சிறைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது தந்தை எனக்குள் விதைத்த கனவு என்றார் சிங்கப்பூர் சிறைச் சேவையின் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மோகனபிரியா சந்திரமோகன்.
“என் தந்தை சிறைச்சாலை அதிகாரியாக இருந்ததால் நான் வளர்ந்ததெல்லாம் சிறையின் சுற்றப்புறத்தில்தான். அவரைப்போல் சிறை அதிகாரியாக நானும் விரும்பினேன்,” என்றும் அவர் கூறினார்.
2007ல் தன் 25வது வயதில் சிறைச் சேவையில் சேர்ந்த மோகனபிரியா, தங்குமிட அதிகாரி, கிளஸ்டர் திட்ட அதிகாரி, நிறுவனத் தொடர்பு உதவி இயக்குநர், மறுவாழ்வுக் கொள்கைத் திட்டமிடல் உதவி இயக்குநர், திருத்தப் பிரிவை வழிநடத்தும் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்துள்ளார். தற்போது அவர் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி வழங்குகிறார்.
“சிறையில் இருக்கும் கைதிகளுடன் நான் நட்புடன் பழகுவேன். அவர்களை நாம் நம்பவேண்டும். அப்போதுதான் அந்தப் பிணைப்பு ஏற்படும்.
“பெண்கள் சிறையில் நான் பல்வேறு கைதிகளைச் சந்தித்துள்ளேன். அவர்களுக்குள் நிறைய சிரமங்கள் இருக்கும். ஏனெனில், அவர்கள் தாய், மகள், பாட்டியாகக்கூட இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் முகம் வாடியிருக்கும். அப்போது, அவர்களிடம் என்ன நடந்தது எனக் கேட்பேன். அவர்களின் குறைகளை நாம் கேட்கிறோம் என்பதை அறிந்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியடைவர்,” என்றார் திருவாட்டி மோகனபிரியா.
“சில ஆண்டுகளுக்குமுன் பெண் கைதி ஒருவர் சிறையிலிருந்து வெளியாகவிருந்தபோது என்னிடம் காகிதம் ஒன்றைத் தந்தார். அதில், தலையில் பூ வைத்திருந்த சிங்கத்தை அவர் வரைந்திருந்தார். “நீங்கள்தான் அந்த சிங்கம், எங்களைப் பாதுகாக்கிறீர்கள். ஆனால், பூ போன்ற மென்மையான குணம் படைத்தவர்,” என அவர் கூறினார். அதை நான் என்றுமே நினைவில் வைத்திருப்பேன். அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பவில்லை என நம்புகிறேன்,” என தம் மனத்தில் நின்ற தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
“நான் சிறைச்சாலை வேலையில் சேர்ந்தபோது என் தந்தை மிகவும் பெருமைப்பட்டார். அவர் இப்பொழுது எங்களுடன் இல்லை; எனினும், அவர் பெயரை நான் தொடர்ந்து கட்டிக்காப்பேன்.
“சிங்கப்பூர் சிறைச் சேவை எனக்கு நிறைய வாய்ப்புகள், பயிற்சிகள் வழங்குகிறது. அதன்மூலம் நான் மேன்மேலும் உயர்ந்து, என் மேற்பார்வையாளர்கள் எனக்காகச் செய்ததை இன்னும் பலருக்குச் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என அதிகாரி மோகனபிரியா சந்திரமோகன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 22 முதல் 26 வரை சிங்கப்பூர் சிறைச் சேவை இரண்டாம் ஆண்டாக ஏற்பாடுசெய்த அனைத்துலகச் சீர்திருத்தத் தலைமைத்துவத் திட்டத்தைச் (International Correctional Leadership Programme/ஐசிஎல்பி) செயற்குழுத் தலைவராக அவர் வழிநடத்தினார்.
‘ஐசிஎல்பி’ என்பது ஒரு பயிலரங்கு. இவ்வாண்டு 14 நாடுகளைச் சேர்ந்த 27 சிறை அதிகாரிகள் பங்கேற்றனர். முதலாம் ஆண்டில் 12 நாடுகளிலிருந்து 21 பேர் பங்கேற்றிருந்தனர். புதிய பங்கேற்பாளர்களில் பங்ளாதேஷ், மலேசியா, பிலிப்பின்ஸ், சாலமன் தீவுகள் ஆகியவற்றின் சிறை அதிகாரிகளும் அடங்குவர்.
இவ்வாண்டு ஐசிஎல்பியில் பங்கேற்றவர்கள், சிங்கப்பூர் சிறைச் சேவை ஏழாம் ஆண்டாக நடத்திய ஆசியச் சிறைகள் முழு அடைப்புச் சவால் (Asian Prisons Lockdown Challenge/ஏபிஎல்சி) போட்டியையும் நேரில் கண்டனர்.
அவற்றின் நிறைவு விழா செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. வெளியுறவு, உள்துறை அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராக வருகையளித்திருந்தார். சிங்கப்பூர் சிறைச் சேவையின் தொழில்நுட்பப் பயன்பாட்டை அவர் பாராட்டினார்.
“கைதிகளை வெற்றிகரமாகச் சமூகத்துடன் இணைப்பதில் பொதுமக்களின் ஆதரவு மிகவும் முக்கியம். குடும்பத்தினர், முதலாளிகள், சமூக அமைப்புகளுடன் இணைந்து நாம் தொடர்ந்து செயல்படுவோம்,” என்றும் அவர் கூறினார்.
தானியக்க நுழைவாயில் அனுமதி, மின்னிலக்கக் கண்காணிப்பு, முக அடையாளங்காணுதல், மின்னிலக்க ஆவணங்கள் எனச் சிங்கப்பூர் சிறைச் சேவைப் பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களை மற்ற நாட்டின் சிறை அதிகாரிகள் இந்தப் பயிலரங்குகள் மூலம் அறிந்தனர்.