கத்தோலிக்கர்களும் கிறிஸ்துவர்களும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் நாளான உயிர்த்தெழுந்த ஞாயிறு (Easter Sunday), இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சிங்கப்பூரின் பல தேவாலயங்களில் அனுசரிக்கப்பட்டது.
உயிர்த்தெழுந்த நாள் (Resurrection Day) என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் ஒரு பண்டிகை.
இப்பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் 40 நாள்கள் தவக்காலத்தின் முடிவில் இடம்பெறுகிறது. அதாவது புனித வெள்ளிக்கிழமையிலிருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இது கொண்டாடப்படுகிறது.
உயிர்த்தெழுந்த ஞாயிறுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள புதுவாழ்வுத் தமிழ்த் திருச்சபை சனிக்கிழமை (ஏப்ரல் 19) ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றியது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான யூதாசு இஸ்காரியோத்தின் (Judas Iscariot) கண்ணோட்டத்திலிருந்து கற்பனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாடகம் அது.
“நேர்மறையான கதாபாத்திரங்களைக் கொண்டு இத்தகைய நாடகங்களை இயற்றுவதுதான் வழக்கம். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக, சர்ச்சைக்குரிய கதாபாத்திரமான யூதாசை மையமாகக் கொண்டு படைத்தோம்,” என்றார் 54 வயது போதகர் ஜெயகுமார் இராமச்சந்திரன்.
“யூதாசு இஸ்காரியோத் தன்னலத்துடன் இயேசு கிறிஸ்துவின்மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருந்து, பிறகு அவை கைகூடிவரவில்லை என்றபோது இயேசு கிறிஸ்துவைக் காட்டிகொடுத்துவிடுவார்,” என்றார் போதகர் ஜெயகுமார்.
‘த பேஷன் ஆஃப் கிறைஸ்ட்’ (The Passion of Christ) திரைப்படத்திலிருந்தும் ‘த சோசன்’ (The Chosen) தொடரிலிருந்தும் சில காட்சிகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இருபது நிமிட நீளமுள்ள நாடகத்தில் ஆறு நடிகர்கள் இடம்பெற்றனர்.
அவர்களில் ஒருவர் நாடகத்தை இயக்கி, வசனம் எழுதியவரும் யூதாசு இஸ்காரியோத் கதாபாத்திரத்தில் நடித்தவருமான 44 வயது வெனிஷ் ராஜ்.
“ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ற குரலைத் தேடும் முயற்சியில் ஏறக்குறைய ஏழு பேர் வரை குரல் பதிவுகள் செய்தோம்,” என்றார் வெனிஷ்.
“எபிரேய (Hebrew) பண்பாட்டை மையமாகக் கொண்டு இணையத்தின் உதவியுடன் இந்த நாடகத்துக்கான ஆடைகள் தயாரிக்கப்பட்டன,” என்றார் அவர்.