இந்தியக் கலாசாரத்தை எடுத்துக்காட்டிய குடும்ப விழா

இந்தியக் கலாசாரத்தை எடுத்துக்காட்டிய குடும்ப விழா

2 mins read
db76f357-2f8e-4087-a28c-9457889c80e5
விழாவில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங்கும் மரின் பரேட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர்களும் பங்காளித்துவ இந்திய அமைப்புகளின் தலைவர்களும் புகைப்படம் எடுத்துகொண்டனர். - படம்: சிக்ஸ்5 புரொடக்‌‌ஷன்ஸ் எல்எல்பி

மரின் பரேட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய அதன் முதல் இந்தியக் கலாசார குடும்ப விழாவில் ஏறக்குறைய 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.

குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் ஈஸ்ட் கோஸ்ட் கிளையில் நடைபெற்ற இந்த விழா, ஈஸ்ட் கோஸ்ட்டில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினர் தங்களது கலாசார மரபுடைமையைக்‌ கொண்டாடவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இவ்விழாவில் 12 இந்தியப் பங்காளித்துவ அமைப்புகள் பங்கேற்றன.

மகாராஷ்டிரா மண்டலம், பெங்காலி சங்கம், சிங்கப்பூர் இந்தியர் சங்கம், பஞ்சாபி சங்கம், சிங்கப்பூர் சிந்தி சங்கம், சிங்கப்பூர் குஜராத்தி சங்கம், சிங்கப்பூர் மலையாளி சங்கம், காஷ்மீரி குழு, கன்னட சங்கம், மார்வாரி மித்ரா மண்டல் ஆகிய சங்கங்கள் தங்கள் தனித்துவமான கலாசாரங்களை வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்களைக் காட்சிப்படுத்தின. குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி மாணவர்கள், மருதாணியிடும் சேவையை வழங்கினர்.

விவேகானந்தர் சேவை சங்கம், இந்திய மரபு விளையாட்டுகளைப் பற்றி பொதுமக்‌கள் கற்கவும் அவற்றில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கியது.

இந்தியக் கலைகளின் பன்முகத்தன்மையைப் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் விழாவில் இடம்பெற்ற பாரம்பரிய இசை, நடனம் உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளை உள்ளூர் கோயில்களும் கலாசாரக்‌ கழகங்களும் வழங்கின.

மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் நாணல் நடனக் குழுவினர் மேடையில் கும்மியாட்டம் ஆடினர்.

மேலும், விவேகானந்தர் சேவை சங்கமும் மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து வழங்கிய கபடி போட்டியும் சிங்கப்பூர் இந்தியர் சிலம்பம் சங்கத்தின் சிலம்பப் படைப்பும் விழாவில் சிறப்பம்சங்களாக அமைந்தன.

மனிதவள அமைச்சரும், வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். பாரம்பரிய உடை அணிந்திருந்த அவர், இந்திய அமைப்புகளின் கண்காட்சிகளைப் பார்வையிட்டு, மரபுக் கலைகளில் பங்கேற்று அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

“ஏற்பாட்டாளர்கள் எங்களை அணுகியபோது, உடனடியாக சம்மதித்தோம். ஏனெனில், இதுபோன்ற நடவடிக்கைகளில் நம் மாணவர்களை ஈடுபடுத்தும்போது அவர்களால் சமூகத்துடன் ஒருங்கிணைய முடிகிறது,” என்றார் குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் ஈஸ்ட் கோஸ்ட் கிளையின் தலைமையாசிரியர் சி.வி.கே.சாஸ்திரி, 58.

“மேலும், இந்நிகழ்ச்சிகள் இந்தியக் குடும்பங்களும் மற்ற இனத்தவர்களும் ஒன்றுசேர்ந்து நேரத்தைச் செலவிடவும் இந்தியக் கலாசாரத்தைப் பற்றி ஆழமாக புரிந்துகொள்ளவும் வழிவகுக்கின்றன,” என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தில் உள்ள வெவ்வேறு இனக் குழுக்களைப் பற்றிய விழிப்புணர்வு நமது இந்தியச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சென்றுசேர வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக சொன்னார் மரின் பரேட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஜெயசீலன் கார்த்திகேசு, 63.

“எங்கள் செயற்குழு இந்த விழாவை ஒரு படிக்கல்லாக பயன்படுத்தி, வருங்காலத்தில் இதை விரிவுபடுத்தி, மேலும் பல அமைப்புகளின் பங்கேற்புடன் குழுத்தொகுதி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்