தீபாவளிக்கான முக்கியச் சந்தைகளில் ஒன்றாகத் திகழும் பர்ச் சாலைச் சந்தை, கட்டுப்படியான விலையில் பண்டிகைக்கால ஆடைகளுக்கும் அணிகலன்களுக்கும் பெயர்பெற்றது.
மோல்மின் சமூக மன்றம், இந்து அறக்கட்டளை வாரியம், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் இடம்பெறும் இந்தச் சந்தை, மக்களின் தீபாவளி அனுபவத்தில் இரண்டறக் கலந்துள்ளது.
இருந்தபோதும், நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ள இந்தச் சந்தையில் தற்போது தீபாவளிப் பொருள்கள் விற்காத கடைகள் பெருகிவிட்டது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
தீபாவளிக்கென தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ள சந்தையில் அத்தகைய கடைகள் இடம்பெறுவது குறித்துக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியர்கள் நாடும் புத்தாடைகள், அணிகலன்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை விற்கும் கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்வதற்குத் தனிப்பட்ட வணிகச் செலவுகளைச் செய்கின்றன.
மலிவான விலை, தெரிந்த கடைக்காரர்கள் போன்ற காரணங்களால் பர்ச் சாலைச் சந்தையை வாடிக்கையாளர்கள் நாடுகின்றனர். அதே நேரத்தில், தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்க கூடுதல் பணத்தைச் செலவு செய்ய தயாராக இருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது. கூடுதல் செலவானாலும் ‘ஸாக் சலாம்’, ‘தேக்கா பிளேஸ்’, ‘நமஸ்தே பாரத்’ போன்ற குளிரூட்டப்பட்ட இடங்களில் பொருள் வாங்க பலர் விரும்புகின்றனர்.
இதன் தொடர்பில் கடைக்காரர்களில் சிலர், தங்களது அனுபவங்களையும் கோரிக்கைகளையும் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
வாடகையில் வேறுபாடு
வாடகை உயர்வு, அடிப்படை வசதிக் குறைபாடுகள், தீபாவளிப் பொருள் விற்கப்படாத கடைகளின் ஆதிக்கம் போன்ற பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்த இரவுச் சந்தையில் இரண்டாவது முறையாகக் கடை அமைத்துள்ள ‘சிங்கா சில்க்ஸ்’ துணிக்கடை உரிமையாளர் தீபிகா, அதற்காக $8,000 வாடகை செலுத்துகிறார்.
இங்குள்ள கடைகளுக்கான வாடகை, கடையின் அமைவிடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. முன்புறம் உள்ள கடைகளுக்கு $9,000 முதல் $10,000 வரை வாடகை.
சந்தையின் பின்பகுதியில் மூலைகளில் சராசரியைவிட குறைவாக, அதாவது $5,000 முதல் $7,000 வரையிலான வாடகைக்குக் கடைகள் கிடைத்தாலும், அங்கு தமது வணிகம் சரியாக நடக்காது என்று அவர் கூறுகிறார்.
“எங்களுக்குப் பக்கத்திலுள்ள கடைகள் தீபாவளிக் கடைகளாக இருந்தால் நம் வணிகமும் நன்றாக ஓடும். ஆனால், இரவுச் சந்தைக் கடைகள் வணிகத்தைப் பாதித்துவிடும்,” என்றார் அவர்.
இந்தியாவிலிருந்து ஆடைகளைத் தருவிப்பதற்கான கப்பல் கட்டணம், வணிக வரிகள் ஆகியவற்றால் பண்டிகைக்காலப் பொருள்களைக் கொண்டுவருவதற்கு அதிகச் செலவாகிறது. இந்தச் செலவுகளோடு அதிகப்படியான கடை வாடகையையும் சேர்க்கும்போது, லாபம் வைத்து நியாயமான விலையில் ஆடைகளை விற்க முடிவதில்லை என்று திருவாட்டி தீபிகா கூறினார்.
இந்தியப் பாரம்பரிய உடைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் மனநிறைவுக்காகவே இதனைச் செய்வதாகக் கூறும் அவர், புதிதாகத் தொழில் தொடங்குவோர்க்கு வாடகையில் சலுகை வழங்கக் கோரியபோதும் எந்த மாற்றமுமில்லை என்றார்.
வாடகையில் நிலவும் பொருத்தமற்ற ஏற்றத்தாழ்வினால் தீபாவளிப் பொருள்கள் விற்கும் கடைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் ‘ஏ கிளாசிக் ஃபேஷன் பொட்டிக்’ (A Classic Fashion Boutique) என்ற கடையை நடத்திவரும் திரு பாலு மகேந்திரன், முன்புறம் உள்ள கடைகளுக்கு $9,000 வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும், தாம் எடுத்துள்ள இரண்டு கடைகளுக்கு $15,000 செலுத்தி உள்ளதாகவும் சொன்னார்.
