அனைவரையும் ஈடுபடுத்துவது சமூகத்தின் கடப்பாடு

புதிய முகங்களுக்கு வாய்ப்பளிப்பதும் தமிழ் ஆற்றலை வளர்ப்பதும் அவசியம்

அனைவரையும் ஈடுபடுத்துவது சமூகத்தின் கடப்பாடு

2 mins read
c7e180b8-6e4a-4033-be2c-dc214f82a265
தமிழர் பாரம்பரிய கலைகளிலும் விளையாட்டுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபடும் தமிழர்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு
multi-img1 of 2

தொன்மையான மொழியின் ஆழத்தைத் தொண்ணூறு நிமிடங்களில் மக்களுக்குப் புரியும் விதத்திலும் அதை விரும்பும் விதத்திலும் எடுத்துக்கூறுவது என்பது சவால்மிக்க ஒன்றே.

இருப்பினும், இச்சவாலை ஏற்றுக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாகச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எல்லாத் தரப்பினருக்கும் தமிழின் சிறப்பை வெற்றிகரமாக எடுத்தியம்பி வருகிறது தமிழ்மொழி விழா. 

பேச்சுத் தமிழ்ப் புழக்கத்தை மாணவர்களிடையே அதிகரிக்கும் நோக்கில் 2007ஆம் ஆண்டு தொடங்கியது இவ்விழா. ஆனால், நிகழ்ச்சிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால், இவை உண்மையில் யாருக்குக் கைகொடுக்கின்றன?

ஒவ்வோர் ஆண்டும் மக்களை ஈர்க்க, நிகழ்ச்சிகள் காலத்திற்கேற்ப மாற்றிவடிவமைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஈடுகொடுத்து இளையர்களை ஈர்க்க, செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

எடுத்துக்காட்டாக,  ஆக அதிகமான திருக்குறள் ஓவியங்களைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு காட்சிப்படுத்திச் சாதனை படைத்தது இவ்வாண்டின் திருக்குறள் விழா. 

புகழ்பெற்ற காப்பியமான சிலப்பதிகாரத்தைப் புதிய, எளிய வடிவில் மக்களுக்குக் கொண்டுசேர்த்தது கவிப்பெருக்கு.

இருந்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதே புன்முறுவல்கள், அதே முகங்கள். 

மேடையிலும் சரி, அரங்கத்திலும் சரி, புதிய முகங்களைக் காண்பது அத்திபூத்தார் போலவே உள்ளது.

தமிழ் உயிர் எழுத்துகளின் வரிசையில் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டின் கருப்பொருள் ‘இளமை’. இவ்வாண்டின் கருப்பொருள் ‘ஈடுபாடு’. 

ஒருவர் ஆற்றும் உரையைக் கேட்டுச் சிரிப்பது ஈடுபாடா? நண்பருக்கு ஆதரவுகொடுக்க, அவர் நடிக்கும் நாடகத்திற்குச் செல்வது ஈடுபாடா? இத்தகைய கேள்விக்குரிய நிலையில் ஒரு சில நிகழ்ச்சிகள் உள்ளன.

வேறு பல நிகழ்ச்சிகளில் இளையர்கள் உட்பட புதிய முகங்கள் மேடையேறுவதற்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. பங்கேற்பவர்கள் யாவரும் மொழியில் அபாரமான ஆளுமை கொண்டவர்களாகவே உள்ளனர். 

தமிழில் ஆர்வம் இருந்தாலும், பிறரோடு ஒப்பிடுகையில் தமிழ்மொழி ஆற்றல் ‘குறைவாக’ உள்ளதால், சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

இவ்வாறு, தமிழ் ஆற்றல் கொண்டவர்களுக்கும் தமிழ் ஆற்றலை வளர்க்க விரும்புவோருக்கும் இடையே ஒரு பிரிவினையை தங்களை அறியாமலேயே சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்திவிடுகின்றன. இதைச் சரிசெய்யும் பொறுப்பு ஓர் அமைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. இது, ஒரு சமூகத்தின் பொறுப்பு. 

திறமை உள்ளோரை மேடையேற்றி அழகுபார்க்கும் அமைப்புகளும் அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளும், தமிழ் ஆர்வமிருந்தும் ஆற்றலை வளர்க்க விரும்புவோருக்கான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் ஆராய்ந்து ஏற்பாடு செய்ய முனைந்தால் ஒன்றுபட்ட, அனைவரையும் அரவணைக்கும் தளமாகத் தமிழ் சமூக நிகழ்ச்சிகளுக்கு மறுவடிவம் கொடுக்கலாம். 

தமிழ்மொழி ஆற்றல் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி வைத்திருப்போருக்குள் இருக்கும் தமிழ் ஆற்றலைக் கண்டறிந்து, அதை வளர்த்து, அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் ‘ஈடுபாடே!’ 

ஈடுபடுவோம்! தமிழ்மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்கத் தலைமுறைத் தாண்டியும் ஒன்றுபடுவோம்! 

குறிப்புச் சொற்கள்