,” என்றார் திரு வரதராஜன்.
பெரியபுராணத்தின் ஆழ்ந்த கருத்துகளைச் சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், தற்கால எளிய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்களை எழுதியதாக அவர் கூறினார்.
இந்த நாடகப் படைப்பில் கிட்டத்தட்ட 150 பேர் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 60 முதல் 65 நடிகர்கள்வரை மேடையில் தோன்றியதுடன் 15 முதல் 20 பேர்வரை ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டனர்.
எட்டுப் பேர் கொண்ட குழுவினர் நேரடி இசை மற்றும் பாடல்களை வழங்கினர். அத்துடன், 12 மேடை மேலாளர்கள், எட்டுத் திரை அமைப்பாளர்கள், 5 வரவேற்பாளர்கள் எனப் பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
இசைச் செழுமை
திரு வரதராஜன் புனைந்த பாடல்களை இசையமைத்துத் தந்த இசை நிபுணர் காயத்ரி சங்கரநாராயணன், தாம் இசையமைத்தவற்றை இளம் பாடகர்கள் எளிதாகவும் விரைவாகவும் புரிந்துகொண்டதாகக் கூறினார்.
“எது புரியவில்லை என்றாலும் அதனைப் பற்றி என்னிடம் கேட்டுத் தெளிவுபெற அவர்கள் தயங்கவில்லை. தெரியாத ராகங்களையும் பாட முயற்சி எடுக்கவும் பயப்படவில்லை. கற்பதில் ஆர்வமும் மரியாதையும் அவர்களிடத்தில் இருந்தன,” என்று அவர் கூறினார்.
நாடகத்தின் சோகம் நிறைந்த காட்சிகளுக்காக சுப பந்துவராளி, சந்திரகெளன்ஸ், ஹம்சாநந்தி போன்ற ராகங்களைக் கையாண்டதாக அவர் குறிப்பிட்டார். “மகிழ்ச்சிக்காக மோகனம், ஆரபி, தேஷ் ஆகியவற்றையும் பக்திக்குச் சஹானா, கன குலூகலம் ஆகியவற்றையும் பயன்படுத்தினேன்,” என்று அவர் கூறினார்.
இயந்திரவியல் தந்த சிறப்பு
புராணத்தில் தாடகை என்ற அரச மாதிற்கு அருள் புரியும் பொருட்டு மேடையில் சாய்ந்த நிலையில் இருக்கும் சிவலிங்கம் நேராக நிமிர்வது போன்ற காட்சிக்காகச் சிறிய இயந்திரவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பார்ப்போர்க்குப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தும் வகையில் அக்காட்சிகள் பாங்காய் அமைந்தன.
ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை 12 முதல் 13 முழுமையான ஒத்திகைகள்வரை நடைபெற்றதாகத் திரு வரதராஜன் கூறினார்.
“ஒத்திகைகளின்போது பல சவால்களும் குறைகளும் இருந்தாலும், இறுதி நாடகத்தன்று முழுமையான சரணாகதி உணர்வோடு மேடையேறும் எங்களை சிவபெருமானே வழிநடத்தி, நாடகத்தை மிக உயர்ந்த தரத்திற்கு எடுத்துச் செல்கிறார் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.

