வாழ்வின் முக்கியக் கட்டங்களில் திட்டமிடப்படாமல் விட்டுவிடப்படும் ஒன்று மரணம்.
எனினும், நிச்சயம் நிகழக்கூடிய இந்த இறுதிப் பயணத்திற்கு முன்கூட்டியே திட்டமிடுவது, ஒருவர் தனது குடும்பத்திற்குச் செய்யக்கூடிய ஆகச் சிறந்த அன்பின் வெளிப்பாடாகும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) 2025ல் நடத்திய ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்களது இறுதிக்கால விருப்பங்களைப் பற்றி உறவினர்களிடம் பேசவோ அல்லது எழுதி வைக்கவோ இல்லை என்பது தெரியவந்தது.
ஆசியச் சமூகத்தில் மரணம், துக்கம் சார்ந்த விஷயங்கள் இன்னும் பேசக்கூடாத ஒன்றாகவே பார்க்கப்படுவதாக கருத்துரைத்த உளவியல் நிபுணர்கள், அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நடைமுறைப் பணிகளைத் தனித்து எதிர்கொள்வது பெரும் மன உளைச்சலைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, ஒருவரது மறைவுக்குப் பின் எழும் குழப்பங்களைத் தவிர்க்க ‘மரணத்திற்கு முந்தைய பட்டியல்’ (Death To-Do List) ஒன்றைத் தயாரிப்பது முக்கியம். அப்படி ஒரு பட்டியலைத் தயாரிப்பது வாழ்வின் முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தவும் உதவும்.
பட்டியலில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை:
இறுதிச்சடங்கு விருப்பங்கள்
இறுதிச் சடங்கு எந்த முறைப்படி நடக்க வேண்டும், எங்கு நடக்க வேண்டும், தகனம் செய்த பின் சாம்பலை என்ன செய்ய வேண்டும் போன்ற தெளிவான முடிவுகள் தனிப்பட்ட விருப்பங்களை முன்கூட்டியே எழுதி வைக்கலாம். இதற்கான செலவுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைப்பது குடும்பத்தினருக்கு நிதிச் சுமையைக் குறைக்கும். ஒரே குடும்பத்தில் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கும் சூழலில், இது தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கும்.
உயில், சொத்து விவரங்கள்
உயில் என்பது சொத்துப் பகிர்விற்கு மட்டுமல்லாமல், சிறு பிள்ளைகள், மற்றும் செல்லப் பிராணிகளின் பராமரிப்பை உறுதிசெய்யவும் உதவும்.
அத்துடன், கடின உழைப்பால் சேர்த்த சொத்து, விரும்புபவர்களுக்குச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது.
உயிலுடன் ஒரு ‘விருப்பக் கடிதத்தையும்’ இணைத்து, சொத்துப் பகிர்வுக்கான காரணங்களைக் குறிப்பிடுவது குடும்ப உறவுகளில் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
சொத்துகள், வங்கிக் கணக்குகள், காப்பீட்டுத் திட்டங்கள்,முதலீடுகள், கடன்கள், மின்னிலக்க நாணயம் (கிரிப்டோகரன்சி), போன்றவை குறித்த விவரங்களை உயிலை நிறைவேற்றும் உரிமையுள்ளவரிடம் பகிர்வது அவசியம்.
அவற்றுக்கு வாரிசுகளை (Nominees) நியமிப்பதன் மூலம், அவை சட்டச் சிக்கல்கள் இன்றி குடும்பத்தினருக்குச் சேரும்.
மருத்துவம், சட்ட நடவடிக்கைகள்
முடிவெடுக்கும் திறனை இழக்கும் சூழலுக்குத் தயாராக ‘நீண்டகால அதிகாரப் பத்திரம்’ (LPA) தயாரிப்பது, தீவிர சிகிச்சைகள் குறித்த தேர்வுகள் போன்றவற்றை எழுதிவைப்பது குடும்பத்தினரின் சுமையைக் குறைப்பதுடன் பல்வேறு பிரச்சினைகளையும் தவிர்க்கும்.
ஒருவேளை பேசவோ அல்லது முடிவெடுக்கவோ முடியாத தீவிர மருத்துவச் சூழல் ஏற்பட்டால், என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கலாம். உங்களுக்காக மருத்துவ முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.
அன்றாட நடவடிக்கைகள்
கைப்பேசி மறைச்சொல், சமூக ஊடகக் கணக்குகள், மின்சாரக் கட்டணம் போன்ற மாதாந்தர சந்தாக்கள், முக்கியமான ஆவணங்கள் இருக்கும் இடங்களைக் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துவது முக்கியம்.
இறுதியாக, அன்புக்குரியவர்களுக்கு நினைவுக் கடிதங்கள் அல்லது காணொளிச் செய்திகளை விட்டுச் செல்வது, அவர்களின் துயரத்தைப் போக்கும் பொக்கிஷமாக அமையும்.
நோய்வாய்ப்படும்வரை காத்திருக்காமல், இப்போதே சிறுகச் சிறுகத் திட்டமிடுவது பல வகையிலும் உதவியாகவும் மனத்துக்கு நிம்மதி அளிப்பதாகவும் இருக்கும்.
