உணவுத் தெரிவின் முக்கியத்துவத்தைப் பராமரிப்பாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் ‘லோக்கல் ஃபார்ம் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் சிங்கப்பூர் அந்திமகால இல்ல மன்றத்துடன் இணைந்து ‘ஃபார்ம் பேக் ஃபார் குட்’ (Farm Pack for Good) முயற்சியில் களம் இறங்கியது.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், ஆரோக்கிய உணவுவகைகள் அடங்கிய பைகளை மவுன்ட்பேட்டன் வட்டாரத்தில் வசிக்கும் பராமரிப்பாளர்களுக்கு விநியோகம் செய்யும் “ஹார்வெஸ்ட் ஃபார்வர்ட் ஃபார்ம் பேக் ஃபார் குட்” எனும் முயற்சி, அக்டோபர் 31ஆம் தேதி மவுன்ட்பேட்டன் சமூக மன்றத்தில் நடைபெற்றது.
“முதன்முறையாக மவுன்ட்பேட்டன் பகுதியில் உள்ள பராமரிப்பாளர்களுக்குப் பண்ணைத் தொகுப்புகளை வழங்கினோம். இது உள்ளூர்ப் பண்ணையுடனும் ‘மவுன்ட்பேட்டன் பரிவுமிக்க சமூகங்கள்’ அமைப்புடனும் இணைந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒரு முயற்சி.
இதில், நன்கொடையாளர் ஒருவரையும் உள்ளூர் விளைபொருள்களுக்கான உள்ளூர்ப் பண்ணையையும் ஒன்றிணைத்து, மவுன்ட்பேட்டனில் உள்ள பராமரிப்பாளர்களுக்கு இவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். பராமரிப்பாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார் அந்திமகால இல்ல மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சிம் பீ ஹியா.
பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு என்பது முக்கியமாக மாற்றுப் பராமரிப்பையும் பராமரிப்புத் திறன்களுக்கான பயிற்சியையும் சுற்றியே அமைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு பராமரிப்பாளரும் ஒவ்வொரு தனிமனிதர் என்பதால் அவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் அவர்கள் ஆற்றும் கடமைகளுக்காகவும் பொறுப்புகளுக்காகவும் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று மேலும் வலியுறுத்தினார் திருவாட்டி சிம் பீ ஹியா.
இந்த விநியோக முயற்சியில் கலந்துகொண்ட மவுன்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸு கீ, ‘ஃபார்ம் பேக் ஃபார் குட்’ பைகளை விநியோகம் செய்தார்.
“பராமரிப்பாளர்கள் பலர் எதிர்கொள்ளும் உடனடிச் சவால் அவர்கள் சமூகத்தின் கவனத்திற்கு வராமல் இருப்பதுதான் என்று நான் கருதுகிறேன். பராமரிப்பதில் தங்களின் முழு உழைப்பையும் செலுத்துகிறார்கள். உதவி கேட்பது என்பது உங்கள் அன்புக்குரியவர்களை இன்னும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது,” என்று கூறினார் திருவாட்டி கோ ஸு கீ.
சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க விரும்பும் பெருநிறுவனப் பங்காளர்களைக் கொண்டு இந்த நோக்கத்திற்கு நிதியளிக்க முடிகிறது என்று பகிர்ந்துகொண்டார் லோக்கல் ஃபார்ம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கேனி எங்.
“ஒவ்வொரு ‘ஃபார்ம் பேக் ஃபார் குட்’ பையிலும் நான்கு வகையான காய்கறிகள், ஒரு காளான், ஒரு பட்டாணி முளை, இரண்டு தட்டு முட்டைகள், குறைந்த ஜிஐ கொண்ட அரிசி ஆகியவை உள்ளன,” என்றார் லோக்கல் ஃபார்ம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கேனி எங்.
சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் இது போன்ற முயற்சிகள் மேலும் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
