அண்டை வீட்டார் நட்புறவுக்குச் சான்று

4 mins read
c175de7c-d6a6-4fdf-932c-2c82e972322e
(இடமிருந்து) திருவாட்டி அமலினா, திரு சுக்ரி, திரு பிரதாப், திருவாட்டி லத்தாஷ்னி, திருவாட்டி சங்கீதா ஆகியோருடன் திருவாட்டி அமலினாவின் மூன்று மகள்களும். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் சிங்கப்பூரில் அண்டைவீட்டாரின் நட்புறவைப் பறைசாற்றும் வகையில் தேசிய தினத்திற்கு மறுநாள் நடந்த சம்பவம் இரு குடும்பங்களின் நட்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இரவு 10 மணிக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட பிரசவ வலியால் துடித்த திருவாட்டி நூர் அமலினா முகமது இஸ்மாயில், 34, மருத்துவமனைக்குச் செல்ல நேரமில்லாத காரணத்தால் தமது கணவர், அண்டைவீட்டார் ஆகியோரின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) வீட்டிலேயே தமது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

பிற்பகல் முதலே லேசான பிரசவ வலியை அனுபவித்ததாகக் கூறிய அவர், அடுத்த நாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், தமது இரு மகள்களையும் அண்டைவீட்டாரின் பராமரிப்பில் விட்டுச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மூன்றாவது குழந்தையின் பிறப்பு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னரே, பிரசவ வலி ஏற்பட்டதால் தாம் பதற்றமடைந்ததாகக் கூறிய அவர், அந்த நேரத்தில், மருத்துவமனை சென்றடைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்ததாகச் சொன்னார்.

“என் பெற்றோர் வெளிநாட்டில் இருந்தனர். என் சகோதரியும் இரவு 11 மணிக்குப் பிறகே வர இயலும் எனக் கூறியிருந்தார். நாங்கள் உதவிக்கு யாருமின்றி தனியாக இருந்ததைப்போல் உணர்ந்தோம்,” என்று களப் பொறியாளராகப் பணிபுரியும் அமலினாவின் கணவர், திரு சுக்ரி பக்தியர் முகமது சுல்கிஃப்லி, 40, கூறினார்.

சம்பவத்தன்று, அவர்களது அண்டைவீட்டில் வசிக்கும் திருவாட்டி லத்தாஷ்னி கொபி நாதன், 35, அவரது கணவர் திரு பிரதாப் சல்குனான், 37, ஆகியோர், அவர்களுடைய தோழி திருவாட்டி சங்கீதா நீலா செல்வகுமாருடன், 37, இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், சுக்ரி உதவிக்காக லத்தாஷ்னி வீட்டின் கதவைத் தட்டினார்.

2023 முதல் பொங்கோல் அடுக்குமாடி கட்டடத்தில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள்.
2023 முதல் பொங்கோல் அடுக்குமாடி கட்டடத்தில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள். - படம்: சுக்ரி பக்தியர் முகமது சுல்கிஃப்லி

மூத்த தகவல் தொடர்பு மேலாளராகப் பணிபுரியும் லத்தாஷ்னி, உதவிக்கரம் நீட்டச் சென்றபோது, அமலினா கதவின் அருகே பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்ததை அவர் கண்டார்.

“முதலில், மருத்துவமனைக்குச் செல்ல இயலும் என்று நினைத்தேன். ஆனால், அவர் நகர முடியாததைப் பார்த்ததும் நாங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தோம்,” என்றார் அவர்.

பிரசவ காலத்தில் செய்ய வேண்டிய அவசர மருத்துவ வழிமுறைகளை அறிந்திருந்த சுக்ரி, தமது மனைவிக்கு அவற்றைச் செய்யத் தொடங்கினார். அதே நேரத்தில், லத்தாஷ்னியும் சங்கீதாவும் இணைந்து அமலினாவின் முதுகை தேய்த்தபடி அவருக்கு ஆதரவாக இருந்தனர். அதற்கிடையில், சத்தம் கேட்டு விழித்த தம்பதியினரின் ஆறு வயது மூத்த மகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர்.

