ஓயாத வேண்டுதல், அசையாத நம்பிக்கையுடன் நாள்தோறும் இறைவனை நாடி வருவோர்க்கு ஆண்டு முழுவதும் இறையாசிகளை வழங்கி வரும் சமய போதகர்களுக்கும் வேண்டுதல் உண்டு. இந்தப் புத்தாண்டில் அவர்களின் பிரார்த்தனை என்னவாக இருக்கும்?
தீமைகள் அகன்று உலகம் தழைக்க வேண்டுதல்:
கடந்த ஆண்டு நிகழ்ந்த தர்மசங்கடங்கள், தீமைகள் யாவும் அகன்று உலகில் நன்மையே நிறைந்திட வேண்டும் என்று வாழ்த்தினார் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் மூத்த அர்ச்சகர் திரு விக்னேஷ் சுவாமிநாதன், 39.
கோயிலின் 44 வயது தலைமைப் பண்டாரம் திரு வேணுகோபால் திருநாவுக்கரசு, ‘‘சிங்கப்பூர் மக்கள் தங்கள் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடையவும், பிள்ளைகள் கல்வியில் சிறக்கவும், உலகில் இன்பம் நிலவும்,’’ தொடர்ந்து பிரார்த்திப்பதாக வாழ்த்தினார்.
வெற்றியின் பாதை உரித்தாகுக
பாசிர் பாஞ்சாங் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் இணைப் போதகர் அருள்திரு ரங்கநாதன் பிரபு, 72 ‘‘எதிர்வரும் ஆண்டில் பயணிக்கவிருக்கும் ஒவ்வொருவரையும் எல்லாம் வல்ல இறைவன் வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்லட்டும்,’’ என்று நல்வாழ்த்துத் தெரிவித்தார்.
வாழ்வில் இருக்கும் எதிர்பார்ப்புகள், போராட்டங்கள், தேவைகள் எல்லாவற்றையும் கடந்து 2026ம் ஆண்டில் வாகை சூட ஆண்டவர் துணைபுரிய வேண்டும் என்று உளமார பிரார்த்திப்பதாகக் கூறினார் போதகர் பிரபு.
நல்லிணக்கமும் தோழமையும் மேலோங்க வாழ்த்து
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டைச் சிறப்பாக மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக எல்லா வகையிலும் நன்முறையில் திட்டமிடுவது, சென்ற நாள்களைக் காட்டிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது, கடந்தகால நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு முன்னேற்றம் மிகுந்த ஆண்டாக இந்த ஆண்டை அமைத்துக் கொள்வதற்கான சிந்தனை முக்கியம் என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி, 41, வாழ்த்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இஸ்லாமிய சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்று எதுவுமில்லை என்றாலும், சமூகத்தின் நல்லிணக்கத்தை முன்னிட்டு, உடன் பணிபுரிவோர், வாழ்க்கைப் பாதையில் உடன்பயணிப்போர் உள்பட அனைத்துத் தோழர்களோடும் ஒற்றுமை, அன்புடன் எல்லோரும் முன்னேற வேண்டும் எனும் இலக்குடன் செயல்பட வேண்டும்,’’ என்று அவர் கூறினார்.
நல்லெண்ணம் அமைதி நிலைக்க நல்லாசி
பிறந்துள்ள புதிய ஆண்டு, உலகில் உள்ள ஒவ்வோர் உயிர்க்கும் நலம், செல்வம், அமைதி, மகிழ்ச்சி, நல்லெண்ணம் ஆகியவற்றை நல்கட்டும் என்று வாழ்த்து கூறினார் ஸ்ரீலங்கராமையா பௌத்த ஆலயத்தின் பௌத்த பிக்கு முனைவர் கே.குணரத்ன தெரோ. கனிவுமிகுந்த சமூகமாக உலகம் நிலைப்பெற்று அருள்மழை பொழிய வாழ்த்துவதாக நிறைவுசெய்தார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய ஆண்டில் மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் தலைமை அர்ச்சகர் வாசுதேவ பட்டாச்சாரியர்.
‘‘பக்தர்கள் அனைவருக்கும், குறிப்பாக அனைத்து சமூகத்தினருக்கும் நீண்ட ஆயுளுடன் கூடிய நல்வாழ்வு எந்நாளும் கிடைக்க வேண்டும். அதற்கான வேண்டுதல் தொடரும்,’’ என்றார் அவர்.

