தமிழ்மொழி விழாவில் முத்திரை பதித்த இளைய தலைமுறை

மின்னூல் முதல் மேடை நாடகம் வரை இளையர்களின் ஈடுபாடு:

தமிழ்மொழி விழாவில் முத்திரை பதித்த இளைய தலைமுறை

2 mins read
61fa11bc-2bc8-4560-b179-698786c99960
கொடுக்கப்பட்ட புதிரை மாணவர்களும் சிறுவர்களும் வெற்றிகரமாகச் செய்துமுடித்தனர். - படம்: காமினி ஹஷ்வின்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பக்காலக் கல்வியுடன் கூடிய தமிழ்க் கல்வியில் பட்டயப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தேசிய பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து சிறுவர்களுக்காக நடத்திய தமிழ்மொழி நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ்மொழி விழா 2026ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மூன்று முதல் ஆறு வயது வரையிலான பாலர் பள்ளி மாணவர்களுக்காகத் திட்டமிடப்பட்டது.

தேசிய நூலகத்தில் நடைபெற்ற ‘வாழும் கதைகள்’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய இணைய மின்னூலை நாடக வடிவில் அரங்கேற்றினர்.

நிகழ்ச்சியில் பெற்றோர் பலரும் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவரான 41 வயது மேகலை பன்னீர்செல்வம் கூறுகையில், “தமிழை அன்றாட வாழ்வில் எவ்வாறு இயல்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது,” என்றார்.

மாணவர்கள் ஆடிய கோலாட்டத்தைப் பிள்ளைகள் கண்டு மகிழ்ந்தார்கள்.
மாணவர்கள் ஆடிய கோலாட்டத்தைப் பிள்ளைகள் கண்டு மகிழ்ந்தார்கள். - படம்: காமினி ஹஷ்வின்

“இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சிகள் நமது மாணவர்களுக்காகவும் சிறுவர்களுக்காகவும் வருங்காலத்தில் இன்னும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.

கோலாட்டத்திலும் மணிகளை வைத்துக் கைக்காப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் சிறார் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

மாணவத் தொண்டூழியர்களின் உதவியுடன் பிள்ளைகள் எழுத்துப் புதிர்களுக்கு விடைகளைக் கண்டுபிடித்தனர்.
மாணவத் தொண்டூழியர்களின் உதவியுடன் பிள்ளைகள் எழுத்துப் புதிர்களுக்கு விடைகளைக் கண்டுபிடித்தனர். - படம்: காமினி ஹஷ்வின்

மாணவர்கள் பாடத்திட்டத்தின் வாயிலாகப் பெற்ற கதை சொல்லும் கலையை இங்குக் களப்பணியாக மாற்றினர்.

இந்தத் திட்டத்தில் பங்காற்றிய 20 வயது மாணவர் ருஸ்பிஹான் சமீர், “மொழி மற்றும் இலக்கியம்” எனும் பாடத்தின் மூலம், குழந்தைகளுக்கு ஒரு கதையை எவ்வாறு சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்பதையும் எத்தகைய உபகரணங்களைப் பயன்படுத்தினால் அது அவர்களை எளிதில் சென்றடையும் என்பதையும் கற்றுக் கொண்டோம்.” 

“அந்தக் கற்றல் முறைகளை இந்த நிகழ்வில் நடைமுறைப்படுத்தியது எங்களுக்குச் சிறந்த அனுபவமாக அமைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி முழுதும் ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டைக் குறைத்துத் தூய தமிழில் உரையாடுவதை உறுதிசெய்ய மாணவர்கள் முயன்றனர். 

மாணவத் தொண்டூழியர்களின் உதவியுடன் பிள்ளைகள் மணிகளை வைத்துக் கைக்காப்புகளைச் செய்தனர்.
மாணவத் தொண்டூழியர்களின் உதவியுடன் பிள்ளைகள் மணிகளை வைத்துக் கைக்காப்புகளைச் செய்தனர். - படம்: காமினி ஹஷ்வின்

நிகழ்ச்சியில் பங்காற்றிய இன்னொருவரான 19 வயது  ராஜேந்திரன் புவனேஷ்வரி, “பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் சிந்தித்து, அவர்களுக்குப் பிடித்தமான மற்றும் பொருத்தமான செயல்பாடுகளைச் சேர்த்துக்கொள்ள நினைத்தோம்,” என்று கூறினார்.

“ஒரு பணியை எவ்வாறு விரைவாகவும் திறம்படவும் முடிப்பது போன்ற முக்கியப் பாடங்களை நிகழ்ச்சியின் மூலம் கற்றுக்கொண்டோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்