“எல்லாம் கனவுபோல் இருந்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்திற்கு நாங்கள் தயாராக இல்லாதிருந்தபோதிலும், பதற்றமடையாமல் நாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதை கவனத்துடன் செய்தோம்,” என்றார் சங்கீதா.

சுமார் 15 நிமிடங்களில், இரவு 10.30 மணிக்கு, அமலினா தமது கணவரின் உதவியுடன் தங்கள் மூன்றாவது மகளைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் வந்தடைந்த மருத்துவ உதவியாளர்கள் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதிசெய்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அமலினா அழைத்துச் செல்லப்பட்டார். லத்தா‌ஷ்னியும் சங்கீதாவும் அவரின் வீட்டைச் சுத்தம்செய்து, அவருடைய மற்ற இரு பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டனர்.

“இது அண்டத்தின் ஆகப் பெரிய ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய லத்தா‌ஷ்னி, இரு குடும்பங்களும் எப்போதும் நெருக்கமாகப் பழகியதாகத் தெரிவித்தார். இந்த அனுபவம் இரு குடும்பங்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது என்றார் அவர்.

திருவாட்டி அமலினாவின் குழந்தையைக் கைகளில் அணைத்திருக்கும் திருவாட்டி லத்தாஷ்னி கொபி நாதன்.
திருவாட்டி அமலினாவின் குழந்தையைக் கைகளில் அணைத்திருக்கும் திருவாட்டி லத்தாஷ்னி கொபி நாதன். - படம்: லத்தாஷ்னி கொபி நாதன்

இரு குடும்பங்களும் கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு முன்பு இந்தக் குடியிருப்பு கட்டடத்துக்குக் குடிபெயர்ந்தனர். அன்றுமுதல் இன்றுவரை நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.

“நடைபாதையை ஒன்றாக அலங்கரிப்பதும் பண்டிகைகளைச் சேர்ந்து கொண்டாடுவதும் எங்கள் வழக்கம். இருப்பினும், இந்த அனுபவம் எங்கள் உறவை முற்றிலும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் பரபரப்பான சூழலில் அண்டைவீட்டாரின் நட்புறவின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் நினைவூட்டியதாகவும் அவர் சொன்னார்.

“அன்றிரவு எனக்கு அளவில்லா நம்பிக்கையைத் தந்தது. சில நேரங்களில் நம்மால் ஒரு காரியத்தைச் செய்ய முடியாது என்று நினைப்போம். ஆனால், இச்சம்பவம் போன்று எதிர்பாராமல் நடக்கும் ஒன்றைச் சமாளிக்க முடிந்தால், நம்மால் வாழ்க்‌கையில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன்,” எனச்சங்கீதா கூறினார்.

“அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் எங்களுக்குத் துணையாக இருந்தனர். இன்றைய உலகில் எல்லோரும் அவ்வளவு அக்கறையுடன் செயல்படுவதில்லை,” என நெகிழ்ச்சியுடன் கூறினார் அமிலினா.

அண்டைவீட்டாரான திருவாட்டி அமலினாவும் திருவாட்டி லத்தாஷ்னியும்.
அண்டைவீட்டாரான திருவாட்டி அமலினாவும் திருவாட்டி லத்தாஷ்னியும். - படம்: சுந்தர நடராஜ்

“என் குழந்தைக்கு நானே பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்படும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், எங்கள் அண்டைவீட்டாரின் ஆதரவு இருந்ததால் அது பிரச்சினையில்லாமல் நடந்தது. நாங்கள் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்,” எனச் சுக்ரி கூறினார்.

அண்மையில், புதிதாகப் பிறந்த தங்களது மகளுக்கான ‘காட்மாம்’ (Godmom), ‘காட்ஃபாதர்’ (Godfather) பட்டங்களை, தம்பதியினர் முறையே லத்தாஷ்னிக்கும் பிரதாப்பிற்கும் வழங்கினர்.

“இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இவர்களைப் பிரிந்து சிங்கப்பூரில் வேறு எங்கும் வாழ்வதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது,” என்று பிரதாப் புன்னகையுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்