தமிழ்த் திரையுலகில் போற்றப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் ‘மற்றும்’ குழுவினர் அமைப்பின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஜூன் 14 ஆம் தேதி நடந்தது.
தமிழ்த் திரையுலகின் போக்கைத் திசைத்திருப்பிய பாரதிராஜாவின் கலைப் படைப்புகளின் தனித்துவங்களை ஆராயும் நோக்கத்தில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ தொடங்கி கடைசிப் படமான ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரை மக்கள் பார்த்து ரசித்து, வியந்த, நெகிழ்ந்த தருணங்கள் என்று பல்வேறு கோணங்களில் பாரதிராஜாவின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
கதைத் தேர்வுகள், வசனங்கள், நடிப்பு என்று அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதித்துள்ள இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றிய கலந்துரையாடல் மும்முரமாக நடைபெற்றது.
எளிய மக்களின் உணர்வுகளையும் அவர்களது மொழியையும், உறவுச் சிக்கலையும், நெருக்கடிகளையும், பண்பாட்டையும் இயல்பு மாறாமல் திரையில் காட்சிப்படுத்திய பாரதிராஜாவின் படைப்புகள் இந்தச் தமிழ் சமூகத்தால் என்றும் கொண்டாடப்படும் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

