முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக தாம் பதவியேற்றதிலிருந்து சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பதாக டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“அனைத்து வயதினரும் வாழ்வில் சிறந்து விளங்க அனைவர்க்கும் சமமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற ஒரு தொலைநோக்குப் பார்வை இது,” என்றார் அவர்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு டாக்டர் ஃபைஷால் உரையாற்றினார்.
இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாது சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்புக்கும் சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம் பங்களித்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.
“சங்கத்தின் பாதையில் நடந்த பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு இன்றைய இளையர்களும் சமூக உணர்வில் ஒன்றிணைவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் டாக்டர் ஃபைஷால்.
அவருடன் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் கலந்துகொண்டார்.
“ஒவ்வொரு குடும்பத்தின் வலிமை, சமூகத்தின் வலிமைக்குப் பங்களிக்கிறது. வலிமையான சமூகம், வலிமையான சிங்கப்பூரை வெளிப்படுத்துகிறது,” என்று தமிழ் முரசிடம் டாக்டர் ஹமீது ரசாக் கூறினார்.
கிட்டத்தட்ட 580 மக்கள் திரண்ட குடும்ப விழாவில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அவர் அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பாக, இளையர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து உயர்த்துவது சமூகத்தையும் மேலும் வலுப்படுத்தும்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம் தனது 85வது ஆண்டு நிறைவை எட்டியிருப்பது மற்றொரு சிறப்பு.
அனைத்து வயதினரையும் ஒன்றிணைக்கும் வண்ணம், இவ்வாண்டின் குடும்ப தினம் அமைய புதுமையான ‘கார்னிவல்’ பாணியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் முகமது ஹுசேன், 49, கூறினார்.
சிறுவர்களுக்கான விளையாட்டுக் கூடங்கள், உணவு பானக் கூடங்களுடன் மதிய உணவில் சுவையான பிரியாணியைப் பங்கேற்பாளர்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
அத்துடன், வண்ணம் தீட்டும் போட்டி, மறைந்திருக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கல் என சுவாரசியமான அங்கங்களும் இடம்பெற்றன.
தம் மகன், பேரனுடன் குடும்ப விழா குதூகலத்தில் பங்குபெற்றனர் செய்யது மஜ்னூன் - பல்கிஸ் பீ பீ தம்பதியர்.
“நமது முன்னோர்கள் பெரிய குடும்பங்களில் வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று, இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் நாம் ஒன்றுகூடுகிறோம்,” என்றார் திரு மஜ்னூன், 76.
குடும்பத்துடன் ஒன்றிணைவது மட்டுமின்றி நமது மரபு, மக்கள், சமூகத்தைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூற இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன என்றார் அவரின் மகன் முகமது ரசீன், 38.

