போதையில்லாத சிங்கப்பூரை உருவாக்க உறுதியேற்கும் விதமாக ஒளியூட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம்.
ஜூன் 26ஆம் தேதி இரவு நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் ஆஷ்ரமின் கட்டடம் ஒளியூட்டப்பட்டு பச்சை, வெள்ளை விளக்கொளியில் மிளிர்ந்தது.
தம் இளமைப் பருவத்தில் போதைக்கு அடிமையாகி, பின்னர் அதிலிருந்து மீண்ட அனுபவங்களை இல்லவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர் ரஞ்சித் சிங். இல்லவாசிகள் ஏறத்தாழ 20 பேர் இதில் பங்கேற்றனர்.
இல்லவாசிகளும் ஆஷ்ரம் ஊழியர்களும் ஆஷ்ரம் கட்டடத்தின் வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஐந்தாண்டுகளாக ஆஷ்ரம் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
நிகழ்ச்சியின்போது போதையின் தீமைகளைக் குறிப்பிட்டுப் பேசிய ஆஷ்ரமின் தலைவர் விஜய்குமார் சேதுராஜ், “பல நாடுகளில் போதை ஒழிப்புக்கான வலுவான கட்டமைப்புகள் இல்லை. சிங்கப்பூரில் இதற்கான வளங்களும் ஆதரவும் பேரளவில் உள்ளன,” என்றார்.
அப்பழக்கங்களிலிருந்து ஒருவரை வெளிக்கொணர உதவத் தயாராக இருப்போர்க்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இல்லத்தில் ஒருமுறை போதையால் சிறைக்குச் சென்ற சிலர் மீண்டும் அங்கு சென்றதைக் காண முடிவதாகவும் அது மகிழ்ச்சி தரும் ஒன்றல்ல என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆஷ்ரமுக்கு ஒருமுறை மட்டுமே வந்து, போதைப்பொருளை எதிர்ப்பவர்களாக சிலர் மாறி, சமூகத்தில் செயலாற்றுவதையும் குறிப்பிட்டார்.
“போதைப் பழக்கத்தால் சிறைக்குச் சென்றோர் தண்டனைக்காலத்தின் இறுதி மாதங்களை ஆஷ்ரமில் செலவிடுகின்றனர். அவர்களுக்கு சமூகத்தில் நல்வாழ்வு அமைத்துத் தர இயன்ற ஆதரவை ஆஷ்ரம் வழங்குகிறது. பணிக்கான பயிற்சிகளும் திறன் வளர்ச்சித் திட்டங்களும் இடம்பெறுகின்றன.
“அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகள் போதைப் பழக்கத்தை எதிர்ப்பதன் முக்கியத்துவத்தை மறுவுறுதி செய்யும் விதமாக அமைகிறது,” என்றார் கடந்த பத்தாண்டுகளாக ஆஷ்ரமில் பயணித்து வரும் மனநல ஆலோசகரான லதா.
அனைத்துலகப் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் ‘போதையில்லாஎஸ்ஜி’ அமைப்பும் இணைந்து சிங்கப்பூர் முழுவதும் ஒளியூட்டு நிகழ்ச்சியைச் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி இது கடைப்பிடிக்கப்படுகிறது.
அதில் தீவெங்கிலும் உள்ள அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் போதைப்பொருள் எதிர்ப்பு நாடாவின் பச்சை, வெள்ளை வண்ணங்களில் ஒளிரும். இது போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கு எதிராகச் சமூகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. அதன் தொடர்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

