தந்தைக்குச் சிறுநீரக தானம் செய்த தனயன்

புதுவாழ்வு தந்த ஈஸ்டர் பரிசு

தந்தைக்குச் சிறுநீரக தானம் செய்த தனயன்

4 mins read
51a4a876-69c8-4665-97f1-43207e13c587
தம் சிறுநீரகத்தைப் பொருத்தியதிலிருந்து தந்தை ஜோனத்தான் சுப்பையா மிகவும் இளமையாக மாறிவிட்டார் என்று புன்னகையுடன் கூறினார் திரு ஜான்சன். - படம்: செய்யது இப்ராகிம்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நன்னாளில் புதுவாழ்வு, இறைவனின் அன்பின் வலிமைக்கான சான்று என்று கூறும் ‘இயேசு ஜீவிக்கிறார்‘ திருச்சபையின் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா குடும்பத்தினர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நன்னாளில் புதுவாழ்வு, இறைவனின் அன்பின் வலிமைக்கான சான்று என்று கூறும் ‘இயேசு ஜீவிக்கிறார்‘ திருச்சபையின் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா குடும்பத்தினர். - படம்: ஜோனத்தான் சுப்பையா

இறைவன் கைவிடவேமாட்டார் என்று உறுதியாக நம்புவோருக்கு நற்செய்தி சொல்பவர் ‘இயேசு ஜீவிக்கிறார்‘ திருச்சபையின் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா 52.

ஆனால், பல மாதங்களுக்கு முன்பு இவரிடம் கூறப்பட்ட ஒரு தகவல் போதகரின் மொத்தக் குடும்பத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

‘‘மாற்றுச் சிறுநீரகம் வேண்டும் என்றுகூடச் சொல்லவில்லை. இரு சிறுநீரகங்களும் விரைவில் செயலிழந்துவிடக்கூடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். சிறுநீரக தானம் என்பது உடனடியாகக் கிடைத்துவிடாது என்பதால் இடைப்பட்ட காலத்தில் சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர்.

‘‘எல்லாருக்கும் ஆறுதல் சொல்லியிருக்கிறேன். ஆனால் என் உடலில் பாதிப்பு என்ற செய்தி கிடைத்தவுடன் நான் நொறுங்கிப் போய்விட்டேன்,’’ என்றார் திரு ஜோனத்தான்.

தவறாமல் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்பவர் திரு ஜோனத்தான். அவ்வப்போது செய்துகொண்ட பரிசோதனைகள் எதுவுமே சிறுநீரகப் பாதிப்பு குறித்து எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

செயலிழந்த சிறுநீரகம், செயலில் இறங்கிய குடும்பம் 

சிறுநீரக தானம் செய்ய ஏற்கெனவே பலர் முன்பதிவு செய்திருப்பார்கள். எனவே நிச்சயம் மாற்றுச் சிறுநீரகத்திற்குக் காத்திருக்க வேண்டும்.

ஆனால், நாளுக்கு நாள் நலிவுற்று வந்த ஜோனத்தானின் உடல் காத்திருக்காது. சிறுநீரக தானம் யாரிடம் பெறலாம் என்பதுபோன்ற தகவலைக் கூறி விரைவில் சிகிச்சை தொடரவேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில்தான் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உள்ள ‘வாட்ஸ்ஆப்’ குழுவில் அச்செய்தியை இரு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஜோனத்தான் பகிர்ந்தார்.

மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் தமது மகனின் சிறுநீரகம் தமக்குப் பொருந்தும் என்று அவர் அறிந்துகொண்டார்.

‘‘பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வழிநடத்தும் தந்தையால் எப்படி பிள்ளைகளிடமே சென்று அவர்களின் உறுப்பைத் தானமாகக் கேட்பது,” என்ற எண்ணம் குறுக்கிடவே திரு ஜோனத்தான் அமைதியாக இருந்துவிட்டார்.

மேலும் சிறுநீரக தானம் என்பதை தாண்டி அதைச் செய்வோர் செய்துகொள்ள வேண்டிய மருத்துவச் சிகிச்சைகளும் அவரை மிகவும் கலக்கமுறச் செய்தது.

‘‘ஊசி போட்டால்கூட வலிக்கும் என்று பொக்கிஷமாகப் பார்த்துக்கொண்ட மகனின் உடலில் அறுவை சிகிச்சையா என்ற சிந்தனை என் மனவலியை அதிகமாக்கியது. ஆனால் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகியது. குடும்பம், திருச்சபை மக்கள், நண்பர்கள் என எல்லாரையும் விட்டுவிட்டு சென்றால் அவர்கள் என்ன ஆவார்கள் என்ற அச்சமும் வாட்டியது,’’ என்றார் போதகர் ஜோனத்தான்.

