வாழ்க்கையில் சரியான தருணத்திற்காகக் காத்திருப்பதும் அதே வேளையில் நம்பிக்கையைக் கைவிடாமல் உழைப்பதும் ஒருவர் விரும்பும் உயரத்திற்கு அவரை இட்டுச்செல்லும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் திருவாட்டி யோகா லச்மி சிவசங்கர், 35.
ஏறத்தாழ 12 ஆண்டுகள் புகைப்பட நிறுவனப் பணியில் ஈடுபட்டு, பல ஆண்டுக் காத்திருப்புக்கு பிறகு தாய்மை அடைந்து, இன்று ‘மயூரா’ எனும் இணைய வணிகத்தை நடத்திவரும் தமது வாழ்க்கைப் பயணம் குறித்து இவர் விவரித்தார்.
புகைப்படக் கலை முதல் டிக்டாக் வெற்றி வரை
கடந்த 2012ஆம் ஆண்டு புகைப்படக் கடையில் தொடங்கிய வேலையே வாழ்க்கைத் தொழிலாக வடிவம் பெறும் என நினைத்துபார்க்கவில்லை என்றார் திருவாட்டி லச்மி.
2021ஆம் ஆண்டில் டிக்டாக் தளத்தில் இணை வணிகராகச் செயல்படத் தொடங்கிய இவரை இன்று 72,000க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.
டிக்டாக் இணை வணிகராகத் தாம் செய்த முதல் விற்பனை, ஓர் அழகுசாதன ஒப்பனைப் பொருள் என்றும் அப்போது 1,000 பேர் மட்டுமே தம்மைப் பின்தொடர்ந்தனர் என்றும் சொன்னவர், அந்தப் பயணம் விற்பனையோடு மட்டும் நின்றுவிடவில்லை என்றார்.
அது குறித்து விவரித்த அவர், தொடக்கத்தில் கேமரா முன்னால் வரத் தமக்கு மிகவும் கூச்சமாக இருந்ததாக நினைவுகூர்ந்தார். ஆயினும் அந்தச் சவாலை மேற்கொள்ள ஆயுதப்படையில் பணியாற்றும் தம் கணவர் பெரிதும் ஊக்குவித்ததாகக் கூறினார்.
‘‘வணிகத்தை தாண்டி வாழ்வியல் சார்ந்த காணொளிப் படைப்புகள், கணவருடன் இணைந்து நகைச்சுவைக் காணொளிகள் உட்பட பல தொகுப்புகளைப் பகிர்ந்து, அதன்வழி மக்களுடன் இயல்பாக இணைந்தேன்,’’ என்றவர் டிக்டாக் தனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் பற்றியும் சொன்னார்.
‘‘டிக்டாக் இணையவெளியைப் பொறுத்தமட்டில் நிறைவு என்பதைவிடத் தொடர்ச்சியாக இடம்பிடிக்கும் நிலைத்தன்மையே முக்கியம் என்பதைக் கடந்த காலம் உணர்த்தியது.
“இல்லாத ஒன்றை நினைத்துக் கவலைப்படாமல், என்னிடம் இருந்த நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தினேன். கணவரும் என்னை அளவுக்கு அதிகமாக யோசிக்க விடாமல் பார்த்துக்கொண்டார். சரியான நேரத்தில் அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அமைதியைத் தந்தது,’’ என்று விவரித்தார் திருவாட்டி லச்மி.
இதற்கிடையே, 2025ஆம் ஆண்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், அதே காலகட்டத்தில், புகைப்படத் துறைப் பணியிலிருந்து விலகி புதிய துறைக்கு மாறித் தம் திறனை வளர்த்துக்கொள்ள ஆயத்தமானார்.
நம்பிக்கையின் அடையாளமாய் மலர்ந்த ‘மயூரா’
தம் மகளுக்காகத் தேர்வு செய்து வைத்திருந்த ‘மயூரா’ என்ற பெயரை, தாம் புதிதாகத் தொடங்கிய இணைய வணிகத்திற்குச் சூட்டினார் திருவாட்டி லச்மி.