ஆனால், தீபாவளி அல்லாத வணிகங்களுக்கு ஒரு கடைக்கு $5,000 என்ற கணக்கில் நான்கு கடைகள் $20,000 வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர்,வாடகை வேறுபாடு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் கூறுகிறார்.
“சந்தையில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள போதிலும், பாரம்பரிய இந்திய ஆடைகளான ‘பஞ்சாபி சூட்’ கடைகள் ஆறு மட்டுமே உள்ளன. முன்பு 15 முதல் 20க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இருந்த இடத்தில், தற்போது அதிகப் பணம் தருவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் மலிவு விலைப் பொருள்கள் விற்கும் கடைகளே அதிகமாக இடம்பிடித்துள்ளன,” என்று அவர் கூறினார்.
இதனால் சந்தையில் தீபாவளிக்கான சிறப்பு மங்கி, வழக்கமான இரவுச் சந்தைபோலக் காட்சியளிப்பதாகவும், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் பொருள்களை வாங்காமலேயே திரும்பிச்செல்வதாகவும் அவர் வருத்தத்துடன் சொன்னார்.
“இந்தியாவிலிருந்து துணிகளை இறக்குமதி செய்வதற்கான சரக்குக் கப்பல் கட்டணம், அதிக வாடகை, தொழிலாளர் சம்பளம் சேர்ந்து மிகுந்த நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன. தீபாவளிப் பொருள்களை விற்காத கடைகளுக்கு அச்சுமை இல்லை,” என்றும் திரு பாலு குறிப்பிட்டார்.
வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
சந்தைக்குள் உணரப்படும் புழுக்கத்தைச் சமாளிக்க கடைக்காரர்களே சொந்தமாக மின்விசிறிகளை வாங்கி வைத்திருந்ததைக் காண முடிந்தது.
கடைகளுக்கு எண்கள்கூட இடப்படாததால் ‘ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஏ1 ரெஸ்டாரன்டிற்கு எதிரே’ என்பது போன்ற அடையாளங்களை வைத்து வாடிக்கையாளர்களை அழைக்க கடைக்காரர்கள் முயல்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சந்தையில் கழிப்பறை வசதி இல்லாததால், குறிப்பாகப் பெண் ஊழியர்கள் மருத்துவமனைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் அலைய வேண்டிய நிலை இருப்பதைத் திரு பாலு சுட்டிக்காட்டினார்.
2019ல் முதன்முதலாக பர்ச் சாலைச் சந்தையில் கடை அமைத்திருந்த அவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவ்வாண்டு மீண்டும் அங்குத் திரும்பியுள்ளார்.
இம்முறை நடக்கும் வணிகத்தை வைத்தே எதிர்காலத்தில் கடை போடுவதைப் பற்றி உறுதியான முடிவெடுக்க முடியும் என்று கூறும் அவர், குத்தகை எடுப்பவர்கள் வாடகையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும் தீபாவளிச் சந்தையில் இந்திய வணிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
தீபாவளிச் சந்தையில் வாடகை உயர்வு, அடிப்படை வசதிக் குறைபாடுகளால் உள்ளூர் வணிகர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து ‘மிரிகாஸ் ஃபேஷன்ஸ்’ (Mriga’s Fashions) கடையின் உரிமையாளரான திருவாட்டி பாகீரதி தமது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இம்முறை சந்தை அமைப்பாளர்கள் வாடகையை 1,000 முதல் 2,000 வெள்ளி வரை உயர்த்தியுள்ளதோடு, மின்கட்டணத்தையும் 500 வெள்ளியிலிருந்து 650 வெள்ளியாக அதிகரித்திருப்பதாக அவர் சொன்னார். 12 ஆண்டுகளாகத் தீபாவளிச் சந்தையில் கடைபோட்டுவரும் அவர், வாடகைச் செலவை ஈடுகட்டவே 15 நாள்கள் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டியுள்ளதாகக் கவலையுடன் கூறினார்.
மேலும், அதிக வாடகை வசூலிக்கும் அமைப்பாளர்கள், அரசாங்கத்திடம் இடத்தைக் குத்தகைக்கு எடுத்து லாபம் பார்க்க மட்டுமே நினைக்கிறார்களே தவிர, வணிகத்தைப் பெருக்க விளம்பர, சந்தைப்படுத்தல் முயற்சிகளையோ, சலுகை அறிவிப்புகளையோ அதிகம் செய்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தையில் போதுமான காற்றோட்ட வசதியோ, பொதுவான இடங்களில் மின்விசிறிகளோ இல்லாததால், வாடிக்கையாளர்களும் வணிகர்களும் புழுக்கத்தையும் அவ்வப்போது புகைமூட்டத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளதாகத் திருவாட்டி பாகீரதி கூறினார்.