துரிதமாகச் செயல்பட வேண்டிய சூழலில் மாற்றுச் சீறுநீரகம் பொறுத்த முடிவு செய்ததாகவும், ஆயினும் அந்தச் சூழலில் தாம் மருத்துவக் காப்புறுதி எதையும் வைத்திருக்கவில்லை என்பதால் இந்தியா சென்று சிகிச்சை பெற முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டார் அவர். 

இந்நிலையில், மகன் ஜான்சனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் தந்தைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று உறுதிசெய்ய மறுவாழ்வுக்கான பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கினர் குடும்பத்தினர்.

‘‘ஓர் அறையில் மகன், மற்றொரு அறையில் கணவர். தானம் ஒன்று; ஆனால் காக்கப்படவுள்ள உயிர் இரண்டு. ஒருவர் உடலிலிருந்து உறுப்பை எடுத்து மற்றவர் உடலில் அதை பொறுத்த வேண்டும். பிறகு அது நல்லபடியாக பொருந்தி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்,’’. மனைவி உடனிருந்து இருவரையும் பார்த்துக்கொள்ள, அசராத நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக விளக்கினார் போதகர் ஜோனத்தான். 

‘‘அன்பு என்றால் அது செயல்வடிவில் இருக்க வேண்டும். மானிடர்க்காக இயேசு கிறிஸ்துவும் அதைத்தான் செய்தார். அதைப்போலத்தான் என் வாழ்விலும் அன்பு அருட்கொடை வடிவில் உயிர்பெற்றது. என்னை மரணப்படுக்கையில் இருந்து உயிர்ப்பித்தது,’’ என்று புன்னகைத்தார் போதகர் ஜோனத்தான்.

“தந்தையர்தான் பிள்ளைகளுக்கு வாழ்வளிப்பது வழமை, ஆனால் சத்தமின்றிச் சிறுநீரக தானம் கொடுத்த மகன் என் நாயகர்,” எனச் சொல்லி கண்கலங்கினார் திரு ஜோனத்தான்.

இளையரின் சிறுநீரகம் பொருத்தியதால் இளமையாக மாறிய  அப்பா

திரு ஜான்சன்
திரு ஜான்சன் - படம்: செய்யது இப்ராகிம்.

சிறுநீரக தானம் செய்கையில் மகன் ஜான்சனுக்கு வயது 24. அவரது தந்தைக்கு வயது 49.

‘‘சிறு ஊசியைப் பார்த்தாலே அலறும் மனநிலை கொண்டவன் நான். அப்பாவைக் காப்பாற்றும் வாய்ப்பை என் கரத்தில் இறைவன் கொடுத்தார்,” என்றார் திரு ஜான்சன், 27.

“அப்பா இல்லையென்றால் ஆலயம் என்னவாகும், இளந்தலைமுறையினரை யார் வழிநடத்துவார்கள் என்று திகைத்தேன். சிறுநீரக தானம் தொடர்பில் பலகட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்று அறிந்திருந்தேன்.  

‘‘எனினும், கண்ணை மூடி யோசித்தபோது, முடிவில் அப்பா உயிருடன் இருப்பார். அவரால் முன்புபோல நடமாட இயலும் என்பது புரிந்தது. எனவே இந்தச் செயலினால் விளையப்போகும் முடிவை எண்ணியவாறே உறுப்பு தானம் என்ற புதிய பயணத்தை தொடங்கினேன்,’’ என்று புன்னகைத்தார் அந்த இளையர்.

‘‘இப்போது அப்பா எங்கள் அருகில் இருக்கிறார். இன்னும் வியப்பு என்னவென்றால், என் சிறுநீரகத்தைப் பொருத்தியதிலிருந்து அப்பா என்னைவிட மிகவும் இளமையாக மாறிவிட்டார். துடிப்புடன் செயல்படுகிறார்,” எனத் திரு ஜான்சன் சிரித்தவாறு கூறினார்.

தியாகத்தின் திருநாளாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நன்னாளில் இந்த நன்கொடை என்பது அன்பின் வலிமையால் கிடைத்த மறுவாழ்விற்குச் சான்று என்று நன்றியுடன் கூறினர் தந்தையும் மகனும்.

குறிப்புச் சொற்கள்