‘அறிவார்ந்த நாடு’ என்ற அடைமொழி, சிங்கப்பூரின் துணிச்சலான முடிவுகளுக்கும் சரியாக திட்டமிடுதலுக்குமான வெகுமதி.
பெருநிறுவன முதலீடு முதல் அரசதந்திர உறவுகள் வரையில் நாட்டின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கும் கைகொடுக்கிறது மற்ற நாடுகள் மதிக்கும் ‘அறிவார்ந்த’ நம் நிலை.
எனவே, தானியக்கப் போக்குவரத்தின் ஒருங்கிணைப்பை அரசாங்கம் முடுக்கிவிடவேண்டுமே தவிர தேங்கவிடாமல் இருப்பது முக்கியம்.
சிங்கப்பூரில் தானியக்க வாகனங்களின் பயன்பாடு தொடக்க நிலையில் உள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய 15 வாகனங்கள் தற்போது பொங்கோலில் இயங்குவதாகப் போக்குவரத்து அமைச்சு நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட தகவல் குறிப்பிடுகிறது.
அத்தகைய வாகனங்களின் அறிமுகம் குறித்து கடந்த ஆண்டு ஜூன் அறிவித்த போக்குவரத்து அமைச்சரும் நிதித்துறை இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பொங்கோல் வட்டாரத்தில் தானியக்க வாகனங்கள் நூலிழையில் விபத்துக்குள்ளாகாமல் இருந்ததை அண்மை ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதன் தொடர்பில் பலர் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் கவலைகள் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகளாக மாறக்கூடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் ‘வெய்மோ’, சீனாவின் ‘அப்போலோ கோ’, ‘போனி.ஏஐ’, ‘வீரைட்’ ஆகிய நிறுவனங்களின் தானியக்க கார்கள் சாலைகளில் திரளாக வலம் வருகின்றன.
மனித ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும் தானியக்க கார்களால் ஏற்படும் விபத்துகள் ஏறத்தாழ 80 விழுக்காடு வரை குறைவு என்று ‘வெய்மோ’ நிறுவனத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
தானியக்க வாகனங்கள் தொடர்பான கடுமையான விதிமுறைகளை ஏற்கெனவே வகுத்துள்ள சிங்கப்பூர், சட்டக் கட்டுப்பாடுகளை மேலும் வலுவாக்கவுள்ளது. தொழில்துறை, கல்வித்துறை, தொழிற்சங்கம், அரசாங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 17 பேர் குழு, அதன் தொடர்பில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை கடந்த ஆண்டுமுதல் ஆராய்ந்து வருகிறது.
‘செட்ரன்’ சோதனை, அனுமதிக்கான கட்டாய விண்ணப்பம், அபாய ஆய்வுக்கான மதிப்பீடுகள், நிலப்போக்குவரத்து ஆணைய அனுமதி எனப் பல கட்டங்களைக் கடந்துதான் இத்தகைய வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்படுகின்றன.
அடுத்த மாதம் முதல் தானியக்க வாகனங்கள் பற்றியும் பயணிகளின் அனுபவம், பாதுகாப்புத் தரநிலை போன்றவற்றை விவரிக்கும் காலாண்டு அறிக்கையையும் வெளியிட நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மக்கள் பயன்படுத்தும் சாலைகளுக்கு ஏற்ப தானியக்க வாகனங்கள் தகவமைத்துக் கொள்ளும் நேரத்தில் மக்களும் அவற்றை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வது நல்லது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நன்மை அடைய விரும்பும் சமுதாயத்திற்கு நேர்மையான நிர்வாகமும் மேம்பட்ட தற்கட்டுப்பாடும் அவசியம். முறையாக சாலையைக் கடப்பது, ஒழுங்கு பிறழாமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை நாம் இக்காலகட்டத்தில் பின்பற்றவேண்டிய அடிப்படைகள். கூடுதல் வழிமுறைகளையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சூழல் எப்படி மாறினாலும் அதனைப் புரிந்து நடக்கும் திறனே சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறையை முன்னேற்றும்.