தம்மைப் போன்ற உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசாங்கம் விலைக்கழிவு வழங்கி ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு இடையிலும் அங்குள்ள வணிகர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து இந்தத் தீபாவளிச் சந்தையைச் சமாளித்து வருகின்றனர்.
நல்ல நினைவுகள் ஏராளம்
சிங்கப்பூரில் நடைபெறும் தீபாவளிச் சந்தையில் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கடைபோட்டு வருகிறார் ‘எஸ்கே டிரேடிங்ஸ்’ உரிமையாளர் மாரிமுத்து கலையரசி.
தொடக்கக் காலத்தில் ‘லதா மியூசிக் சென்டர்’ என்ற பெயரில் குறுந்தகடு, ஒலிநாடா, தீபாவளி வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை விற்றுவந்த இவர், காலமாற்றத்திற்கு ஏற்ப தற்போது தீபாவளி அலங்காரப் பொருள்களையும் தின்பண்டங்களையும் விற்று வருகிறார்.
கடைகளுக்கான வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்துப் பேசிய அவர், குத்தகைக்கு எடுப்பவர்கள் அதிக வாடகைக்குக் கடைகளை விட்டாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப தாங்கள் பழகிக்கொண்டதாகக் கூறினார்.
இருந்தபோதும், தீபாவளி என்றாலே தங்களுக்கு இந்தச் சந்தையின் நினைப்பும் அந்த உற்சாக உணர்வும் தானாகவே வந்துவிடும் என்று அவர் சொன்னார்.
வாடகை உயர்கிறது என்பதற்காகப் பொருள்களின் விலையைத் திடீரென உயர்த்த முடியாது என்றும் தங்களுக்கென வரும் நிரந்தர வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நியாயமான விலையில் தரமான பொருள்களையே வழங்கி வருகிறோம் என்றும் திருவாட்டி கலையரசி கூறினார்.
உள்ளூர்வாசிகளின் ஆதரவு தேவை
சந்தையைப் பார்வையிட வந்த 59 வயதான ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி ராமதாஸ், 58 வயதான குடும்பத்தலைவி அபிராமி ஆகியோர், முன்பு போல இப்போது சந்தையில் இந்தியப் பாரம்பரியக் கடைகள் அதிகம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டனர்.
சந்தையில் பாரம்பரியக் கடைகளுக்குப் பதிலாக மற்றப் பொருள்கள் விற்கும் கடைகளும், கேளிக்கை விளையாட்டுகளும் அதிக இடத்தைப் பிடித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
கடந்த காலங்களில் சந்தையில் பரவலாகக் காணப்பட்ட திரைச்சீலைகள், மேற்சட்டைகள் ஆகியவற்றை விற்கும் கடைகள் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டதைத் திருவாட்டி அபிராமி சுட்டிக்காட்டினார்.
இருந்தபோதும், சிங்கப்பூரில் தீபாவளிச் சந்தைப் பண்பாட்டைப் பேணும் வகையில் இந்த உள்ளூர்ச் சந்தைக்குத் தொடர்ந்து முழுமையாக ஆதரவளிக்கப்போவதாகத் திரு ராமதாஸ் கூறினார்.
மற்ற இடங்களில் சந்தைகள் தோன்றினாலும் பர்ச் சாலைச் சந்தைக்கெனத் தனித்துவம் இருப்பதாகக் கூறினார் அழகுநிலையப் பராமரிப்பாளர் மதியழகி, 37.
“ஐந்து வெள்ளிக்கே தரமான மேலாடைகள் கிடைக்கும். சிறப்பு விலையாக இரண்டு சுடிதார் மேலாடைகளை 10 வெள்ளிக்கு வாங்கலாம். தீபாவளிக்கு முதல் வாரத்தில் இத்தகைய சலுகைகள் அதிகம் இருக்கும். அப்போது வந்து வாங்குவேன்,” என்றார் அவர்.
ஏற்பாட்டாளர்கள் கடப்பாடு
இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தை ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன், பெரும்பாலான கடைகள் தொடர்ந்து பண்டிகைக்கான பொருள்களை விற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
“இனிவரும் காலங்களில், மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவும், பண்டிகைக் காலச் சூழலுக்கு மெருகூட்டவும், கூடுதலான தீபாவளிப் பண்டிகைக் கூறுகளையும் கொண்டாட்டங்களையும் இணைத்து துடிப்புமிக்க சூழலை உருவாக்க நாங்கள் முற்படுவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.
நியாயமான, கடைக்காரர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய அளவில் வாடகை வசூலிக்கும்படி சந்தை குத்தகையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி சரோஜினி, அதே வேளையில், சந்தை நிலவரங்கள் வாடகை விகிதங்களைப் பாதிப்பதை அனைவரும் உணரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“வணிகர்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு சந்தை நிர்வாகியை நாங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