‘‘மயூரா என்ற பெயர் வலிமை, தன்னம்பிக்கை, வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதை நினைவுபடுத்துகிறது; தொடர்ந்து முன்னேறவும் என் கொள்கைகளில் உறுதியாக இருக்கவும் நினைவூட்டுகிறது,’’ என்று இவர் சொன்னார்.
புகைப்படத் துறையிலிருந்து முப்பரிமாண அச்சுத் துறைக்கு வந்ததன் பின்னணியையும் இவர் விவரித்தார்.
‘‘சொந்த வணிகம் தொடங்க நினைத்தபோது என்ன செய்வது என்ற தெளிவு எனக்கில்லை. புகைப்படக் கடையில் 12 ஆண்டுகள் பணியாற்றியதன்மூலம் பெற்ற தொகுத்தல், மறுவடிவமைப்பு, படைப்பாற்றல் திறன்களைப் பயன்படுத்தி, இழை அச்சிடுதல் எனப்படும் ‘ஃபிலமென்ட்’ முப்பரிமாண அச்சு முறையில் புதிதாக எதையாவது உருவாக்க விரும்பினேன்,’’ என்றார் இவர்.
நுட்பமான வடிவமைப்பு, மக்கள் விரும்பிக் கேட்கும் சிற்பங்கள், உருவச்சிலைகள் எனப் பல வடிவங்களுக்கு தமது கலைநுட்பத்தால் உயிரூட்டும் திருவாட்டி லச்மி, இதில் தோல்விகளும் உண்டு என்று குறிப்பிட்டார்.
‘‘மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பலகட்ட உழைப்புக்குப் பின்னரே ஒரு பொருள் உருவாகிறது. சிறிய அச்சுக்கு 2 மணிநேரமும் பெரிய வடிவமைப்பிலான அச்சுவடிவங்களுக்கு 12 மணி நேரம் முதல் 2 நாள்கள் வரையும் ஆகலாம்.
‘‘சில நேரங்களில் அச்சு சரியாக வராமல் பொருள்களும் நேரமும் வீணாவதுண்டு. ஆனால், அந்த முயற்சிகளிலிருந்தும் கற்றுக்கொண்டு வடிவமைப்பை மாற்றி மீண்டும் முயல்வேன். இறுதியாக வாடிக்கையாளரின் கைக்குச் சென்று, அவர்களின் பாராட்டுச் செய்திகளைப் பெறும்போது சிரமங்கள் அனைத்தும் எண்ணங்களிலிருந்து அகன்றுவிடும்,” என்று கூறினார் திருவாட்டி லச்மி.
இப்பொறுப்புகள் நேர மேலாண்மையில் சவால்களை அளித்தாலும், பெரும்பாலான பணிகளை மகள் உறங்கிய பிறகே இரவில் மேற்கொள்வதாகக் கூறிய இவர், தாய்மை தமது சாதனைப் பயணத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளதாகவும் சொன்னார்.
“புகைப்படக் கடையில் பணியாற்றிய காலகட்டத்தில் எண்ணற்றோரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புகள், எனக்குக் கடின உழைப்பின், அர்ப்பணிப்பின் அர்த்தத்தைப் புரிய வைத்தன.
‘‘சரியான நேரம் வரவில்லை என்பதற்காகக் கனவுகளைக் கைவிடக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. ஆனால், வாய்ப்பு வரும்போது அதனைத் துணிவுடன் கைப்பற்றும் உறுதி வேண்டும்.
‘‘கனவுகள் மெய்ப்படும்வரை விடாமல் முயற்சி செய்து, தொடர்ந்து கற்றுக்கொள்வதில் கவனத்துடன் ஈடுபட்டால் வளர்ச்சி நம் வசப்படும்,’’ என்கிறார் இந்தச் சாதனைப் பெண்.
‘மயூரா’ தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் டிக்டாக் இணையப்பக்கத்தில் பார்வையிடலாம் : https://www.tiktok.com/@mayura.official.sg?_r=1&_t=ZS-99OZpKLBoIi


