தாயின் பணிச்சூழலில் உருவான தொழில் கனவு

3 mins read
0bfe8124-c7ab-4c17-bd16-e80f97f428fb
16 வயது ஷார்லின் ஜான் சேரன் தமது பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வு முடிவுகளை வியாழக்கிழமை (டிசம்பர் 18) பெற்றுக்கொண்டார். - படம்: யூஹுவா உயர்நிலைப்பள்ளி

சுகாதாரத் துறை என்பது 16 வயது ஷார்லின் ஜான் சேரனுக்கு எப்போதும் பரிச்சயமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

தமது பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகளை எழுதுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஷார்லின் தமது தொழில்துறை இலக்கை நிர்ணயித்துவிட்டார். பள்ளி அனுபவங்களும், அவரது தாயார் பணிபுரியும் மருத்துவமனைச் சூழலும் சிறுவயதிலிருந்தே அவருக்கு ஒரு தெளிவான பாதையைக் காட்டின.

யூஹுவா உயர்நிலைப்பள்ளியில், வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவில் உயர்நிலை 4 பயிலும் ஷார்லின், அண்மையில் முன்கூட்டிய சேர்க்கைப் பயிற்சி (Early Admissions Exercise) மூலம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சமூகப் பராமரிப்பு மற்றும் சமூகச் சேவைப் பாடத்திட்டத்தில் (Community Care and Social Services course) இடத்தைப் பிடித்துள்ளார்.

தமது தாயார், திருவாட்டி சந்தியா சண்முகம், 45, பணிபுரியும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பள்ளி முடிந்த பின் பல மதிய நேரங்களைச் செலவிட்ட அனுபவமே, ஷார்லினுக்கு சிறு வயதிலிருந்தே சுகாதாரத் துறையின் மீது ஆழ்ந்த ஆர்வத்தை விதைத்தது.

ஷார்லின் ஜான் சேரனும் அவரது தாயார் சந்தியா சண்மு௧மும்.
ஷார்லின் ஜான் சேரனும் அவரது தாயார் சந்தியா சண்மு௧மும். - படம்: ஷார்லின் ஜான் சேர

“அங்குள்ள சேவை மனப்பான்மை மிக்க சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் தாயாரைப் போலச் செவிலியராகப் பணியாற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்,” என்றார் ஷார்லின்.

தமது உயர்நிலைப் பள்ளியின் கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் (ECG) திட்டம் மூலம் அவரது ஆர்வம் மேலும் வலுப்பெற்றது. தொழில் சார்ந்த உரையாடல்கள், தனித்திறன் விவரத்தொகுப்பு (portfolio) உருவாக்குதல், துறை சார்ந்த நுன்னறிவுகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் வழியாக வழங்கப்பட்டன.

தமது ஆலோசகரின் வழிகாட்டுதலுடன், ஷார்லின் நேர்காணலுக்கும் தனித்திறன் விவரத்தொகுப்பிற்கும் சுயமாகத் தயாரானார். இந்தச் செயல்முறை சவாலானதாக இருந்தாலும், அதே நேரத்தில் திருப்தி அளித்ததாக அவர் கூறுகிறார்.

“சேர்க்கை உறுதியான செய்தி கிடைத்தபோது, என் இலக்குகளில் ஒன்றை அடைந்த மனநிறைவு எனக்குக் கிடைத்தது,” என்றார் அவர்.

கல்வியில் சவால்களை ஏற்கத் தயங்காத ஷார்லின், உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மொழிகளை ‘எக்ஸ்பிரஸ்’ (Express) நிலையில் பயின்றார். சேவை சார்ந்த துறைகளில் சிறந்த தகவல் தொடர்புத் திறன் மிக அவசியம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

“சுகாதாரத் துறையில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களுடன் பேச வேண்டியிருக்கும். நம்முடைய எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த மொழித் திறன் மிக முக்கியமானது,” என்று அவர் விளக்கினார்.

கல்வியைத் தாண்டி, பள்ளியின் வாய்பாட்டு குழுவில் உறுப்பினராகவும் இருந்த ஷார்லின், சிங்கப்பூர் இளையர் விழாவின் (SYF) கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவரது விடாமுயற்சியையும் நற்பண்புகளையும் பாராட்டும் வகையில், யூஹுவா நற்பண்பு விருது (Yuhua Character Award), பண்புநல எடுசேவ் விருது (EDUSAVE Character Award), சாதனைக்கும் நல்ல தலைமைத்துவத்துக்கும் சேவைக்குமான எடுசேவ் விருது (EAGLES) ஆகியவை இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டன.

ஷார்லின் ஒரு தெளிவான இலக்குடன் செயல்படும் சிறந்த மாணவி என அவரது வகுப்பு ஆசிரியர் திருவாட்டி இர்ஃபானா இக்பால் கூறினார். “எதற்கும் காத்திருக்க மாட்டார். கேள்விகள் கேட்டு, புரிந்து கொண்டு, தனது எதிர்காலத்தைத் திட்டமிட்டு செயல்படுவார்,” என்றார் அவர்.

வீட்டில் ஷார்லினுக்கு உறுதியான ஆதரவாக இருப்பவர் அவரது தாயார் திருவாட்டி சந்தியா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் அவர், “பெற்றோராக நாங்கள் ஒருபோதும் அவருடைய முடிவுகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் மகிழ்ச்சியாகவும் மனநலத்துடன் இருப்பதே எங்களுக்கு முக்கியம். சுகாதாரத் துறையை அவர் தானாகத் தேர்ந்தெடுத்தது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என்றார்.

ஷார்லின் ஜான் சேரனும் (நடுவில்) அவரது பெற்றோர் சந்தியா சண்மு௧மும் 45, ஜான் சேரனும், 47.
ஷார்லின் ஜான் சேரனும் (நடுவில்) அவரது பெற்றோர் சந்தியா சண்மு௧மும் 45, ஜான் சேரனும், 47. - படம்: ஷார்லின் ஜான் சேரன்

தாம் தேர்ந்தெடுத்த துறையில் நிபுணத்துவம் பெறுவதோடு, ஒரு சிறந்த மனிதராகச் சமுதாயத்திற்குப் பங்களிப்பதே தமது இலக்கு என ஷார்லின் நம்பிக்கையுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்